கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்
திருவனந்தபுரம், நவ.3- “நாட்டை ஒரே மொழிக்குள் சுருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவை தடுக்கப்பட வேண்டும்” என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில், மலையாள தினம் மற்றும் நிர்வாக மொழி வாரத்தின் மாநில அளவிலான கொண்டாட்டத்தை முதலமைச்சர் பினராயி விஜயன் கடந்த 1.11.2024 அன்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.
அப்போது அவர் பேசியதாவது:
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை மண்டியிட வைப்பதில் நமது மொழியியல் பன்முகத்தன்மை பெரும் பங்கு வகித்தது. அந்த மொழிப் பன்முகத்தன்மையை ஒற்றை மொழியாகச் சுருக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அரசமைப்புச் சட்டத்தின்படி மொழிகளைத் திணிக்க முடியாது. அவ்வாறு வற்புறுத்தி திணிக்கப்பட்டால், நம் மொழி மறைந்து விடும். இதனால் கலாச்சாரமும் மறைந்து விடும். இது போன்ற எதிர்விளைவுகளை எதிர்த்துப் போராட வேண்டிய பொறுப்பு ஒவ்வொருவருக்கும் உள்ளது. நெருக்கடியான காலங்களில் நாம் காட்டும் ஒற்றுமை உலகுக்கே எடுத்துக்காட்டாகும். நமது தாய் மொழிதான் நமது ஒற்றுமைக்கு அடிப்படை.
எனவே, தாய்மொழியை இழந்தால் நாட்டின் ஒற்றுமையும், ஒருமைப்பாடும் இல்லாமல் போய்விடும்.
இவ்வாறு முதலமைச்சர் பினராயி விஜயன் பேசினார்.