அமலாக்கத்துறை விசாரணை
தொழிலதிபர் மற்றும் மனைவி தற்கொலை
போபால், டிச.16- மத்தியப் பிரதேசத்தில் அமலாக்கத்துறை விசாரணையின் போது தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
மேலும் பாஜகவும், அமலாக்கத் துறையும் எங்களை துன்புறுத்தியதால் இந்த முடிவை எடுத்ததாக கூறி பிரதமர், குடியரசுத் தலைவருக்கு கடிதம் அனுப்பியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் செகோர் மாவட்டத்தை சேர்ந்த தொழில் அதிபர் மனோஜ். இவரது மனைவி நேகா. இவர்களுக்கு 2 மகனும், ஒரு மகளும் உள்ளனர். மனோஜ் காங்கிரஸ் கட்சியில் ஈடுபாடு உள்ளவர். மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ராகுல் காந்தி நடைப் பயணம் மேற்கொண்டிருந்த சமயத்தில் மனோஜ் வீட்டுக்கு ராகுல் காந்தி வருகை தந்தார். அவர்கள் குடும்பத்தை ராகுல் காந்தி சந்தித்து பேசினார்.
அப்போது மனோஜின் மகன்கள் ராகுல் காந்திக்கு உண்டியலை பரிசாக அளித்தனர். இதற்கிடையே பிரதம மந்திரி வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் மற்றும் முதலமைச்சர் வேலைவாய்ப்பு திட்டத்துக்காக வங்கியில் ரூ.6 கோடி கடன் வாங்கி மோசடி செய்ததாக தொழில் அதிபர் மனோஜ் மீது குற்றச்சாட்டு வந்தது. இந்த குற்றச்சாட்டையடுத்து, மனோஜ் மற்றும் வங்கி அதிகாரிகள் சிலர் மீது சிபிஅய் வழக்கு பதிவு செய்தது.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் இதில் சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து இது தொடர்பாக வந்த புகாரின் பேரில் அமலாக்கத்துறையும் விசாரணையை தொடங்கியது. இதில் மனோஜுக்கு சொந்தமான 5க்கும் மேற்பட்ட இடங்களில் கடந்த 5 ஆம் தேதி அமலாக்கத்துறை சோதனை நடத்தினர். அப்போது மனோஜுக்கு சொந்தமான இடங்களில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். இதில் அவரது வங்கிக் கணக்கை அமலாக்கத் துறை முடக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 13.12.2024 அன்று மனோஜும் அவரது மனைவி நேகாவும் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட நிலையில் மீட்கப்பட்டனர். காவல் துறையினர் அவர்களது உடலை மீட்டு உடற் கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் தற்கொலை செய்தது தெரியவந்தது. மேலும் அவர் தற்கொலை கடிதம் ஒன்றை தட்டச்சு செய்து அதனை குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பியுள்ளார்.
அந்த கடிதத்தில், “என்னை பாஜக தலைவர்கள் மற்றும் அமலாக்கத்துறை துன்புறுத்துகிறது. நாங்கள் இறந்து பிறகு என் குழந்தைகளை ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் தான் காப்பாற்ற வெண்டும்” என்று கூறியிருந்தார். மேலும் இந்த கடிதம் சமூக வலைத்தளங்களிலும் வெளியாகி இருந்தது. இதனால் இந்த நிகழ்வு மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.அமலாக்கத்துறை விசாரணையின் போது தொழில் அதிபர் மற்றும் அவரது மனைவி தற்கொலை செய்த நிகழ்வு குறித்து பேசிய மத்தியப் பிரதேச காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி, மனோஜின் குழந்தைகளை நாங்கள் பார்த்து கொள்வோம். இது தற்கொலை கிடையாது. கொலை. பாஜகவில் இணைய வேண்டும் என்று சொல்லி அவரை பாஜகவும், அமலாக்கத்துறையும் வற்புறுத்தி இருக்கிறது” என்று கூறினார். இதேபோல் மத்தியப் பிரதேச மேனாள் முதலமைச்சர் கமல்நாத்தும், பாஜகவும் அமலாக்கத்துறையும் சேர்ந்து துன்புறுத்தியதால் தான் அவர் மனைவியுடன் தற்கொலை செய்துள்ளார்” என்று கூறியுள்ளார்.