புதுடில்லி, ஆக.1- முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிக்கு நான்கு வாரங்களுக்குள் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு நேற்று (31.7.2025) மீண்டும் விசாரித்தது.
இந்த விவகாரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நீதிபதிகள் கேட்டனர். அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர்கள் சேகர் நாப்தே, உமாபதி ஆஜராகி, ‘முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணி களுக்காக 15 மரங்களை வெட்டும் அனுமதிக்கான முடிவை ஒன்றிய அரசு எடுக்கவில்லை’ என வாதிட்டனர்.
கேரள அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஜெய்தீப் குப்தா, ‘முல்லைப் பெரியாறு அணை பராமரிப்பு பணிகளுக்காக 15 மரங்களை வெட்டும் இசைவை கேரளா வழங்கி உள்ளது. அணைப்பகுதியில் உள்ள வல்லக்கடவு- முல்லைப் பெரியார் காட்டுச்சாலையை செப்பனிடும் பணியை அடுத்த பருவ மழைக்கு முன் அதாவது செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், ‘முல்லைப்பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக 15 மரங்களை வெட்ட கேரள அரசு வழங்கியுள்ள அனுமதியை பரிசீலித்து, சுற்றுச்சூழல் அனுமதியை ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டது.
மேலும் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் உள்ள வல்லக்கடவு- முல்லைப் பெரியார் காட்டுச்சாலையை செப்பனிடும் பணியை அடுத்த பருவ மழைக்கு முன் மேற்கொள்ளவும் கேரளாவுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.