பெங்களூரு, மார்ச் 14 விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை அமைக்கும் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் செயல்படுத்த உள்ளது. அத்துடன் சந்திரயான்-4 உள்ளிட்ட திட்டங்களும் இஸ்ரோவின் பட்டியலில் இருக்கிறது.
செயற்கைகோள்
மிகப்பெரிய இந்தத் திட்டங்களுக்காக விண்ணில் செயற்கைக்கோள்களை ஒன்றாக இணைக்கும் (ஸ்பேடெக்ஸ்) நவீன தொழில் நுட்ப ஆய்வு அதாவது ‘விண்வெளி டாக்கிங் பரிசோதனை’க்காக இஸ்ரோ ‘சேசர்’ (ஸ்பே டெக்ஸ்-ஏ), ‘டார்கெட்’ (ஸ்பேடெக்ஸ்-பி) என்ற இரண்டு செயற்கைக்கோள்களை கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி விண்ணில் செலுத்தியது.
அதன்பின், பல கட்ட முயற்சிகளுக்குப்பின் கடந்த ஜனவரி 16-ஆம் தேதி விண்ணில் வைத்தே இந்த 2 செயற்கைக்கோள்களையும் ஒன்றாக இணைத்தது. இதன்மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவை தொடர்ந்து விண்வெளி டாக்கிங் செய்த 4-ஆவது நாடு என்கிற பெருமையை இந்தியா பெற்றது.
இதற்கிடையே, விண்வெளியில் ஒன்றாக இணைக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள்களை தனித்தனியாகப் பிரித்து ஒன்றிணைக்கும் பணிகளை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இப்பணி வரும் 15-ஆம் தேதி தொடங்கும் என இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்திருந்தார். விண்வெளி ஆராய்ச்சியில் இது ஒரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
வெற்றி
இந்நிலையில், விண்வெளியில் செயற்கைக் கோள்களைப் பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என இஸ்ரோ அறிவித்தது.
இதுதொடர்பாக ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் வெளியிட்ட எக்ஸ் வலைதள பதிவில், செயற்கைக்கோள்களை பிரிக்கும் ஸ்பேடெக்ஸ் திட்டம் வெற்றி பெற்றுள்ளது என்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒவ்வோர் இந்தியனுக்கும் இந்த நிகழ்வு மன மகிழ்ச்சியை அளிக்கிறது.
வருங்காலத்தில் பாரதீய அந்திரிக்சா நிலையம், சந்திரயான்-4 மற்றும் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களை எளிதில் மேற்கொள்ள வழியேற்படுத் தும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
மகாராட்டிராவில் வெடித்த
மொழிப் போர்
மும்பையில் உள்ள ஏர்டெல் நிறுவனத்தில், மராத்தியில் பேசிய வாடிக்கையாளரிடம் ஹிந்தியில் பதிலளித்துள்ளார் ஊழியர். இதனையடுத்து, மராத் தியில் பேசுமாறு கூறிய அவரிடம், ‘நான் ஏன் மராத் தியில் (தாய் மொழி) பேச வேண்டும். எனக்கு மராத்தி தேவையில்லை’ என அந்த ஊழியர் வாக்குவாதம் செய்திருக்கிறார். இந்த காட்சிப் பதிவு வைரலான நிலையில், மகாராட்டிராவில் பணிபுரிபவர்களுக்கு மராத்தி தெரிந்திருக்க வேண்டும் என குரல் எழுந்துள்ளது.
இந்தியாவில் அழியும் மொழிகள்
உலகில் அதிக மொழிகள் பேசப்படும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், கடந்த 50 ஆண்டு களில், இங்கு பேசப்பட்டு வந்த மொழிகளில் 220 அழிந்துவிட்டதாக Central Institute of Indian Languages கூறுகிறது. மேலும், 197 மொழிகள் அழிந்து வருவதாக யுனெஸ்கோ தெரிவித்துள்ளது. இத்தனை மொழிகள் வேகமாக அழிவதற்கு ஹிந்தியின் ஆதிக்கமே காரணம் என்று விமர்சிக்கப்படுகிறது.
பிரசவ மரணம் சுழியம்!
தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு, சிசு இறப்பு விகிதம் சுழியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். 2020-2021ஆம் ஆண்டில் 1 லட்சம் மகப்பேறுகள் நடந்தால், அதில் 73 சதவீதம் என்ற அளவிலிருந்த இறப்பு விகிதம், 2024-2025இல்
39 சதவீதம் ஆக குறைந்துள்ளது. 2020-2021இல் 1,000 குழந்தைகள் பிறந்தால் 9.7 சதவீதம் என்ற நிலையி லிருந்த சிசு இறப்பு விகிதம், தற்போது 7.7 சதவீதம் ஆகக் குறைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு
கடன் வாங்குவது ஏன்?
ஜெயரஞ்சன் விளக்கம்
கடன் என்பது பட்ஜெட்டின் ஒரு செயல்முறை என மாநில திட்டக் குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் கூறியுள்ளார். பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்ட பிறகு பேசிய அவர், மாநிலத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவே அரசு கடன் வாங்குவதாகவும், அதுவும் RBI விதிகளுக்கு உட்பட்டே நடப்பதாகவும் தெரிவித்தார். மேலும், ஒன்றிய அரசு முறையாக நிதியை வழங்கினால் கடனுதவி பெற வேண்டிய தேவை குறையும் என்றும் தெரிவித்துள்ளார்.