ஈஷா மய்யத்தில் 2 இளம் பெண் துறவிகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை

viduthalai
3 Min Read

புதுடில்லி, அக்.4- கோவையில் உள்ள ஈஷா யோகா மய்யத்தில் சோதனை நடத்த காவல்துறையினருக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. அதே சமயம் 2 இளம் பெண் துறவிகள் தொடர்பான வழக்கு விசார ணையையும் உச்சநீதிமன்றம் ஏற்றது.

உயர்நீதிமன்றம் உத்தரவு

கோவை வடவள்ளியை சேர்ந்த விஞ்ஞானி காமராஜ் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில, ‘தன்னுடைய மகள்கள் கீதா, லதா ஆகியோரை யோகா கற்றுக் கொள்வதற்காக கோவை ஈஷா யோகா மய்யத்துக்கு அனுப்பினேன். ஆனால், வலுக்கட்டாயமாக துறவறம் செய்ய வைத்துள்ளனர். அவர்களை மீட்டுத்தர வேண்டும்’ என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஈஷா யோகா மய்யத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

மேலும் “இந்த வழக்கில் பல சந்தேகங்கள் உள்ளதால் பின்னணியை அறிய வேண்டியுள்ளது. எனவே ஈஷா யோகா மய்யம் மீது எத்தனை குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன? என்ற விவரங்களை காவல்துறையினர் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்’ என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர். உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் சமூகநலத்துறை, குழந் தைகள் நல பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் கடந்த 1 மற்றும் 2ஆம் தேதி என 2 நாட்கள் விசாரணை நடத்தினர்.

அப்போது அங்கிருந்தவர்களிடம் சுதந்திரமான சூழல் இங்கு உள்ளதா? போன்ற கேள்விகள் கேட்கப்பட்டது. 2 நாட்கள் நடத்தப்பட்ட விசாரணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு மனு

இந்நிலையில், சென்னை உயர்நீதின்ற உத்தரவுக்கு தடை கோரி ஈஷா அறக்கட்டளை சார்பில் வழக்குரைஞர் இ. சி.அகர்வாலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வில், மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

அப்போது ‘உயர்நீதிமன்ற உத்தர வின்பேரில் காவல்துறையினர் ஆசிரமத்துக்கு சென்று ஒவ்வொரு அறையிலும், ஒவ்வொருவரிடமும் விசாரித்து வருகிறார்கள். இது மத சுதந்திரம் தொடர்புடைய விவகாரம். சிலர் துறவிகளாக விரும்புகின்றனர். சிலர் சென்றுவிடுகின்றனர். சிலர் தங்கி விடுகின்றனர்.

ஆனால், இந்த விவகாரம் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வ தற்கானது அல்ல. எனவே உயர்நீதி மன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கவேண்டும்’ என அவர் வாதிட்டார்.

ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, சென்னை உயர்நீதிமன்ற மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும் என வாதிட்டார்.

இதையடுத்து தலைமை நீதி பதி, ‘ஈஷா யோகா மய்யத்திற்கு காவல் படையை இவ்வாறு அனுப்புவதை அனுமதிக்க முடியாது என தெரிவித் ததுடன், இந்த விவ காரம் தொடர்பாக கோவை மாவட்ட சட்டப் பணிகள் ஆணையத்தின் செயலாளரை ஈஷா மய்யத்துக்கு சென்று வழக்கில் தொடர்புடைய இரு பெண்களிடமும், ஏனைய பெண்களிடமும் ஆலோசனை நடத்தி அறிக்கை அளிக்க சொல்லலாமா? என கேட்டார்.

காணொலியில் ஆஜரான பெண்துறவி

இதைத்தொடர்ந்து, அந்த இரு பெண் துறவிகளில் ஒரு வர் காணொலியில் ஆஜராகி, இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி ஈஷா மய்யத்தில் சொந்த விருப்பத் தின் தங்கி இருப்பதாகவும், கடந்த 8 ஆண்டுகளாக தந்தை தொந்தரவு அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சித்தார்த்லூத்ரா ஆஜராகி, ‘ஈஷா மய்யத்துக்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக்குழு, மாவட்ட சமூகநல அலுவலர் ஆகியோருடன் 150 காவல்துறையினர் மட்டுமே சென்றதாக வாதிட்டதுடன், இந்த வழக்கில் ஒன்றிய அரசின் தலையீட்டுக்கு ஆட்சேபனையும் தெரிவித்தார். இருப்பினும் ஒன்றிய அரசையும் இணைக்க கோரி ஈஷா மய்யத்தின் மேல்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளதாக மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி தெரிவித்தார்.

உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி தமிழ்நாடு காவல்துறைமேற்படி எந்தவித விசாரணையும் நடத்தக்கூடாது. நிலவர அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிடப்படுகிறது.

ஈஷா யோகா மய்யத்திலுள்ள 2 மகள்கள் தொடர்பாக தந்தையின் ஆட்கொணர்வு மனு மீதான விசா ரணையை சென்னை உயர்நீதிமன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்துக்கு மாற்றி உத்தரவிடப்படுகிறது. வழக்கு விசாரணை வருகிற 18ஆம் தேதிக்கு தள்ளி வைப்பதாக உத்தரவிட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *