பெரியாரைச் சுற்றிச் சுழன்ற என்.டி.டி.வி. தமிழ்நாடு விவாதம் – பறவைப் பார்வை
என்.டி.டி.வி தொலைக்காட்சி நடத்திய தமிழ்நாட்டு அரசியல் தொடர்பான சிறப்பு நிகழ்ச்சி சென்னையில் இரு நாள்களுக்கு முன் நடைபெற்றது. இதில் தமிழ்நாட்டின் முதலமைச்சர், துணை முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர், பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரமுகர்கள் பங்கேற்றனர். கேள்விகளும், பதில்களும் தந்தை பெரியாரைச் சுற்றிச் சுற்றியே வந்து கொண்டிருந்தன.

தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, தமிழ்நாடு வளர்ச்சியை நோக்கிய ஒரு நாகரிக அரசியலைக் கொண்டிருக்கிறது. தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், ஏன் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா அம்மையார் உள்ளிட்டோர் அதைத் தான் விரும்பினார்கள்; செய்தார்கள். அந்த வகையில் யாரும் அரசியலுக்கு வரலாம் என்று தெரிவித்தார்.
அடுத்து கேள்வியைத் தொடுத்த என்.டி.டிவி.யின் வீரராகவன், ‘‘திராவிட மாடலுக்கு உரிமை கோரும் நீங்கள், தொடர்ந்து இந்த ‘வளர்ச்சி அரசியல்’ நடப்பதாகச் சொல்வதன் மூலம் அதிமுக-வையும் இதில் இணைத்துக் கொள்கிறீர்களா?” என்று கேட்டார்.
“தந்தை பெரியார் கண்ட கொள்கையை, அவரது கனவை, 2 ஆண்டுகள் ஆட்சியிலிருந்து அண்ணா செய்தார். 50 ஆண்டுகள் தலைவர் கலைஞர் முன்னின்று நடத்தினார். திராவிட மாடலுக்கு தி.மு.க. தான் முன்னோடி. அதை அடுத்து வந்தவர்கள், எங்கள் தேர்தல் அறிக்கையை காப்பி எடுப்பது போல, செயல் பாடுகளையும் காப்பி எடுத்துக் கொண்டால் எங்களுக்கு மகிழ்ச்சியே!” என்று கூறினார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

மருத்துவர் ஹபிசுல்லா
உண்மையில் திராவிட முன்னேற்றக் கழகம் ‘திராவிட மாடல்’ என்று சொல்லும்போது, தங்களுக்கும் அதில் பங்கு இருப்பதாக அ.தி.மு.க.வும் உரிமை கோரியிருக்க வேண்டும். அதை எப்போதும் யாரும் மறுப்பதில்லை. இடஒதுக்கீட்டுக்கு 9000 ரூபாய் வருமான வரம்பாணையில் பெற்ற பாடத்தின் காரணமாக, அதை ஈடுகட்டும் வகையில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50% இடஒதுக்கீடு வழங்கிய எம்.ஜி.ஆர். ஆட்சியையும், 69% இடஒதுக்கீட்டைக் காக்க திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அறிவுரையை ஏற்று சட்டமியற்றி அதனைக் காத்த ஜெயலலிதா அவர்களின் ஆட்சியையும் காட்டி, தாங்கள் நீதிக்கட்சியின், அண்ணாவின் வழித்தோன்றல்கள் என்று அதிமுக உரிமை கோரியிருக்க வேண்டும்.
என்ன செய்ய…? அதற்கெல்லாம் கொஞ்சமேனும் கொள்கை தெரிந்தவர்கள் அங்கிருக்க வேண்டுமே! அமித்ஷா பிடியிலிருக்கும் அ.தி.மு.க.விடம் இதையெல்லாம் நாம் எதிர்பார்க்க முடியுமா? ஆனால், அந்தத் தொடர்ச்சி அறுந்துவிடாமல், தொங்கிக் கொண்டிருந்த சங்கிலியையும் கொஞ்சம் தொட்டுக்காட்டிய அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் பேச்சு நாகரிகமான திராவிட அரசியலாக இருந்தது.
நாடாளுமன்றத்திலேயே தமிழ்நாட்டு எம்.பி.க்கள் அம்பலப்படுத்திய ‘வந்தே மாதரம்’ பாடலை மேடையில் அரங்கேற்றி சில்மிஷம் செய்தது என்.டி.டி.வி நிர்வாகம்.
அன்று மாலை நேரத்தில், காந்தியார் படுகொலையைக் குறித்து, அவரைச் சுட்ட குண்டுகள் மறுசுழற்சியில் மீண்டும் காந்தியார் விரும்பியவாறு ஏழைகள் வீட்டில் உணவு படைக்க உதவும் சமையல் பாத்திரமாக மாறுவது போன்ற உருவகத்துடன், செயற்கை நுண்ணறிவுக் காட்சிகளின் துணை கொண்டு மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இயக்கியிருந்த ஆவணப்படம் திரையிடப் பட்டது. படத்தின் இறுதியில் திரையில் தோன்றிய கோபாலகிருஷ்ண காந்தி, “காந்தியை, அவர் பயணத்தை அந்த மூன்று தோட்டாக்கள் தடுக்கவில்லை. காந்தி தான் அவை மேலும் செல்வதைத் தடுத்தார்” என்று குறிப்பிட்டு, ‘வெறுப்பு’, ‘அச்சம்’, ‘பொய்மை’ என்னும் அந்த மூன்று தோட்டாக்களை நாமும் தடுப்போம்’’ என்று நிறைவு செய்தார். படத்தை இயக்கிய கமல்ஹாசன் அடுத்து உரையாடலில் கலந்து கொண்டார்.
“மனிதர்கள் மரிப்பார்கள்; ஆனால் சிந்தனைகள் மரிப்பதில்லை. காந்தி ஒரு மனிதர். ஆனால் அவர் சிந்தனைகள் வாழுகின்றன. பிரபலங்களையும் புகழ்பெற்றோரையும் விரும்பிப் பின்பற்றும் இன்றைய இளைஞர்களால், புகழ்பெற்ற மனிதர்களிடமிருந்து அவர்களின் சிந்தனைகளைப் புரிந்து கொள்ள முடியுமா?’’ என்ற ஒருங்கிணைப்பாளரின் கேள்விக்கு கமல்ஹாசன், ‘‘சினிமாவைப் பற்றியும் அப்படித்தான் சொல்வார்கள். காந்திக்குச் சினிமா பிடிக்காது. அடுத்து என்னுடைய விருப்பமானவரான, காந்தியைப் போன்றவரான பெரியாருக்கும் சினிமா பிடிக்காது. ஆனால், அது அவர்களை விரும்புவதற்கு எனக்குத் தடையாக இல்லை. ஏனெனில், நான் அவர்களை மனிதர் களாகப் பார்க்கவில்லை. அவர்களின் சிந்தனைகளைப் பார்க்கிறேன். அவர்களின் நோக்கங்களுக்காக விரும்புகிறேன்” என்றார்.
நிகழ்வின் இறுதியில் ஒரு வசனமோ, பாடலோ சொல்லுங்கள் என்று கமலஹாசனிடம் கேட்ட ஒருங்கி ணைப்பாளரிடம், “அரசுகள் வீழும்; எழும். நாடு நகர்ந்து கொண்டே யிருக்கும் நாளையை நோக்கி! நான் இந்நாட்டின் குடிமகன். அந்த நாளே நமதாக வேண்டும்!” – என்ற வரிகளை ஆங்கிலத்திலும், தமிழிலும் சொன்னார் கமல்ஹாசன்.
இதனை அப்படியே ஹிந்தியில் சொல்ல முடியுமா? என்று நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர் கேட்டதும், “அதை டில்லியில் சொல்கிறேன். இங்கிருக்கிற என் மக்களுக்கு இதுவே புரியும்!” என்று கமல் சொல்ல அரங்கம் கை தட்டலில் அதிர்ந்தது.
மற்றொரு விவாதத்தில், எப்போதும் வெறுப்பை உமிழும் பா.ஜ.க. தலைவர் ஒருவர் உடல் நலிவுற்று மயங்கிச் சரிய, உடன் சென்று உதவியவர்கள் அதுவரை அவருடன் விவாதித்துக் கொண்டிருந்த தி.மு.க.-வின் தரணிதரணும், காங்கிரசின் லெட்சுமியும் தான். அவருக்கு முதலுதவி செய்தனர். திமுகவின் மருத்துவர் ஹபிசுல்லா சிகிச்சையை மேற்கொண்டார்
மதங்களையும், வெறுப்பரசி யலையும் புறந்தள்ளி, மனிதநேயம் எல்லோரையும் இயக்கியுள்ளது
பெரியார் தமிழ்நாட்டு அரசியலின் மய்யம்! அரங்கம் முழுவதும் அதுதான் எதிரொலித்தது.
– சமா.இளவரசன்
