* தனித் தகுதியோ, தனித் திறமையோ என்பதெல்லாம் கிடையாது; வாய்ப்புக் கொடுத்தால், எல்லோரும் சிறப்பாக வருவார்கள்!
அதனை செய்வதற்காகத்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி!
கும்பகோணம், ஜன.5 தனித் தகுதியோ, தனித் திறமையோ என்பதெல்லாம் கிடையாது. வாய்ப்புக் கொடுத்தால், எல்லோரும் சிறப்பாக வருவார்கள். அந்த வாய்ப்பு இதுவரையில் நமக்கு வரவில்லை. மனுதர்மத்தினால் அது வரவில்லை. சமூக தளத்தினுடைய அநீதியால் அது நமக்கு வரவில்லை. அதனை செய்வதற்காகத்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி – அதைச் செய்வ தற்காகத்தான் இன்றைக்குள்ள ஆளுமை – அந்த வெற்றியினுடைய அடையாளம்தான், வெற்றிச் சின்னங்கள்தான் நம்முடைய பிள்ளைகள் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மணமக்கள்:
கே.எஸ்.யாழினி – எம்.ஆதித்தன்
கடந்த 15.12.2024 அன்று கும்பகோணத்தில் ஆடிட்டர் சண்முகம் – பேராசிரியர் ச.கலைமணி இணை யரின் மகள் கே.எஸ்.யாழினிக்கும், ஆர்.முருகேசன் – எம்.அகிலா இணையரின் மகன் எம்.ஆதித்தனுக்கும் நடைபெற்ற மணவிழா வரவேற்பில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.
அவரது வாழ்த்துரை வருமாறு:
ஓதுவார்கள் தலைமையில் நடந்த
ஒரு தமிழ்த் திருமணம்
மிகுந்த எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும், நெகிழ்ச்சி யோடும் நடைபெறக்கூடிய அன்புச் செல்வர்கள் திருவாளர்கள் முருகேசன் – அகிலா ஆகியோருடைய அன்புச்செல்வன் ஆடிட்டர் ஆதித்தன் அவர்களுக்கும், குடந்தை பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் ஆடிட்டர் சண்முகம் – முனைவர் கலைமணி ஆகியோரின் செல்வி யாழினிக்கும் கரூரில் நடைபெற்ற திருமணம் – ஓதுவார்கள் தலைமையில் நடந்த ஒரு தமிழ்த் திருமணம்.
சமரசம்தான் – ஆனால், சமரசம் பல நேரங்களில் குடும்பங்கள் இணையும்பொழுது தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட மணவிழாவினை நடத்தி வைத்து, அம்மணவிழா வரவேற்பிற்கு வந்திருக்கக்கூடிய அருமை பெரியோர்களே, தாய்மார்களே, நண்பர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களையெல்லாம் வரவேற்கவேண்டியது எங்களுடைய கடமை
வரவேற்புரையை நான்தான் சொல்லவேண்டும். காரணம், இது எங்கள் பிள்ளைகளது குடும்பம். எங்களால் ஆளாக்கப்பட்டவர்களுடைய குடும்பம். எனவே, உங்களையெல்லாம் வரவேற்கவேண்டியது எங்களுடைய கடமை.
சுயமரியாதைக் கொள்கை வீரர் சு.கல்யாணசுந்தரம்
முதலாவதாக மணமக்களை எல்லோரும் பாராட்டி னார்கள். ஆடிட்டரது சிறப்பைப்பற்றி நம்முடைய
எம்.பி., சொன்னார். திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளரும், எஸ்.கே. என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படக் கூடியவரும், சுயமரியாதைக் கொள்கை வீரருமான சு.கல்யாணசுந்தரம். சுயமரியாதைக் கொள்கையில் அவர் சமரசமே செய்துகொள்ள மாட்டார். அந்த உணர்வோடுதான், இங்கே உரையாற்றினார்.
இதே அரங்கத்தில் 26 ஆண்டுகளுக்கு முன்பு, நம்மு டைய கலைமணிக்கும், ஆடிட்டர் சண்முகமுத்திற்கும் என்னுடைய தலைமையில் திருமணம் நடைபெற்றது.
இன்றைக்கு அடுத்த தலைமுறையான யாழினி – ஆதித்தின் ஆகியோருடைய மணவிழா வரவேற்பினை நடத்தி வைக்கின்றோம். இவர்களுடைய பிள்ளைகளுக்கும் மணவிழாவினை நடத்தி வைப்போம், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
ஆடிட்டர் சண்முகம் என்னிடம் கேட்டார்; மணமகன் வீட்டார் கரூரைச் சேர்ந்தவர்கள், நல்ல குடும்பம் என்று சொன்னார். அந்தக் குடும்பத்தில் எல்லோரும் படித்த வர்கள்.
ஒரு காலத்தில் என்ன சொல்வார்கள் என்றால், ‘‘என் பையன் என்ன படித்துவிட்டு, தாசில் உத்தியோகத்திற்கா போகப் போகிறான்?” என்று வசதி படைத்தவர்கள்கூட சொன்ன காலம் உண்டு.
தாசில்தார் உத்தியோகம்தான் பெரியது என்று நினைத்திருந்தார்கள். அதற்குமேல் கலெக்டர் உத்தியோகம் இருக்கிறது என்பதுகூட அன்றைக்கு அவர்களுக்குத் தெரியாது.
அப்படிப்பட்ட ஒரு காலத்தை மாற்றி அமைத்தவர்தான் தலைவர் தந்தை பெரியார். அதை மாற்றி அமைத்த இயக்கம்தான் திராவிட இயக்கம்.
தந்தை பெரியார் பாடுபட்டதினால்தான்…
இன்றைக்குப் பெண்கள் நிறைய பேர் படித்தி ருக்கிறார்கள். இந்த அரங்கத்தைப் பார்த்தீர்களேயானால், ஏராளமான ஆடிட்டர்கள் வந்திருக்கிறார்கள்.
இது ஏதோ ‘பொத்தென்று’ விழவில்லை. தந்தை பெரியார் பாடுபட்டார்; அதுவும் இந்தத் தொழிலில், தமிழர்களைப் பார்ப்பதே மிகவும் கஷ்டம். ஆனால், நாம் வேறுபாடு காட்டுவதில்லை.
இந்த இயக்கம் எப்படிப்பட்ட ஓர் இயக்கம். இந்த இயக்கத்தில் உள்ள எங்களுடைய பிள்ளைகள் எப்படி படித்திருக்கிறார்கள்!
ஒரு காலத்தில், பொம்பளை படிக்கலாமா? என்று கேட்டார்கள், கொச்சையாக.
ஆனால், இன்றைக்கு எங்களுடைய ஆடிட்டர் சண்முகத்தின் இணையர் கலைமணி, எங்களால் திருமணம் நடத்தி வைக்கப்பட்ட அவர், டாக்டர்
(பிஎச்.டி.) பட்டம் வாங்கியிருக்கிறார். அதேபோன்றவர்தான் ஆடிட்டர் சண்முகம்.
ஒரு காலத்தில் ஆடிட்டர் படிப்பை நம்மவர்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது.
மிக முக்கியமான செய்தி என்னவென்றால், இங்கே இருக்கின்ற ஆடிட்டர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், ‘‘ஏணிப்படிகள்” என்ற தலைப்பில் உள்ள புத்தகம் இது.
ஆடிட்டர் நாராயணசாமி
இந்தப் புத்தகத்தை எழுதியவர் – சுயசரிதையை எழுதியவர் யார் என்றால், ஆடிட்டர் நாராயணசாமி, இந்த ஊரைச் சார்ந்த அய்யர் அவர். உயர்ஜாதிக்காரர் என்றாலும், எல்லோருடனும் பழகக்கூடியவர்தான்.
இராஜாஜியினுடைய அத்தியந்த கொள்கைச் சீடர் அவர். அப்படிப்பட்டவர், தன்னுடைய சுய சரிதையில் தெளிவாக ஒரு செய்தியை எழுதியிருக்கிறார்.
அந்த நூலில், ‘‘என்னை கல்லூரிக்குப் படிக்க அனுப்புவதில் தகப்பனாருக்கு ஆர்வம் இருந்தாலும், அதற்காகப் பணம் புரட்டுவது எப்படி என்பது தெரிய வில்லை. கூட்டுக் குடும்பம். பணத்திலிருந்து உதவு வதற்குத் தாத்தா சம்மதிக்கவில்லை. என் தகப்பனார் வருமானமோ மிகவும் சொற்பம். ஆயினும் என்னுடைய கல்லூரிப் படிப்பில் அவர் தீவிரமாக இருந்தார். ஆனால், அநேகமாய் இந்த விஷயத்தில் மட்டும் அவர் என் தாத்தாவின் தீர்மானத்திற்கு எதிராக நடந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன். அதற்கு முன்னால், அவர் யாரிடமும் போய் நின்று உதவி என்று எதையும் கேட்டதில்லை.
ஆனால், அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில், பொன்னுசாமி சேர்வை என்பவரின் பிள்ளைக்கு, அப்பா டியூசன் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார்.
கும்பகோணத்திலிருந்த பெரியாருடைய தூண்கள் மூவர்!
(கும்பகோணத்தில் இருந்த மூவர், திராவிடர் கழகத்தில், தந்தை பெரியாருடைய தூண்கள். ஒருவர் கே.கே.நீலமேகம் பிள்ளை, இன்னொருவர் வி.சின்னத்தம்பி நாடார், பொன்னுசாமி சேர்வை – இவர்களை ஜாதிப் பட்டம் போட்டுத்தான் அழைப்பார்கள்).
பொன்னுசாமி சேர்வை என்பவர், அந்த நாளில், ‘பிராமணர்’களோடு விரோதம் பார்த்த திராவிடர் கழகத்தில் உள்ளூர் தலைவர்களில் முக்கியமானவராக இருந்தார்.
கும்பகோணம் வரும்பொழுதெல்லாம் பெரியார் ஈ.வெ.ராமசாமி, அவருடைய வீட்டில் தங்குவதுண்டு என்று நான் சொல்லக் கேட்டிருக்கி றேன்.
பொன்னுசாமி சேர்வை செய்த உதவி
ஆசிரியர் என்ற முறையில், என் தகப்பனாருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வின் காரணமாக, பொன்னுசாமி சேர்வைக்கு, என் தந்தையின்மீது அலாதியான பிரியமும், மதிப்பும் உண்டு. அவர், என்னுடைய கல்லூரிப் படிப்புக்கு உதவுவதாக ஒப்புக்கொண்டு, அப்படியே உதவவும் செய்தார். ஆண்டுக்கு 108 ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளுக்கு அவர் உதவி செய்தார்.
(திராவிடர் கழகத்துக்காரர், பெரியாருடைய தொண்டர், ஒரு பார்ப்பன நண்பருக்கு, ஜாதி வித்தியாசம் பார்க்காமல், அவர் ஆடிட்டர் படிப்பு படிப்பதற்காக உதவினார்).
நான்கு ஆண்டுகளுக்கு உதவி செய்ததினால்தான், நான் என்னுடைய கணக்குப் பாடத்தில், முதல் வகுப்பில் தேர்ச்சி பெற முடிந்தது. இன்றைக்கும் நான் அந்தப் பொன்னுசாமி சேர்வைக்கு மிகவும் நன்றி உடையவனாக இருக்கிறேன்.
சாட்சியமாக உள்ள வேலப்பன்
கும்பகோணத்திற்குப் போகும்பொழுதெல்லாம், என்னுடைய நன்றியின் அடையாளமாக, சேர்வையின் மகன் வேலப்பன் அவர்களைப் பார்த்து விட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறேன்” என்று தன்னுடைய சுயசரிதை புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.
வேலப்பன் அவர்களும் இங்கே இருக்கிறார். இதை விட நல்ல சாட்சி வேறு வேண்டாம்.
இதிலிருந்து இரண்டு பிரச்சினைகள் தீர்ந்தன. திராவிடர் கழகத்துக்காரர்களுக்குத் தனிமனித வெறுப்பு கிடையாது.
தந்தை பெரியார் சொன்னார், ‘‘கடவுளை மற” என்று சொன்னார். இதை மட்டும் பார்த்துவிட்டு, நிறைய பேர் ஓடுகிறார்கள்; அதற்கு அடுத்து அவர் சொன்ன வார்த்தை ‘‘மனிதனை நினை!” என்பதுதான்.
‘‘மனிதனை நினை’’ என்பதில் வேறுபாடு கிடையாது. யார்மீதும் நமக்குத் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு கிடையாது.
தந்தை பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றில் இதுபோன்று எத்தனையோ நிகழ்வுகள் உண்டு.
சண்முகம், ‘‘ஆசிரியர் தலைமையில்தானே அவருடைய மகளின் திருமணத்தை நடத்தியிருக்கவேண்டும்’’ என்று இங்கே சொன்னார்கள்.
என்னுடைய தலைமையில் நடத்துவதைவிட மிகவும் முக்கியம்; அவர் சொன்னதற்கு நான் மறுத்துப் பேசவில்லை.
பெட்ரோல் போடுகின்ற இடத்திற்குப் போனபோது அங்கே அய்யப்ப பக்தர்கள் இருந்துள்ளார்கள். அவர்களி டம் ஆடிட்டர் சண்முகம்,
நம்மூரில் இருக்கின்ற சாமிகளுக்கு
பவர் லெஸ்ஸா? பவர் கட்டா?
‘‘ஏம்பா, கோவிலுக்குப் போகிறதுதான் போகிறீர்கள்; அந்த மாநிலத்திற்குச் சென்றுதான் பணத்தைக் கொட்டவேண்டுமா? நம்மூரில் இருக்கின்ற சாமிகள் என்ன பவர் லெஸ்ஸா? பவர் கட்டா? இங்கேயே அந்தப் பணத்தைப் போடலாமே!” என்று சொல்லியிருக்கிறார்.
அவர்களுக்கு, அந்த நேரத்தில், அதைச் சொன்னாலே புரியும்.
ஏம்பா, கோவிலுக்குப் போகிறீர்கள்; திரும்பி வீட்டிற்குப் போங்கள் என்று அவர் சொல்லவில்லை. அதற்குப் பதிலாக இந்த ஊரிலேயே போடலாமே? என்றுதான் சொன்னார்.
அதேபோன்றதுதான், ஓதுவார்கள் தலைமையில் நடந்த திருமணமும்.
இந்தக் குடும்பம் நம்முடைய குடும்பம். அந்த ஓதுவார்களையே, கோவிலுக்குள் விடாமல்தான் இவ்வளவு நாள்கள் வைத்திருந்தார்கள்.
‘திராவிட மாடல்’ ஆட்சியின்
ஒப்பற்ற முதலமைச்சர்!
‘திராவிட மாடல்’ ஆட்சி வந்து – ஒப்பற்ற முதல மைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சி வந்த பிறகுதானே, ஓதுவார்களை கோவிலுக்குள் உள்ளே விட்டார்கள். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை அவர் நிறைவேற்றினார்.
கொள்கையில் சமரசம் செய்துகொள்ளமாட்டோம் நாம்.
டாக்டர், மிகவும் கெட்டிக்கார டாக்டர். மருந்தும், மிகவும் சக்தி வாய்ந்த மருந்துதான். ஆனால், நல்ல மருந்து என்பதற்காக, அந்தக் கெட்டிக்கார டாக்டர், ‘‘அந்த மருந்தை அப்படியே சாப்பிடுங்கள்” என்று சொல்ல மாட்டார். ஏனென்றால், பக்க விளைவுகள் ஏற்படும்.
அதற்காக அந்த டாக்டர் என்ன செய்வார் என்றால், ‘‘நாடியை (பல்ஸ்) பார்த்துவிட்டு, துடிப்பு இவ்வளவு இருப்பதினால், இந்த மருந்தில் இப்பொழுது கால் பாகம்தான் கொடுக்கவேண்டும்; அதற்குப் பிறகு அரை பாகம்; அதற்கடுத்ததாக முக்கால் பாகம், அடுத்ததாக முழு பாகம் மருந்து கொடுக்கவேண்டும் என்று சொல்வார்.
வைதீக முறையில் இந்தத் திருமணம் நடந்திருந்தால் நாம் வருத்தப்படலாம்!
ஆகவே, இந்தக் குடும்பம் வைதீக முறையில் திருமணம் செய்யவேண்டும் என்று சொல்லி, அதற்கு நம்முடைய சண்முகம் அவர்கள் ஒப்புக்கொண்டிருந்தால், அதை நினைத்து நாம் வருத்தப்படலாம்.
இதில் எங்களுக்கு என்ன மகிழ்ச்சி என்னவென்றால், மணமகனுடைய பெற்றோர், நம் கொள்கைக்கு வந்து விட்டார்கள்.
தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மணமகன் வீட்டாரிடம் விண்ணப்பம் போடுவது போன்று, ‘‘எங்கள் பெண்ணை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” என்று.
நம் பெண் நடந்துகொள்ளும் முறையிலேயே, மணமகன் வீட்டார் அன்பாக இருப்பார்கள். ஏனென்றால், நம் வீட்டுப் பிள்ளைகளை அவ்வளவு அழகாக வளர்த்திருக்கிறார்கள்.
சண்முகம் குடும்பத்தை மட்டும் நான் வரவேற்பதுடன், மணமகன் வீட்டாரை நான் பாராட்டுகிறேன். அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டதுதான் மிகப்பெரிய கொள்கை வெற்றியாகும்.
நாம் பெருமைப்படவேண்டிய ஒரு செய்தி!
ஆகவே, இதில் பாராட்டவேண்டிய ஒரு செய்தி, பெருமைப்படவேண்டிய ஒரு செய்தி என்னவென்றால், தந்தை பெரியாரைப் பொறுத்தவரையில், ‘‘கொஞ்சம் இடம் விட்டாலும், சரி” என்று சொல்லிவிடுவார்.
‘‘என்னங்க, தாலி கட்டணுமா? கட்டிக் கொள்ளுங்கள், பரவாயில்லை’’ என்பார்.
பிறகு அவர்கள் வேண்டாம் என்று உணர்கின்ற பொழுது எடுத்துக்கொள்ளலாம் என்பார்.
திருமணத்தைப் பொறுத்தவரையில், கொள்கை மிகவும் முக்கியம்; அடிப்படை இலக்கில் சரியாக இருக்கவேண்டும்.
அந்த இலக்கில், நாடித் துடிப்பைப் பார்க்கிறோம், கால் மாத்திரை, அரை மாத்திரை, முக்கால் மாத்திரை என்று வந்து பிறகு முழு மாத்திரைக்கு வரக்கூடிய அளவிற்கு வரும்.
சுயமரியாதைத் திருமணங்கள் வருங்காலத்தில் இந்தக் குடும்பத்திலும் வரும்.
இப்படிப்பட்ட அற்புதமான மணமக்களுக்கு அறி வுரை சொல்லத் தேவையில்லை.
மணமக்களுக்கு அன்பு வேண்டுகோள்தான்.
மணமக்களே, நீங்கள் சிறப்பாக வாழ்வில் உயர்வீர்கள். இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அன்பு பாராட்டக் கூடியவர்கள் நீங்கள்.
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
‘‘ஒரு மனதாயினர் தோழி, திருமண மக்கள்என்றும் வாழி!” என்று புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் சொன்னார்.
அப்படிப்பட்ட வாழ்க்கையை வாழுகின்ற நீங்கள், எவ்வளவு உயர்ந்தாலும், உங்கள் பெற்றோரிடம் அன்பு காட்டுங்கள்.
உங்கள் பெற்றோரால்தான் நீங்கள் வளர்ந்திருக்கிறீர்கள். அவர்களுடைய தியாகத்தால்தான், நீங்கள் படித்து, நல்ல நிலையில் இருக்கிறீர்கள். நாளைக்கும் வளர்வீர்கள், அவர்கள் எதிர்பார்ப்பது பணத்தை அல்ல; பாசத்தை அன்பைத்தான். அதைத்தான் அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்.
எனவே, பெற்றோர்களிடம் அன்பு காட்டுங்கள்; கீதாலயன் சொன்னாரே, சிக்கனத்தைப்பற்றி.
வரவுக்கு உட்பட்டு செலவழித்து, தொண்டறத்திற்குப் பயன்படுத்துங்கள்.
இல்லறம் – துறவறம் என்பது முன்பு.
இப்பொழுது இல்லறம், அதோடு சேர்ந்த தொண்டறம்.
ஆகவேதான், தொண்டறத்தைப் போற்றி, சண்முகம் – கலைமணியைப் போல வாழுங்கள். அதேபோன்று மணமகன் பெற்றோர்.
பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைத்து ஆளாக்கி இருக்கிறார்கள். ஒரு காலத்தில் நமக்கெல்லாம் படிப்பு வராது என்று சொன்னார்கள். ஆனால், நம்முடைய பிள்ளைகளுக்கு வாய்ப்புக் கொடுத்தால், ஆதித்தனாக இருந்தாலும், யாழினியாக இருந்தாலும், நம்முடைய சண்முகம், கலைமணியாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பினைப் பயன்படுத்தி, நல்ல முறையில் படித்து உயர்ந்துள்ளார்கள். கலைமணி சிறு பிள்ளையாக இருக்கும்பொழுது, அவரை அழைத்து, நன்றாகப் படி, பாலிடெக்னிக்கில் படிப்பதற்குப் பதில், பொறியியல் கல்லூரியில் படி என்று சொன்னோம். நல்ல முறையில் படித்து நல்ல மதிப்பெண் வாங்கியிருக்கிறார்,
‘‘அண்ணே, எனக்கு கணக்கே வராது. என்னை வற்புறுத்தாதீர்கள்” என்று சொல்வார்.
நானே பிடித்து பொறியியல் கல்லூரியில் தள்ளினேன்.
பெரியாருடைய இயக்கம் என்ன செய்தது என்பதை இதிலிருந்து புரிந்துகொள்ளலாம்.
சிறப்புக் கவனம் செலுத்துங்கள்!
முதலில், கலைமணிக்கு பொறியியல் படிப்பைப் படிப்பதற்கு விருப்பமில்லை. நாங்கள் வற்புறுத்தியவுடன், பெரியார் மணியம்மை கல்லூரிக்கு வந்தார். அங்கே சண்முகசுந்தரம் என்கிற பேராசிரியர் அவர்கள், மிக அருமையாகக் கணக்கு சொல்லிக் கொடுத்தார். அவரி டம், ‘‘கலைமணி, கொஞ்சம் கணக்குப் பாடத்தில் பலகீனமாக இருந்தால், சிறப்புக் கவனம் செலுத்துங்கள்” என்று சொன்னோம்.
அருமையாகப் படித்து, இன்றைக்குப் பிச்.டி., முனைவர் பட்டம் பெற்றிருக்கிறார். பல பேரை தயாரிக்கக் கூடிய இடத்தில் இருக்கிறார்.
இதில் தனித் தகுதியோ, தனித் திறமையோ என்பதெல்லாம் கிடையாது. வாய்ப்புக் கொடுத்தால், எல்லோரும் சிறப்பாக வருவார்கள்.
வெற்றிச் சின்னங்கள்தான் நம்முடைய பிள்ளைகள்
அந்த வாய்ப்பு இதுவரையில் நமக்கு வரவில்லை. மனுதர்மத்தினால் அது வரவில்லை. சமூக தளத்தினுடைய அநீதியால் அது நமக்கு வரவில்லை. அதனை செய்வ தற்காகத்தான் இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சி – அதைச் செய்வதற்காகத்தான் இன்றைக்குள்ள ஆளுமை – அந்த வெற்றியினுடைய அடையாளம்தான், வெற்றிச் சின்னங்கள்தான் நம்முடைய பிள்ளைகள். அதனை ஒப்புக்கொண்டவர்கள்தான் சண்முகம் – கலைமணி ஆகியோரின் சம்பந்திகள்.
கொஞ்சம் காலதாமதம் ஆகலாம்!
‘‘நிச்சயமாக நம்முடைய கொள்கைகள் தோற்காது. கொஞ்சம் காலதாமதம் ஆகலாம்’’ என்று தந்தை பெரியார் அவர்கள் சொல்வார்.
உடனே வெற்றி வரவேண்டிய அவசியம் இல்லை. கொஞ்சம் தாமதம் ஆகும். இன்றைக்கு முதல் கட்டத்திற்கு சம்பந்திகள் வந்துவிட்டார்கள். சண்முகம், சுயமரியாதையில் பிஎச்.டி., பாஸ் செய்து விட்டார். சம்பந்திகள் இப்பொழுதுதான் பி.ஏ. பாஸ் செய்திருக்கிறார்கள். பிறகு, எம்.ஏ., அதற்குப் பிறகு பிஎச்.டி., பாஸ் ஆகிவிடுவார்கள்.
எடுத்த எடுப்பிலேயே பிஎச்.டி.யை எதிர்பார்க்க முடியாது.
எல்லோருக்கும் வாழ்த்துகளைச் சொல்லி விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வாழ்க மணமக்கள்!
வளர்க பகுத்தறிவு!
வளர்க சமத்துவம், சுயமரியாதை!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.