மும்பை, ஜூலை 18- பட்டய கணக்காளர் (சி.ஏ.) தேர்வானது மிகவும் கடினமானது. குடிமைப் பணி தேர்வுகளுக்கு இணையான இந்தத் தேர்வில் வெற்றி பெறுவோர் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருக்கும்.
கடந்த மே மாதம் நடைபெற்ற பட்டய கணக்காளர் இடைநிலை மற்றும் இறுதித்தேர்வு முடிவுகளை இந்திய பட்டயகணக்காளர்கள் நிறுவனம் கடந்த 11ஆம் தேதி வெளியிட்டது. இந்த சி.ஏ. தேர்வில் மும்பையைச் சேர்ந்த காய்கறி விற்கும் மாவஷி என்ற பெண்ணின் மகன் யோகேஷ் வெற்றி பெற்றுள்ளார்.
இது தொடர்பாக மகாராட்டிர அமைச்சர் ரவீந்திர சவாண் தனது எக்ஸ் சமூகவலைதள பக்கத்தில் ஒரு காட்சிப்பதிவைப் பகிர்ந்துள்ளார். இத்துடன், “மனவுறுதி மற்றும் கடின உழைப்பின் வலிமையால், யோகேஷ் கடினமான சூழ்நிலைகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றுள்ளார். அவரது தாயின் ஆனந்தக் கண்ணீர் கோடிக்கணக்கில் மதிப்புடையது. சி.ஏ. போன்ற கடினமான தேர்வில் தேர்ச்சி பெற்ற யோகேஷை எவ்வளவு பாராட்டினாலும் போதாது” என பதிவிட் டுள்ளார்.
அந்தக் காட்சிப்பதிவில், மும்பையின் டோம்பிவிலி பகுதியில் உள்ள கிர்னார் மிட்டாய் கடை அருகே காய்கறி விற்பனையில் ஈடுபட்டுள்ள தாயை நோக்கிச் செல்லும் யோகேஷ், தேர்வில் வெற்றி பெற்ற தகவலை சொல்கிறார்.
உடனே அவர் எழுந்து வந்து மகனை ஆரத் தழுவி உணர்வுப்பூர்வமாக ஆனந்தக் கண்ணீர் வடிக்கிறார். அவருடைய உணர்ச்சி வெளிப்பாடு விலைமதிப்பற்றதாக இருந்தது.