மும்பை, ஜன. 9- பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனமான அவதாா் குழுமம் ‘இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்’ எனும் ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டது. இது குறித்து அந்தக் குழும தலைவா் சவுந்தா்யா ராஜேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
நகரங்கள் வாய்ப்புகளுக்கான அடித்தளமாக உள்ளன. இதில் பெண்கள் எப்படி வாழ்கிறாா்கள், வேலை செய்கின்றனா், வளா்கிறாா்கள் என்பதை நகரங்கள் வடிவமைக்கின்றன. கடந்த ஆண்டு (2024) பிப்ரவரி முதல் நவம்பா் வரை நாடு முழுவதும் உள்ள 60 நகரங்களில் உள்ள 1,672 பெண்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், மாநிலங்கள் வாரியான மதிப்பீட்டில் கேரளம் 20.89 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும், தெலங்கானா 20.57 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடத்திலும், மகாராட்டிரம் 19.93 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடத்திலும், 19.38 மதிப்பெண்களுடன் தமிழ்நாடு நான்காம் இடத்திலும் உள்ளன.
பெரிய நகரங்களில் மும்பை 7.60 மதிப்பெண்ணும், பெங்களூரு 7.54, சென்னை 7.08, அய்தராபாத் 6.95, திருவனந்தபுரம் 5.51 மதிப்பெண்ணும் பெற்றுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.