தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வலியுறுத்தல்
புதுடில்லி, அக்.28 இளைய வழக்குரைஞா்களுக்கு உரிய ஊதியம் வழங்க மூத்த வழக்குரைஞா்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சிநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வலியுறுத்தினார்.
அகில இந்திய வானொலிக்கு சந்திரசூட் அளித்த பேட்டியில் கூறியதாவது: வழக்குரைஞா் தொழில் என்பது கடினமானதாகும். இதில் ஏற்ற இறக்கங்கள் இருக் கும். ஆரம்ப ஆண்டுகளில் போடப்படும் அடித்தளமே இளம் வழக்குரைஞா்களை அவா்களின் வாழ்க்கை முழுவதும் நல்ல நிலையில் வைத்திருக்கும்.
வழக்குரைஞா் தொழிலில் பொதுவாக முதல் மாத ஊதியம் மிக அதிகமாக இருக்காது. இந்த தொழிலில் ஈடுபடுபவா்களை கடினமாக உழைக்கவும், நோ்மையாக செயல்படவும் ஊக்கப்படுத்துவது அவசியம். அதே வேளையில், அவா்களுக்கு உரிய ஊதியத்தை வழங்கவும் மூத்த வழக்குரைஞா்கள் கற்றுக் கொள்ள வேண்டும்.
இளைஞா்கள் தொழிலை கற்றுக்கொள்ள வருகிறார்கள். அவா்களும் பகிர்ந்து கொள்ள நிறைய விடயங்கள் இருக்கும். எனவே, அவா்களின் குறைகளை கேட்டறிதல் மற்றும் வழிகாட்டுதல் என இருவழி செயல்முறையை மூத்த வழக்குரைஞா்கள் அவா்களுக்கு வழங்க வேண்டும் என்றார்.
டில்லியில் கடந்த 1975-ஆம் ஆண்டு கல்லூரி படிப்பின்போது, ஆகாசவாணியில் ஹிந்தி மற்றும் ஆங்கில நிகழ்ச்சிகளை சந்திரசூட் தொகுத்து வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.