புதுடில்லி, ஏப்.2 இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழ்நாடு எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் வலியுறுத்தினர்.
மக்களவையில் நேற்று (1.4.2025) இந்த விவகாரத்தை தி.மு.க. குழுத் தலைவர் டி.ஆர். பாலுவும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதியும் எழுப்பினர்.
டி.ஆர். பாலு
இலங்கைக் கடற்படையினரால் பிடிபடும் இந்திய மீனவர்கள் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு அரசு அவ்வப்போது ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதி வருகிறது. கடந்த பிப்ரவரி 18 இல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் எனக்கு எழுதிய கடிதத்தில் 2024, டிசம்பர் 15-17 ஆகிய தேதிகளில் இலங்கை அதிபர் திசாநாயக அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்தபோது, தமிழ்நாடு மீனவர்கள் மனிதாபிமான முறையில் நடத்தப்படுவதையும், பலப்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் பிரதமர் மோடி வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்படும் இந்திய மீனவர்களை விடுவித்து, அவர்களுடைய படகுகளை திருப்பி அனுப்பவும், அடுத்த கட்ட மீனவர் பேச்சுவார்த்தையை கூட்டவும் இலங்கை அதிபரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக அந்தக் கடிதத்தில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
உறுதிப்படுத்தினார்
ஆனால், அவர் கடிதத்தில் தெரிவித்த விஷயங்கள் கள எதார்த்தத்துடன் முரண்படுகின்றன. இதே தகவலை சமீபத்தில் என்னுடன் கலந்துரையாடிய ராமேசுவரம் மீனவர் சங்கத் தலைவரும் உறுதிப்படுத்தினார்.
கடந்த ஆறு மாதங்களாக 20 மீனவர்கள் இலங்கை சிறையில் உள்ளனர். இது தவிர ராமேசுவரம், புதுக்கோட்டை மற்றும் பிற இடங்களில் இருந்து 70-க்கும் மேற்பட்ட மீனவர்கள் பல்வேறு சிறைகளில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரதமர் மோடி விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளபோது அந்நாட்டு அதிபருடன் இதுகுறித்து பேசி, நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
இலங்கை, இந்திய – தமிழ்நாடு மீன வர்களுடனும், இரு நாட்டு அரசுகளின் பிரதிநிதிகளுடனும் நீடித்த அமைதி ஏற்பட ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்றார்.