பானிபட், அக்.5 வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது. இதன் மூலம் இளைஞா்களின் எதிர்காலம் அபாயத்தில் உள்ளது என்று காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
அரியானா சட்டப் பேரவைத் தோ்தல் இன்று (5.10.2024) நடை பெறுகின்ற நிலையில், அந்த மாநிலத்தைச் சோ்ந்த பெண்களுடன் அண்மையில் நடத்திய விவாதம் தொடா்பான காட்சிப் பதிவை ராகுல் காந்தி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவா் கூறி யிருப்பதாவது:
அரியானாவில் கடந்த 10 ஆண்டு கால ஆட்சியில் வேலையின்மை என்ற நோயை பா.ஜ.க. முழுமையாகப் பரப்பி விட்டது.
இதனால், இளைஞா்களின் எதிர்காலம் பெரும் ஆபத்தில் உள்ளது. இந்தியாவிலேயே அரியானாவில்தான் வேலையின்மை பிரச்சினை அதிகம் உள்ளது.ஜிஎஸ்டியை தவறான முறையில் அறிமுகப்படுத்தியது, பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்றவை மூலம் சிறு தொழில்களின் முதுகெலும்பை பா.ஜ.க. அரசு உடைத்தது. அடுத்ததாக அக்னிவீரா்கள் என்ற பெயரில் இளை ஞா்களை ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் அமா்த்தும் திட்டத்தை அமல்படுத்தியது. இதன் மூலம் அரியானா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த இளை ஞா்களின் ராணுவப் பணி லட்சியத்தை ஒன்றிய அரசு சிதறடித்தது.
வேளாண்மையை வைத்து தங்கள் வியாபாரத்தை பெருக்க நினைக்கும் பெரும் தொழிலதிபா்களுக்கு ஆதரவான சட்டங்களைக் கொண்டு வரவும் துணிந்தது. தேசத்துக்குப் பெருமை சோ்க்கும் விளையாட்டு வீரா்கள் விடயத்திலும் பா.ஜ.க. அரசு மோசமாக நடந்து கொண்டது.
வேலையின்மை பிரச்சினையால் இளைஞா்களில் ஒருபகுதியினா் போதைப்பொருளுக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடு கின்றனா். இதனால் நாட்டில் பல குடும்பங்கள் பிரச்சினைகளைச் சந்திக்கின்றன.
அரியானாவில் அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், 2 லட்சம் நிரந்தர வேலைவாய்ப்புகள் உடனடியாக உருவாக்கப்படும். அரியானாவை போதைப்பொருள்களின் பிடியில் இருந்து மீட்போம். இளைஞா்களின் ராணுவப் பணி நிரந்தரமாக்கப்படும். ஒவ்வொரு குடும்பத்தையும் வளமாக வாழவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.