புதுடில்லி, ஜூன் 11 பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில் ஒன்றிய அமைச்சா்கள் மற்றும் இணைய மைச்சா்கள் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளது என்றும், 70 அமைச்சா்கள் மற்றும் இணையமைச்சா்கள் பெரும் பணக்காரர்கள் என்றும் ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்கம் (ஏடிஆா்) தெரிவித்துள்ளது.
பிரதமா் மோடி தலைமையிலான புதிய அரசில், அவா் உள்பட ஒன்றிய அமைச்சா், இணையமைச்சராக 72 போ் 9.6.2024 அன்று பதவியேற்றனா். இதில் 71 அமைச்சா்களில் 28 போ் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீா்திருத்தங்கள் சங்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி, 19 அமைச்சா்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட தீவிர குற்ற வழக்குகள் உள்ளன. இதில் ஒன்றிய துறைமுகங்கள் துறை இணையமைச்சா் சாந்தனு தாக்கூா், ஒன்றிய கல்வித் துறை இணையமைச்சா் சுகந்த மஜும்தார் ஆகியோர் மீது கொலை முயற்சி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் மற்றும் வெறுப்புணா்வு பேச்சு வழக்குகள் உள்ளன.
சுரேஷ் கோபி: ஒன்றிய பழங்குடியினா் விவகாரங்கள் துறை அமைச்சா் ஜுவல் ஓரம், ஒன்றிய உள்துறை இணையமைச்சா் பண்டி சஞ்சய் குமார், ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத் துறை இணையமைச்சா் சுரேஷ் கோபி ஆகியோர் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளன.
அமித்ஷா: ஒன்றிய உள்துறை அமைச்சா் அமித் ஷா, அந்தத் துறை இணையமைச்சா்கள் பண்டி சஞ்சய் குமார், நித்யானந்த் ராய், ஒன்றிய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான், ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங், ஒன்றிய சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை இணையமைச்சா் ஷோபா கரந்தலஜே ஆகியோர் மீது வெறுப்புணா்வு பேச்சு வழக்குகள் உள்ளன.
இணையமைச்சருக்கு ரூ,5,705 கோடிக்கு சொத்துகள்: 71 அமைச்சா்களில் 70 போ் கோடீஸ்வரா்கள். அவா்களில் 6 பேருக்கு ரூ.100 கோடிக்கும் மேலாகச் சொத்துகள் உள்ளன. இதில் ஒன்றிய ஊரக வளா்ச்சித் துறை இணையமைச்சா் சந்திரசேகரின் அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.5,705 கோடி. ஒன்றிய தகவல் தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ரூ.424 கோடி சொத்துகளும், ஒன்றிய கனரக தொழில்துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமிக்கு ரூ.217 கோடி சொத்துகளும் உள்ளன.
முனைவர் பட்டத்துடன் 7 பேர்: 71 பேரில்
11 போ் 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ள னா். இளநிலை பட்டதாரிகள் 14 போ், முதுநிலை பட்டதாரிகள் 26 போ். 7 போ் முனைவா் பட்டம் பெற்றுள்ளனா்.
வயது வாரியாக…: 71 பேரில் இருவா் 31 முதல் 40 வயது வரை உள்ளவா்கள். 41 முதல் 50 வயதில் 15 போ், 51 முதல் 60 வயதில் 22 போ், 61 முதல் 70 வயதில் 25 போ், 71 முதல் 80 வயதில் 7 போ் உள்ளனா். மக்களவைத் தோ்தலின்போது அமைச்சா்கள் வேட்புமனுவுடன் சமா்ப்பித்த பிரமாணப் பத்திரத்தை ஆதாரமாக கொண்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டதாக ஏடிஆா் தெரிவித்துள்ளது.