அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள் நம்மை ஆள அனுமதிக்க மாட்டோம்! ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே பிரகடனம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு

viduthalai
7 Min Read

மராட்டியத்தில் ஹிந்தி எதிர்ப்பு காட்டுத் தீயாக உருவெடுக்கிறது

மும்பை, ஜூலை 6 மராட்டியத்தில் இந்தி எதிர்ப்பு காட்டுத் தீயாக உருவெடுக்கிறது. அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள்  நம்மை ஆள அனுமதிக்க மாட்டோம்! என ராஜ் தாக்கரே, உத்தவ் தாக்கரே ஆகியோரின் இணைந்த பிரகடனத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பள்ளிகளில் மராட்டிய மொழியை பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹிந்தியை அங்கு கொண்டுவர திட்டமிட்ட  மகாராட்டிரா அரசாங்கத்தின் நடவ டிக்கையை எதிர்த்து நடந்த பேரணியின் போது உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே  சுமார் 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஒன்று சேர்ந்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு

ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஒன்றாக இணைந்த தாக்கரே சகோதரர்களின் முடிவை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார்.

ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கையின் கீழ் மகாராட்டிரா அரசு ஹிந்தி மொழி  பள்ளிகளில் கட்டாயம் சேர்க்கப்படும் என்று கூறியிருந்தது,

இதற்கு மகாராட்டிரா முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. உடனே ‘‘தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைக்குப் பின்பு மொழி வல்லுநர்களையும் கலந்தாலோசித்து மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப அரசு முடிவெடுக்கும்’’ என்று  கூறப்பட்டது.

பள்ளிகளில் ஹிந்தி கட்டாயம்

அதன் பிறகு அமைதியாக இருந்த முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் சரியாக பள்ளி துவங்கும் போது (ஏப்ரல் மாதம்), மாநில அரசு தரப்பில் ஓர் அரசாணை (GO) வெளியிட்டு, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஹிந்தி மூன்றாவது மொழியாக கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார்.

இதனை அடுத்து மகாராட்டிரா மக்களிடையே கடுமையான எதிர்ப்பலை எழுந்தது, அத்தோடு அல்லாமல் மகாராட்டிர அரசின் மராட்டி மொழி வளர்ச்சி குழுமத்தின் தலைவரும் தனது கண்டத்தை தெரிவித்தார். பின்னர், ஜூன் 17 அன்று, மாநில அரசு மாற்றியமைக்கப்பட்ட அரசாணையை வெளியிட்டு, ‘ஹிந்தி கட்டாயம்’ என்ற வார்த்தையை நீக்கி, 20 மாணவர்கள் சேர்ந்து ஒரு மொழியை தேர்ந்தெடுத்தால் வேறு மொழியை தேர்வு செய்யும் வாய்ப்பை வழங்கியது. அப்படி இல்லை என்றால் ஹிந்தி கட்டாயம் படிக்கவேண்டும் என்று கூறியது.

மகாராட்டிரா அரசின் ஹிந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப் படுத்தும் முயற்சிக்கு எதிர்ப்பு வலுத்து வந்தது. மும்பை நகராட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் சிவசேனா (ஷிண்டே) ஆகியவற்றுடன் கூட்டணி வைத்திருக்கும் மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (MNS) இந்த முடிவை கடுமையாக எதிர்த்தது.

மாநில அரசு கொடுத்த விருது வேண்டாம்

இந்த விவகாரம் மேலும் எதிர்ப்பு களைத் தூண்டியுள்ளது. 2021-இல் மாநில விருது பெற்ற கவிஞர் ஹேமந்த் திவாடே, ஹிந்தியை ‘திணிப்பதற்கு’ எதிர்ப்பு தெரிவித்து தனது விருதை திருப்பி அளிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

மாநிலத்தில் எந்த வடிவில் ஹிந்தி திணிப்பு வந்தாலும் அதை கடுமையாக எதிர்ப்போம் என்று பாலசாகேப் சிவசேனா(உத்தவ்தாக்கரே) கூறியது.  இந்த நிலையில் மகாராட்டிரா மாநில நவநிர்மான் சேனா தலைவர் ராஜ்தாக் கரேவும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்.

போரட்ட அறிவிப்புக்குப் பிறகு
திரும்பப் பெற்றனர்

ஜூன் இறுதிவாரம் இருவரும் இணைந்து ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று அறிவித்தனர்.

இவர்கள் இவ்வாறு அறிவித்த சில மணி நேரத்தில் மகாராட்டிரா முதலமைச்சரான தேவேந்திர பட்னவிஸ் உடனடியாக ஹிந்தி திணிப்பை திரும்பப்பெறுகிறோம் என்று கூறினார்.

ஆனால் ‘‘இந்த முடிவில் பெருந்த சந்தேகம் உள்ளது. இதே போல் மூன்று முறை கூறி மீண்டும் ஹிந்தி திணிப்பை  தொடர்ந்து செய்கிறார்கள்,. ஆகவே ஹிந்திக்கு எதிராக எங்கள் பேரணி 05.07.2025 அன்று கட்டாயம் நடக்கும்’’ என்று கூறினர்.

மகாராட்டிர அரசின் முடிவுக்கு எதிர்ப்பு

இந்த நிலையில் நேற்று (5.7.2025) அன்று  மும்பை ஒர்லி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில், சிவசேனா (உத்தவ் பால்தாக்கரே பிரிவு) தலைவ ரும், மகாராட்டிரா நவநிர்மாண் சேனா (எம்என்எஸ்) தலைவரும், மகாராட்டிராவில் தொடக்கப் பள்ளிகளில் ஹிந்தியை மூன்றாவது மொழியாக அறிமுகப்படுத்தும் விதமாக, தற்போது ரத்து செய்யப்பட்ட, பாஜக தலைமையிலான மகாயுதி அரசின் முடிவை கடுமையாகத் தாக்கிப் பேசினர்.

அடிமைகள் நம்மை ஆள்வதா? அடிமைகள்  நம்மை ஆள ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என ராஜ் தாக்கரே – உத்தவ் தாக்கரே ஆகியோர் இணைந்து போர் பிரகடனம் செய்தனர்.

கூட்டத்தில் உரையாற்றிய ராஜ் தாக்கரே, பாஜக மூன்று மொழிக் கொள்கை  சூத்திரத்தை கல்வி சீர்திருத் தத்திற்குப் பதிலாக “அரசியல் கருவியாக” பயன்படுத்துகிறது என்று அவர்கள்மீது குற்றம் சாட்டினார்.

“அவர்கள் தேவையில்லாமல் (ஹிந்தியை) எங்கள் மீது திணிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் மகாராட் டிராவின் மற்றும் மராத்தி மக்களின் சக்தியைக் கண்டனர். அதனால்தான் அவர்கள் அரசு ஆணைகளை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது,” என்று ராஜ் தாக்கரே கூறினார். “சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் பாஜகவுக்கு அதிகாரம் இருக்கலாம், ஆனால் தாக்கரேக்களுக்கு தெருக்களில் அதிகாரம் உள்ளது, அதை அவர்கள் இப்போது கண்டனர்.” என்றார்.

உத்தவ்வும் பாஜக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராட்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆகியோரைத் தாக்கிப் பேசினார். அவர்களைப் பிளவுபடுத்தும் தந்திரங் களைப் பயன்படுத்துவதாகவும், மகாராட் டிராவின் நலன்களுக்குத் துரோகம் செய்வதாகவும் அவர்கள்மீது குற்றம் சாட்டினார்.

ரத்தத்தால் பரிசோதிக்க வேண்டும்

“மும்பை மராத்தி மக்களின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது. இப்போது, சிலர் (பாஜகவில்) ‘நாங்களும் மராத்தியர்கள் இல்லையா?’ என்று கூறுகிறார்கள். நீங்கள் பெயரால் மட்டுமே மராத்தியர்கள் ஆனால் நீங்கள் மராத்தியர்களா என்பதை உறுதிப்படுத்த உங்கள் ரத்தத்தைப் பரிசோதிக்க வேண்டியிருக்கலாம்,” என்று உத்தவ் கூறினார், பாஜக மகாராட்டிராவின் உண்மையான போராட்டங்களில் ஒரு போதும் இல்லை என்று உத்தவ் தாக்கரே கூறினார்.

மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது

தாக்கரே சகோதரர்களின் பேரணி குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது  எக்ஸ் தளத்தில் பதிவிட்டதாவது: “ஹிந்தி திணிப்பைத் தோற்கடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திய மொழி உரிமைப் போராட்டம், இப்போது மாநில எல்லைகளைத் தாண்டி மகாராட் டிராவில் ஒரு போராட்டப் புயலாகச் சுழன்றடிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேலும் அப்பதிவில் “ஹிந்தி திணிப்புக்கு எதிராக,  மும்பையில் சகோதரர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற வெற்றிக் கூட்டத்தின் உற்சாகமும், ஆற்றல் மிக்க சொற்பொழிவும் எங்களுக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது” என்றார்.

மக்கள் கிளர்ச்சியால் பின் வாங்கினர்

பாஜகவை கிண்டல் செய்து, “சட்டவிரோதமாகவும், அராஜகமாகவும்” செயல்படுவதாக மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டினார். “தமிழ்நாடு பள்ளிகளில் ஹிந்தி மூன்றாவது மொழியாகக் கற்பிக்கப்பட்டால் மட்டுமே நிதி ஒதுக்கப்படும் என்று கூறி சட்டவிரோதமாகவும், அராஜகமாகவும் செயல்படும் பாஜக, அவர்கள் ஆளும் மகாராட்டிராவில் மக்களின் கிளர்ச்சிக்கு அஞ்சி இரண்டாவது முறையாகப் பின்வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளது,” என்று அவர் கூறினார்.

“ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை முழுநேரமும் ஊக்குவிப்பதை முன்னுரிமையாகக் கொண்ட ஒன்றிய அரசுக்கு,  ராஜ்தாக்கரே எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலில்லை என்பது எனக்கு நன்றாகத் தெரியும்: ‘உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் கற்பிக்கப்படும் மூன்றாவது மொழி எது?’ மற்றும் ‘ஹிந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கியுள்ளன – முன்னேற்றப் பாதையில் உள்ள ஹிந்தி அல்லாத மாநிலங்களின் மக்கள் மீது ஹிந்தியை ஏன் திணிக்கிறீர்கள்?'”

பழி வாங்கும் நிலைப்பாடு மாறுமா?

ஒருங்கிணைந்தத் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா அபியான்) கீழ் ரூ. 2,152 கோடி நிதியை தமிழ்நாட்டுக்கு வெளியிடுவதில் ஒன்றிய அரசின் “பழிவாங்கும் நிலைப்பாட்டை” மாற்றுமா என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார், இது தமிழ்நாட்டில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை மூன்று மொழி கொள்கையின் போர்வையில் திணிக்கும் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால் மட்டுமே கிடைக்கும்’’ என்பதை அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ்நாட்டில் ஹிந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை விளக்கிய மு.க.ஸ்டாலின், மாநில மக்களின் நிலைப்பாடு “இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தைப் பாதுகாப்பது” தொடர் பானது என்றும், அது “வெறுப்பால் உந்தப் பட்டது” அல்ல என்றும் குறிப்பிட்டார்.

மக்களின் எழுச்சிக்குப் பிறகாவது கண்களைத் திறப்பார்களா?

“ஹிந்தி திணிப்பால் அழிக்கப்பட்ட ஏராளமான இந்திய மொழிகளின் வரலாற்றை அறியாமல், இந்தியாவை ஹிந்தி நாடாக மாற்றும் திட்டத்தைப் புரிந்து கொள்ளத் தவறிய சில அப்பாவி நபர்கள் இங்கே ‘ஹிந்தி கற்றுக் கொண்டால் வேலை கிடைக்கும்’ போன்ற சொற்றொடர்களைப் பேசுகிறார்கள். அவர்கள் இப்போது சீர்திருத்தப்பட வேண்டும். மகாராட்டிராவில் ஏற்பட்ட எழுச்சி அவர்களின் அறிவுக் கண்களைத் திறக்கும்,” என்று மு.க. ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

பாஜகவுக்கு ஒரு எச்சரிக்கையாக,   “பாஜக, தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இழைத்த துரோகத்திற்குப் பரிகாரம் தேட வேண்டும். செய்ய வேண்டும். இல்லையெனில், தமிழ்நாடு மீண்டும் பாஜகவுக்கும், அதன் புதிய கூட்டாளிகளுக்கும் மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்கும்!” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *