பெண்கள் பாதுகாப்பில் முதலிடத்தில் தமிழ்நாடு
12 வயதுக்குட்பட்ட சிறுமிகள்மீதான
பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை
சென்னை, ஜன.11– 12 வயதுக்குட்பட்ட சிறுமி கள்மீதான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு மரண தண்டனை வழங்கப்படும் என்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு சட்ட முன்வடிவுகளை தாக்கல் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடுப வர்களுக்கு இதற்கு முன்பு 10ஆண்டுகள் தண்டனை வழங்கப்பட்ட நிலையில், தற்போது 14 ஆண்டுகளுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட முன்வடிவுகள் இவை!
காவல்துறை ஊழியர் மற்றும் அவரது நெருங்கிய உறவினரால் பாலியல் வன் புணர்ச்சி குற்றங்களுக்கு10 ஆண்டுகள்தண்டனையை திருத்தி தற்போது 20 ஆண்டுக்கு குறையாத கடுங்காவல் தண்டனை வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சட்டத்திருத்தம்
வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளை விக்கும் குற்றத்தைச் செய்யும் நபருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மாற்றி ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டு வன்புணர்ச்சி மற்றும் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை கூட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுபவர்களுக்கு இதற்கு முன்பு ஆயுள் சிறை வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மரண தண்டனை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பெண்ணைப் பின் தொடர்ந்தால் வழங்கப்படும் தண்டனையை அய்ந்தாண்டுகள் வரை நீட்டித்தும், அமிலம் முதலியவற்றைப் பயன்படுத்துவதன் மூலம் தன்னிச்சையாக கொடுங்காயம் விளைவித்தால் ஆயுட்கால சிறை தண்டனை அல்லது எஞ்சியுள்ள இயற்கையான ஆயுட்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்படும் என சட்டத்திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (10.1.2025) கொண்டு வந்தசட்ட முன்வடிவுகள், விவாதத்திற்குப் பிறகு சட்டப்பேரவையில் இன்று (11.1.2025) நிறைவேற்றப்படும் என அறிவிக்கப்பட்டது.
பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு
முன்னதாக இந்தச்சட்ட முன்வடிவுகளைப் பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், ‘‘பாலியல் குற்றம் புரிவோருக்கு கடும் தண்டனை நிச்சயம்’’ என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.
பெண்களுக்கெதிரான குற்றங்களைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இரண்டு சட்டமுன்வடிவுகளை அறிமுகம் செய்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை வருமாறு:–
பெண்களுக்கெதிரான குற்றங்கள் தொடர்பாக உரிய சட்டத் திருத்தங்களோடு இரண்டு சட்டமுன்வடிவுகளை இந்த அவையில் அறிமுகம் செய்வதற்குமுன், அவற்றின் முக்கியத்துவத்தைப் பற்றிய விவரங்களைத் தங்களுடைய அனுமதியோடு முன்னுரையாக நான் இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
பெண் இனத்தின் மேன்மைக்கும்,
வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்கள்!
சமூகத்தின் சரிபாதியான பெண் இனத்தின் மேன்மைக்கும், வளர்ச்சிக்கும், பல்வேறு திட்டங்களைஉருவாக்கித் தரும் அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு. சமூகம், அரசியல், பொருளாதாரம் ஆகிய அனைத்து வகையிலும் பெண்களை முன்னேற்றி வரும் அரசாக நமதுஅரசு செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியை நாம் நாள்தோறும் அறிந்தும், உணர்ந்தும் வருகிறோம்.
பெண்களின் சமூகப் பங்களிப்பு
அதிகமாகி வருகிறது
இதன்மூலமாக, பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகி வருகிறது. இத்தகைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநில மாக, தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. பெண்கள் அதிகம் வேலைக்குச் செல்லும் மாநிலமாக, பெண்கள் அதிகமான சமூகப் பங்களிப்பு வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு வளர்ந்து வரு கிறது.
அதேநேரத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்தாக வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவோர்மீது தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுத்து, சட்டப்படி அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய தண்டனைகளை வாங்கித் தருவதிலும் உறுதியோடு செயல்பட்டு வரு கிறது தமிழ்நாடு அரசு. அரசின் இந்த நடவ டிக்கைகளைப் பற்றி இந்த மாமன்றத்தில் நான் பலமுறை எடுத்துரைத்துள்ளேன்.
பெண்கள் பாதுகாப்பு பற்றி
2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்!
பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கி ஒடுக்கி வருகிறது இந்த அரசு. 86 விழுக்காட்டிற்கு மேலான வழக்குகளில் 60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது இந்த அரசில்தான். பள்ளிகள், கல்லூரிகள், பொது இடங்களில் பெண்கள் பாதுகாப்பு பற்றி 2 இலட்சத்து 39 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டியுள்ளதும் இந்த அரசுதான். சத்யா என்ற பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றுக் கொடுத்திருப்பதும்இந்த அரசுதான்.
அனைத்துப் பெண்களது பாதுகாப்பையும் உறுதி செய்யும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் வன்கொடுமை என்பது யாராலும் மன்னிக்க முடியாத குற்றம். இத்தகைய கொடூரக் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு வழங்கப்பட வேண்டிய தண்டனை என்பது, இத்தகைய செயல்களில் ஈடுபட முனை வோருக்கான கடும் எச்சரிக்கையாக இருந்திட வேண்டும். இந்த வகையில், B.N.S. சட்டத்தின் கீழும், நமது மாநில அரசு சட்டங்களின் கீழும் ஏற்கெனவே இத்தகைய குற்றங்களுக்கு தண்டனைகள்வரையறுக்கப்பட்டு இருந்தாலும், இத்தண்டனைகளை மேலும் கடுமையாக்கிட வேண்டிய அவசியம் உள்ளதாகவே இந்த அரசு கருதுகிறது.
அனைத்து உறுப்பினர்களும்
இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்
இந்த அடிப்படையில், இத்தகைய குற்றங்களுக்கான தண்டனையை மேலும் கடுமையாக்குவதற்கு, B.N.S, மற்றும் B.N.S.S. சட்டங்களில் மாநில சட்டத் திருத்தத்திற்கும், தமிழ்நாடு 1998 ஆம் ஆண்டு பெண்ணிற்குத் துன்பம் விளைவித்தலைத் தடை செய்யும்சட்டத் திருத்தத்திற்கும், சட்டமுன்வடிவுகளை பேர வையின் ஒப்புதலுக்காக முன்வைக்கிறேன். அனைத்து உறுப்பினர்களும் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.