ராமேசுவரம், டிச.13 தமிழ்நாடு மீனவர்கள் 9 பேரை நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகு ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இலங்கையின் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜுன் 25-ஆம் தேதி இலங்கை கடற்படையினர் நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான விசைப் படகை கைப்பற்றி, படகிலிருந்த மொத்தம் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
இந்த கைது நடவடிக்கையின் போது, இலங்கை ரோந்துப் படகிலிருந்த இலங்கை கடற்படை வீரர் ரத்நாயக்க, கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகிலிருந்து தவறி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும் போது உயிரிழந்தார். இலங்கை கடற்படை வீரர் உயிரிழந்தது தொடர்பாக கங்கேசன்துறை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், 11.12.2024 அன்று மீனவர்களின் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து மல்லாகம் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, பத்து மீனவர்களில் 9 மீனவர்களை மீண்டும் இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற நிபந்தனையுடன் விடுதலை செய்தும், விசைப்படகின் ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்தும், உயிரிழந்த கடற்படை வீரருக்கு இழப்பீடாக இலங்கை ரூ.35 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ.10 லட்சம்) வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.
இந்தியாவில் ஆண்டு ஒன்றுக்கு விபத்துகளில் 1.78 லட்சம் பேர் உயிரிழப்பு
புதுடில்லி, டிச.13 நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்து குறித்து ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று (12.12.2024) பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் ஆவர். வாகன ஓட்டிகள் சட்டத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. இருசக்கர வாகன ஓட்டிகளில் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. சிலர் சிவப்பு சமிக்ஞையை மதிப்பதே இல்லை.
சாலை விபத்து மரணங்களில் உத்தரப்பிரதேசம் ஒட்டுமொத்த உயிரிழப்பில் 13.7 சதவீதத்துடன் (23,000) முதலிடத்தில் உள்ளது. தமிழ்நாடு 10.5 சதவீதத்துடன் (18,000) 2-ஆம் இடத்தில் உள்ளது. மகாராட்டிரா (15,000), மத்தியப் பிரதேசம் (13,000) ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
நகரங்களைப் பொறுத்தவரை டில்லி 1,400 பேருடன் முதடலிடத்தில் உள்ளது. பெங்களூரு (915), ஜெய்ப்பூர் (850) ஆகியவை 2 மற்றும் 3-ஆம் இடங்களில் உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.