இரு பிரச்சினைகள் குறித்து ஆர்.எஸ்.எஸின் தலைவர் மோகன் பாகவத் புனேயில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ‘விஸ்வ குரு பாரத்’ என்ற தலைப்பில் கடந்த 19.12.2024 அன்று பேசியிருக்கிறார்.
ஒன்று – அயோத்தியில் ராமன் கோயிலை இடித்து மசூதி கட்டப்பட்டதும், மசூதி இடிக்கப்பட்டதும் குறித்ததாகும்.
இரண்டாவது வெளிநாடுகளில் ஹிந்து சிறு பான்மையினர் தாக்கப்படுவது பற்றியதாகும்.
அவர் பேச்சின் சாரம் வருமாறு:
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மசூதி சர்ச்சைகளை குறிப்பிட்டு, “வெவ்வேறு நம்பிக்கைகள் மற்றும் சித்தாந்தங்கள் எவ்வாறு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதற்கு இந்தியா ஒரு உதாரணமாக இருக்க வேண்டும்; கடந்த கால தவறுகளில் இருந்து இந்தியா பாடம் கற்றுக் கொண்டு, உலக அரங்கில் நம் நாட்டை முன்மாதிரியாக மாற்ற பாடுபட வேண்டும்” மற்ற கடவுள்களை
அவமதிப்பது நமது கலாச்சாரம் அல்ல!
“ராமன் கோயில் என்பது நம்பிக்கை சார்ந்த விஷயம், அது கட்டப்பட வேண்டும் என்று ஹிந்துக்கள் கருதினர். ஆனால், வெறுப்பு மற்றும் பகைமையால் புதிய தளங்களில் பிரச்சினையை எழுப்புவது ஏற்றுக் கொள்ள முடியாதது.
இந்தியாவில் பல ஆண்டுகளாக சமூக நல்லிணக் கத்துடன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.பயங்கரவாதம், ஆக்கிரமிப்பு, வலிமை மற்றும் பிறரின் கடவுள்களை அவமதிப்பது நம் கலாச்சாரம் அல்ல.
இங்கு பெரும்பான்மையோ சிறுபான்மையோ இல்லை, நாம் அனைவரும் ஒன்றுதான். அனைவரும் இந்த நாட்டில் தங்கள் வழிபாட்டு முறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
சில நம்பிக்கைகள், சடங்குகள் மற்றும் சித்தாந்தங்கள் இந்தியாவுக்கு வெளியில் இருந்து வந்தவை, அத்துடன் பயங்கரவாதமும் நம் நாட்டில் நுழைந்தது” என்றார்.
மேலும் ‘பிற நாடுகளில் சிறுபான்மையினர் பற்றிய கவலை தேவை’ வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதலை குறிப்பிட்டு பேசிய மோகன் பகவத், “சிறுபான்மையினரை துன்புறுத்தும் நாடுகளில் அங்குள்ள சிறுபான்மையினர் குறித்து உலக நாடுகள் அக்கறை காட்ட வேண்டும். சிறுபான்மையினரின் மீதான அக்கறை குறித்து இந்தியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது, தற்போது பிற நாடுகளில் சிறுபான்மையினர் எதிர்கொள்வது என்ன என்பதை பார்க்கின்றோம்” என்றார்.
1) முதல் பிரச்சினை குறித்துப் பேசலாம். உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பைக் கூறியது. வழிபாட்டுத்தலங்கள் பற்றி 1991–இல் வெளிவந்த தீர்ப்பு அது.
இந்தியாவில் எந்த ஒரு மத வழிபாட்டுத் தலமும் 1947 ஆகஸ்ட் 15-ஆம் தேதியில் எந்த நிலையில் இருந்ததோ, அதே நிலையிலேயே தொடர வேண்டும் என்று இந்த சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தின் சில சலுகைகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகள் 13.12.2024 அன்று விசாரணைக்கு வந்தன.
அப்போது இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, “புதிய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்படக்கூடாது அல்லது நடவடிக்கைகளுக்கு உத்தரவிடப்படக்கூடாது என்று அறிவுறுத்துவது பொருத்தமானது என்று நாங்கள் கருதுகிறோம். நிலுவையில் உள்ள வழக்குகளில், பயனுள்ள இடைக்கால உத்தரவுகள் அல்லது ஆய்வு செய்வதற்கான உத்தரவுகள் உள்ளிட்ட இறுதி உத்தரவுகளை சிவில் நீதிமன்றங்கள் அடுத்த விசாரணை தேதி வரை வழங்க முடியாது” என்று உத்தரவிட்டனர்.
தீர்ப்புகள் இப்படி திட்டவட்டமாக இருக்க, ராமன் கோயில் இடிக்கப்பட்டு, மசூதி கட்டப்பட்டது என்று கூறி, சட்ட விரோதமாக ஒரு பட்டப் பகலில் இடித்ததை முன்னுதாரணமாகக் கூறி, வேறு பல இடங்களிலும் சங்பரிவார்கள் பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள்.
ராமன் கோயில் பிரச்சினை என்பது நம்பிக்கையைச் சார்ந்தது என்று பூசிமெழுகிப் பேசியுள்ள ஆர்.எஸ்.எஸ். தலைவர், இனிமேல் வேறு இடங்களில் கோயில், மசூதி பிரச்சினைகளை எழுப்ப வேண்டாம் என்று இதோபதேசம் செய்துள்ளார்; அதுவரை கொஞ்சம் ‘மார்ஜின்’ கொடுத்து வரவேற்க வேண்டியதுதான். சங்பரிவார்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தலைவர் என்ற தகுதியில் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.
இரண்டாவது வெளிநாடுகளில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்கள் தாக்கப்படுவது குறித்த பிரச்சினையாகும்.
எந்த நாட்டிலும் பெரும்பான்மை என்ற அகந்தையில், மதவெறியில் சிறுபான்மையினர் தாக்கப்படுவதை ஏற்கவே முடியாது!
இதைத்தான் தொடக்க முதல் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார்க் கூட்டத்திற்குச் சொல்லி வந்தோம்.
குஜராத்தில் சிறுபான்மையினராக இருந்த முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோது, ‘எந்த முகத்தை வைத்துக் கொண்டு வெளிநாடு போவேன்?’ என்று பிரதமர் வாஜ்பேயி புலம்பியதுண்டே!
குடியுரிமை திருத்தச் சட்டம் என்ற ஒன்றைக் கொண்டு வந்து தலைமுறை தலைமுறையாக இந்தியாவில் வாழ்ந்து வரும் முஸ்லிம்களை வெளியேற்றுவதை மறுபரிசீலனை செய்து – அந்த சட்டத்தை ரத்து செய்து – வெளிநாடுகளில் சிறுபான்மையினராக உள்ளவர்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் வேண்டுகோள் விடுத்தால், அதில் அர்த்தமும், ஆதரவும் வலிமையாக இருக்கும் அல்லவா. மீண்டும் சொல்கிறோம் – எந்தக் காரணத்தைக் கொண்டும், வன்முறையை ஏற்க முடியாது – ஏற்கவே முடியாது!