மும்பை, ஜன.29 இந்தியாவிலிருந்து நூற்றுக்கணக்கான செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பம் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தற்போது அமெரிக்காவிற்குத் தங்கள் தளத்தை மாற்றி வருகின்றன.
கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட இந்திய ஏஅய் நிறுவனங்கள் அமெ ரிக்காவிற்கு இடம்பெயர்ந்துள்ளது தொழில்துறையினரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இடம்பெயர்வுக்கான முக்கிய காரணங்கள் திறமைவாய்ந்த பணியாளர்கள் இந்தியாவிற்குத் திரும்பும் போக்கு ஒருபுறம் இருந்தாலும், நிறுவனங்கள் அமெரிக்காவைத் தேர்ந்தெடுக்கப் பல வலுவான கார ணங்கள் உள்ளன.
முதலீட்டு வாய்ப்புகள்
அமெரிக்காவில் ஏஅய் தொழில் நுட்பத்தில் முதலீடு செய்யத் துணிகர முதலீட்டு நிறுவனங்கள் (Venture Capitalists) அதிக ஆர்வம் காட்டுகின்றன. அங்கு நிதி கிடைப்பது இந்தியாவை விட எளிதாகவும், விரைவாகவும் உள்ளது.
இந்திய ஸ்டார்ட்அப்களின் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர். வணிகத் தேவைகளுக்காகவும், வாடிக்கையாளர்களை எளிதில் அணு கவும் அங்கேயே தளம் அமைப்பது அவசியமாகிறது.
ஏஅய் ஆய்வாளர்கள், வழிகாட்டிகள் மற்றும் ஊக்குவிக்கும் நிறுவனங்கள் நிறைந்த முதிர்ச்சியான தொழில்நுட்ப சூழல் அங்கு நிலவுகிறது.
புதிய ஏஅய் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதற்கும், அதற்காகப் பெருமளவு நிதியைச் செலவிடுவதற்கும் அமெரிக்க நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றன. இடம்பெயரும் இந்திய நிறுவனங்களின் முதல் தேர்வாக சான் பிரான்சிஸ்கோ நகரம் உள்ளது. இது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) தொழில்நுட்பத்தின் தலைநகராகக் கருதப்படுவதால், அங்கு நிலவும் போட்டி மற்றும் வாய்ப்புகள் இந்தியத் தொழில்முனைவோரை வெகுவாகக் கவர்ந்துள்ளன.
‘‘வணிக வளர்ச்சிக்காகவும், உலகத்தரம் வாய்ந்த முதலீட்டாளர்களைச் சந்திப்பதற்காகவுமே நாங்கள் அமெ ரிக்காவை நோக்கி நகர்கிறோம்,’’ எனப் பல ஸ்டார்ட்அப் நிறுவனர்கள் தெரி வித்துள்ளனர்.
