ஒன்றிய பட்ஜெட் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும் முதுகிலும் குத்தி விட்டது ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்காதது ஏன்? அக்னிபாதை திட்டம் குறித்தும் ராகுல் காந்தி கடுமையான விமர்சனம்

viduthalai
3 Min Read

புதுடில்லி, ஜூலை 30 ஒன்றியத்தில் ஆளும் பாஜக அரசு, ஒன்றிய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்திவிட்டது என்று மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதம் நடந்து வருகிறது. மக்களவையில் பட்ஜெட் தொடர்பான தனது கருத்துகளை முன்வைத்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று (29.7.2024) பேசியதாவது:

தாமரை வியூகம்

மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் சிக்கி அர்ஜுனனின் மகன் அபிமன்யு உயிரிழந்தார். சக்கர வியூகத்துக்கு மற்றொரு பெயர் பத்ம வியூகம். பத்ம வியூகம் என்றால் தாமரை வியூகம். இந்த 21-ம் நூற்றாண்டில் புதிய சக்கர வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், தொழிலதிபர்கள் அதானி, அம்பானி ஆகிய 6 பேர் சேர்ந்து இதை அமைத்துள்ளனர். இந்த சக்கர வியூகத்தில் இந்திய இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், குறு, சிறு தொழில் முனைவோர் சிக்கி யுள்ளனர். இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக உறுதி செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரினர். ஆனால் ஒன்றிய அரசு, விவசாயிகளின் நலனுக்கு எதிராக 3 புதிய சட்டங்களை இயற்றியது. இதை எதிர்த்து போராட்டம் நடத்திய விவசாயிகள், டில்லி எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பிரதமர் மோடியை அவர்கள் சந்திக்க விரும்பினர். ஆனால், பிரதமர் மோடி அவர்களை சந்திக்க விரும்பவில்லை.

இந்தியாவில் ஏ1, ஏ2 தொழிலதிபர்கள் (அம்பானி, அதானி) மட்டுமே கோலோச்சுகின்றனர். விமான நிலையங்கள், தொலைத் தொடர்பு, ரயில்வே என அனைத்து திட்டங்கள், ஒப்பந்தங்களும் அவர்களுக்கு மட்டுமே கிடைக்கின்றன.

நாட்டின் செல்வத்தில் பெரும் பகுதி அவர்களிடம் இருக்கிறது. அவையில் இல்லாதவர்களின் பெயர்களை குறிப்பிடக்கூடாது என்று அவைத் தலைவர் அறிவுறுத்தி உள்ளார். எனவே, அவர்களை ஏ1, ஏ2 என்று குறிப்பிடுகிறேன்.
மூத்த அதிகாரிகள் சுமார் 20 பேர் சேர்ந்து ஒன்றிய பட்ஜெட்டை தயார் செய்துள்ளனர். இதில் 2 பேர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள். அவர்கள்கூட பட்ஜெட் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் இடம்பெற வில்லை. அதற்கான ஒளிப் படத்தை அவையில் ஆதாரமாக காட்டுகிறேன். நாட்டின் மக்கள்தொகையில் தாழ்த்தப்பட்டோர் பிற்படுத்தப்பட்டோர் 73 சதவீதம் பேர் உள்ளனர். அவர்களை பாஜக அரசு அவமரியாதை செய்து உள்ளது.

கரோனா பெருந்தொற்று காலத்தில் பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்புமாறு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். நாட்டு மக்கள் அனைவரும், குறிப்பாக நடுத்தர வர்க்க மக்கள் பாத்திரங்களை தட்டி ஒலி எழுப்பினர். அலைபேசியில் ஒளியை ஒளிரச் செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். அதையும் நடுத்தர வர்க்க மக்கள் செய்தனர். ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு, ஒன்றிய பட்ஜெட் மூலம் நடுத்தர வர்க்கத்தின் நெஞ்சிலும், முதுகிலும் குத்தி விட்டது.

கேள்விக்கு பதில் இல்லை

பட்ஜெட்டில் எங்கள் பங்கு எங்கே என்று 95 சதவீத மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களது கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை. சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால் நாட்டில் மிகப்பெரிய மாற்றம் நிகழும். இதனாலேயே ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த ஒன்றிய அரசு அஞ்சுகிறது.

ஆளும்கட்சியினர், இந்து மதத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை. அனைவரையும் அரவணைத்து செல்வதே இந்து மதம். யார் வேண்டு மானாலும் சிவ பக்தியில் இணையலாம். இப்போது சிவ பக்தர்களுக்கும், சக்கர வியூகத்தை உருவாக்கியவர்களுக்கும் இடையே போர் நடைபெறுகிறது. இந்த போரில், நீங்கள் உருவாக்கிய சக்கர வியூகத்தை நாங்கள் உடைத்து எறிவோம். அவையில் ஏ1, ஏ2 (அம்பானி, அதானி) குறித்து பேசக்கூடாது என்று அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகிறார். அவர்களை பற்றி பேசக்கூடாது என மேலிடத்தில் இருந்து உத்தரவு வந் துள்ளது. அதையே ரிஜிஜு பிரதிபலிக் கிறார்.

முப்படைகளிலும் அக்னி பாதை திட்டத்தில் வீரர்கள் சேர்க்கப்படு கின்றனர். நாட்டுக்காக அவர்கள் உயிர்த் தியாகம் செய்யும்போது, அரசு தரப்பில் எந்த இழப்பீடும் வழங்கப்படுவது இல்லை. காப்பீடு தொகை மட்டுமே வழங்கப்படுகிறது. இவ்வாறு ராகுல் பேசினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *