சென்னை, ஆக.17- தமிழ்நாட்டில் அக்டோபர் 29ஆம் தேதி முதல் நவம்பர் 28ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மேற்கொள்ளலாம் என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தோதல் அதிகாரி சத்யபிரதா சாகு 16.8.2024 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
1.1.2025-அய் தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தத்தை இந்திய தேர்தல் ஆணையம் கீழ்க்காணும் அட்டவணையின்படி அறிவித்துள்ளது. அதன்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலரால் வீட்டுக்கு வீடு சரிபார்ப்பு, வாக்குச்சாவடிகளை திருத்தியமைத்தல், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் உள்ள முரண்பாடுகளை நீக்குதல் போன்ற பணிகள் வருகிற 20.8.2024 முதல் 18.10.2024 வரை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் 29.10.2024இல் வெளியிடப்படும். 29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கலாம். ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் மீதான தீர்வு 24.12.2024 காணப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 06.1.2025 வெளியிடப்படும்.
29.10.2024 முதல் 28.11.2024 வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படவோ அல்லது வாக்காளர் பட்டியலில் ஏற்கெனவே இடம்பெற்றுள்ள பதிவுகளில் நீக்கம், திருத்தங்கள், இடமாற்றம் செய்யவோ அல்லது ஆதார் எண்ணை இணைக்க விரும்பும் வாக்காளர் தகுதியுள்ள குடிமக்கள், படிவங்கள் 6, 6பி, 7 அல்லது 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்கலாம். சிறப்பு முகாம் நாட்களில் அந்தந்த வாக்குச் சாவடி அமைவிடங்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அளிக்கலாம்.
1.1.2025, 1.4.2025, 1.7.2025 மற்றும் 1.10.2025 ஆகிய தேதிகளில் 18 வயது பூர்த்தி அடைபவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும், பெயர் சேர்க்க படிவம் 6ல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நாகை- இலங்கை கப்பல் போக்குவரத்து
மீண்டும் தொடங்கியது
நாகப்பட்டினம், ஆக.17- நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு 50 பயணிகளுடன் நேற்று (16.8.2024) சிவகங்கை கப்பல் சென்றடைந்தது. பலமுறை நிர்வாக பிரச்சினையால் நிறுத்தப்பட்ட நாகை-இலங்கைக்கு கப்பல் சேவை நேற்று முதல் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு சிவகங்கை என்ற பெயரில் கப்பல் சேவை நேற்றுதொடங்கியது.
கப்பலில் பயணம் செய்ய 4 இலங்கை தமிழர்கள் உட்பட 50 பேர் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று காலை 7 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வந்தனர். இவர்களிடம் சோதனைகள் நடத்தப்பட்டது. சோதனைகள் அனைத்தும் நிறைவு பெற்று பயணிகள் 11 மணிக்கு கப்பலில் அமர வைக்கப்பட்டனர். இதன்பின்னர் 12.20 மணிக்கு நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து பயணிகள் கப்பல் புறப்பட்டது.
கப்பல் சேவையை நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ், புதுச்சேரி மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், நாகப்பட்டினம் நகர்மன்ற தலைவர் மாரிமுத்து ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட கப்பல் 4 மணி நேர பயணத்திற்கு பின்னர் காங்கேசன் துறைக்கு 4.30 மணிக்கு சென்றதது. இன்று (17.8.2024) காலை காங்கேசன் துறையில் இருந்து காலை 10 மணிக்கு சிவகங்கை கப்பல் புறப்பட்டு நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு 2 மணிக்கு வரும்.
இளம் குற்றவாளிகளுக்கு பிணை மறுக்கக்கூடாது
உச்சநீதிமன்றம் உத்தரவு
புதுடில்லி, ஆக.17- ராஜஸ்தான் மாநிலத்தில், ஒரு சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு 15ஆம் தேதி ஒரு சிறுவன் கைது செய்யப்பட்டான். அவன் ஓராண்டாக சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளான். அவனது பிணை மனுவை இளம் குற்றவாளிகள் நீதி வாரியமும், ராஜஸ்தான் உயர்நீதிமன்றமும் அடுத்தடுத்து தள்ளுபடி செய்தன. அவன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தான்.
அந்த மனு, நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, அகஸ்டின் ஜார்ஜ் மசி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. இவ்வழக்கில் நீதிபதிகள் பரபரப்பு தீர்ப்பு அளித்துள்ளனர்.
தீர்ப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
2015ஆம் ஆண்டின் இளம் குற்றவாளிகள் நீதி சட்டத்தின் 12ஆவது பிரிவில் துணை பிரிவு 1இன்படி, ஒரு இளம் குற்றவாளி பிணையில் விடுவிக்கப்பட்டால் பிரபல குற்றவாளியுடன் சேர்ந்து விடுவார் என்றோ, அவருக்கு மனரீதியான, உடல்ரீதியான ஆபத்து ஏற்படும் என்றோ, அவரது விடுதலை, நீதியை தோற்கடித்து விடும் என்றோ கருதப்பட்டால் ஒழிய அவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டும்.
ஆனால், மனுதாரரான இளம் குற்றவாளியின் பிணையை நிராகரித்த இளம் குற்றவாளிகள் நீதி வாரியமோ, உயர்நீதிமன்றமோ இந்த விதிமுறையை பின்பற்றவில்லை. இதில் கூறப்பட்ட காரணங்களை பதிவு செய்யவில்லை. இத்தகைய சூழ்நிலையில், இளம் குற்றவாளிக்கு பிணை மறுக்கக்கூடாது.
ஆகவே, உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்யப் படுகிறது. அவரை உத்தரவாத தொகையின்றி. பிணையில் விடுதலை செய்ய வேண்டும். அதே சமயத்தில், அவரை தனது கண்காணிப்பில் வைத்து, அவரது நடத்தை குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஒரு நன்னடத்தை அதிகாரியை நியமிக்கலாம்.
– இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது