வழிபாட்டுத் தலங்களுக்கு எதிரான வழக்குகளில் தீர்ப்பு எதையும் வழங்கக் கூடாது!

Viduthalai
5 Min Read

கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடில்லி, டிச. 13 – தங்களின் மறு உத்தரவு வரும் வரை, வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நாட்டில் புதிதாக எந்தவொரு வழக்கையும் பதிவு செய்யக் கூடாது என்று கீழமை நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா தலைமையிலான 3 நீதிபதிகள் அமர்வு அதிரடியாக தடை விதித்துள்ளது.
கீழமை நீதிமன்றங்களில் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குகளின் விசாரணைக்குத் தடை எதையும் விதிக்காத உச்சநீதிமன்றம், எனினும், வழிபாட்டுத் தலங்கள் விவகா ரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகள் எதையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் குறித்து, நான்கு வாரத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்யுமாறு ஒன்றிய அரசுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

‘வழிபாட்டுத்தலங்கள் சட்டம்- 1991’
வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கடந்த 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. 1947 ஆம் ஆண்டு நாடு சுதந்திரம் கிடைத்த போது வழிபாட்டுத் தலங்கள் எந்த நிலையில் இருந்தனவோ, அந்த நிலை அப்படியே தொடரவேண்டும். அதில் எந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. இந்த வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நீதிமன்றத்திற்கும் செல்ல முடியாது என்பது தான் ‘வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்)- 1991’ கூறுவதாகும்.
1992 இல் பாபர் மசூதி இடிக்கப் பட்டதைத் தொடர்ந்து, நாட்டில் ஏற்பட்ட வன்முறை, பதற்றம் மற்றும் கொந்தளிப்பான சூழலில், பாபர் மசூ தியைப் போல புதிதாக மத வழிபாட்டுத்தலங்களை முன்வைத்து இனிமேல் நாட்டில் பிரச்சினைகள் ஏற்படக்கூடாது என்பதற்காக முன் தேதியிட்டு, வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் கொண்டு வரப்பட்டது.

சீர்குலைக்க சங்-பரிவாரங்கள் முயற்சி
ஆனால், 2014-இல் ஒன்றிய அர சில் பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர், வழிபாட்டுத்தலங்கள் சட்டத்தை நீர்த்துப் போகச் செய்யும் நடவடிக்கைகள் துவங்கின. கோயில்களை இடித்து மசூதிகள் கட்டப்பட்டுள்ள தாக நாடு முழுவதும், ஹிந்துத்துவா அமைப்புக்கள் சார்பில் 10 வழக்குகள் தொடரப்பட்டன. 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளாமலே, கீழமை நீதிமன்றங்களும் மசூதிகளில் ஆய்வு நடத்த உத்தரவுகளைப் பிறப்பித்தன.
மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்மபூமி கோவிலை ஒட்டியுள்ள ஷாஹி ஈத்கா மசூதியிலும் கடந்த சில மாதங்களுக்கு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டது. வாரணாசி நீதிமன்றமானது கடந்த 2022 மே மாதம் கியான்வாபி மசூதியில் ஆய்வுக்கு உத்தரவிட்டது.

நீதிமன்றங்கள் துணைபோகும் நிலை
இறுதியாக, கடந்த நவம்பர் 19 அன்று உத்தரப்பிரதேச மாநிலம் சண் டவுசியில் உள்ள ஷாஹி ஜமா மசூ தியில் ஆய்வு நடத்த சம்பல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த மசூதியை முகலாய பேரரசர் பாபர், 1526 இல் கட்டியதாகவும், முன்னதாக, இங்கு ஹிந்துக் கடவுளான விஷ்ணு​வின் கடைசி அவதாரமான கல்கிக்கு கோயில் இருந்ததாகவும், அதனை இடித்து விட்டுத்தான் பாபர், ஷாஹி ஜமா மசூதியைக் கட்டினார் என்றும் கூறப்பட்ட கதையை ஏற்று நீதிமன்றம் ஆய்வுக்கு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து சம்பலில் வன்முறை ஏற்பட்டு, அதில் 5 பேரை உ.பி. பாஜக அரசு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது. இது நாடு முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

உச்சநீதிமன்றத்தில் சிபிஎம் வழக்கு
இந்நிலையில், 1991 வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை கறாராக அமல்படுத்த உத்தரவிட வேண்டும்; மசூதிகளில் ஆய்வு நடத்த உத்தரவிடும் கீழமை நீதிமன்றங்களின் உத்தரவுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று ஜம்மியத் உலமா-இ-ஹிந்த் உள்ளிட்ட அமைப்புக்கள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திமுக சார்பிலும், வி.சி.க. சார்பிலும், ஆர்ஜேடி எம்.பி. மனோஜ் குமார் ஜா, என்.சி.பி. (சரத் பவார்) எம்.பி. ஜிதேந்திர அவ்ஹாத் உள்ளிட்டோர் சார்பிலும் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இவர்களுக்கு முன்னதாக, “அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சமான நீதித் துறை மறுபரிசீலனையின் தீர்வை வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடுக்கிறது” என அஸ்வினி குமார் உபாத்யாய போன்ற ஹிந்துத்துவா கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2020 ஆம் ஆண்டே உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

3 ஆண்டாக மோடி அரசு இழுத்தடிப்பு
அப்போது, இந்த மனு தொடர்பாக பதிலளிக்குமாறு கடந்த 2021 இல் ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், மோடி அரசு பதில் மனு தாக்கல் செய்யாமல் மூன்று ஆண்டுகளாக காலம் தாழ்த்தி வந்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய சிறப்பு அமர்வில் வழிபாட்டுத் தலங்கள் சிறப்புச் சட்டம் தொடர்பான மனுக்கள் நேற்று (12.12.2024) விசாரணைக்கு வந்தன.
அப்போது, “இந்த வழக்கில் ஒன்றிய அரசு இன்னும் எதிர் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை” என்பதை தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சுட்டிக்காட்டியுள்ளார்.

கீழமை நீதிமன்றங்களுக்கு கட்டுப்பாடு
அப்போது, ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, வழக்கம்போல “1991 ஆம் ஆண்டு சட்டத்தை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க கால அவகாசம் தேவை” என்று கூறினார். 10 வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக மூத்த வழக்குரைஞர் ராஜு ராமச்சந்திரன் சுட்டிக்காட்டினார்.
இதையடுத்து, “உச்சநீதிமன்றத்தின் அடுத்த விசாரணை தேதிவரை, கீழமை நீதிமன்றங்களில் வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக எந்த சிவில் வழக்குகளும் பதிவு செய்யப்படக் கூடாது” என்று தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா உத்தரவிட்டார். மேலும், ஏற்கெனவே “நிலுவையில் உள்ள வழக்குகளில், நீதிமன்றங்கள் அடுத்த விசாரணை தேதி வரை தாக்கத்தை ஏற்படுத்தும் வகையிலான இடைக்கால அல்லது இறுதி உத்தரவுகளை எதையும் பிறப்பிக்கக் கூடாது” என்றும் உத்தரவிட்டார்.

ஒன்றிய அரசு பதிலளிக்க உத்தரவு
மேலும், “வழிபாட்டுத் தலங்கள் சட்டம்- 1991, குறிப்பாக பிரிவுகள் 3 மற்றும் முழு வீச்சையும் முழுமையாக விசாரித்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளதால், சிவில் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு மதிப்பு இல்லை. 2019 ராமஜென்மபூமி தீர்ப்பில் என்ன கூறப்பட்டுள்ளது என்பது குறித்து மனுதாரர்களின் கருத்தை கேட்போம்” என்ற நீதிபதிகள், இந்த மனுக்கள் தொடர்பாக ஒன்றிய அரசு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறும் உத்தரவிட்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *