உலகின் 100 நாடுகள் நம்பி உள்ள அமெரிக்கா வெளிநாட்டு நிதி உதவி அமைப்புக்கு மூடு விழா எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு

viduthalai
2 Min Read

வாசிங்டன்,பிப்.6- அமெரிக்க அரசின் செலவை மிச்சப்படுத்தும் நடவடிக்கையாக வெளிநாடுகளுக்கு மனிதாபிமான நிதி உதவி வழங்கும் யுஎஸ்எய்ட் அமைப்பு மூடப்படுவதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார்.

அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்காவில் 2ஆவது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதில், வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வித மனிதாபிமான நிதி உதவிகளை நிறுத்தப் போவதாக டிரம்ப் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை செயல்படுத்தும் வகையில், உலகின் பெரும் பணக்காரர் எலான் மஸ்க் தலைமையிலான அரசின் செயல்திறன் துறை கடந்த சில நாட்களாக துரிதமாக வேலை செய்கிறது. இக்குழு வெளிநாடுகளுக்கு நிதி உதவி வழங்கும் யுஎஸ்எய்ட் அமைப்பிடம் சில ரகசிய ஆவணங்களை கேட்டுள்ளது. அந்த ஆவணங்களை தர மறுத்த 2 உயர் அதிகாரிகளை விடுப்பில் செல்ல அதிபர் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, யுஎஸ்எய்ட் அமைப்பில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களும் மறு அறிவிப்பு வரும் வரை வீட்டிலிருந்தே பணியாற்ற அனைவருக்கும் தனித்தனி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. யாரும் தலைநகர் வாசிங்டனில் உள்ள தலைமை அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், யுஎஸ்எய்டின் இணையதளமும் நேற்று முன்தினத்திலிருந்து புதுப்பிக்கப்படவில்லை. சில ஊழியர்கள் இணையதளத்தை அணுக முடியவில்லை என்றும் கூறி உள்ளனர்.

மூடு விழா

இந்நிலையில், எலான் மஸ்க் நேற்று தனது எக்ஸ் தள பதிவில், ”யுஎஸ்எய்ட் அமைப்பு மூடப்படுகிறது. அது சரி செய்ய முடியாத அளவுக்கு சீர்கெட்டுள்ளது. இதற்கு அதிபர் டிரம்ப் ஒப்புதல் அளித்துள்ளார்” என தெரிவித்துள்ளார். உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் அமெரிக்காவின் மனிதாபிமான வெளிநாட்டு நிதி உதவி மூலம் பலன் அடைந்து வருகின்றன. போர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் மகளிர் சுகாதாரம், எச்அய்வி எய்ட்ஸ் சிகிச்சை, எரிசக்தி பாதுகாப்பு, ஊழல் தடுப்பு பணிகள் என பல்வேறு திட்டங்கள் அமெரிக்க நிதி உதவி மூலம் செயல்படுகின்றன. தற்போது இது அத்தனையும் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

* அய்நாவின் மனிதாபிமான உதவிகளில் 42 சதவீதம் அமெரிக்காவின் நிதி மூலம் இயங்குகிறது.

* கடந்த 2023ஆம் ஆண்டில் வெளிநாட்டு நிதி உதவியாக அமெரிக்கா ரூ.6.12 லட்சம் கோடி நன்கொடையாக கொடுத்துள்ளது.

* யுஎஸ்எய்ட் மூடப்படுவதால் உக்ரைனுக்கு வழங்கப்படும் நிதி உதவியும் நிறுத்தப்படும். இது ரஷ்யா, உக்ரைன் போரில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும்.

* இதுபோன்ற செலவுகளை தடுப்பதன் மூலம் அடுத்த நிதியாண்டில் அமெரிக்காவின் ரூ.85 லட்சம் கோடி பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என மஸ்க் உறுதி அளித்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *