சிறீநகர்,மே 31 காஷ்மீரில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பக்தர்கள் பலியாகினர்.
150 அடி ஆழ பள்ளத்தில் கவிழ்ந்தது காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள ஷிவ் கோரி குகை பகுதியிலுள்ள சிவன் கோவிலுக்கு வழிபட பலரும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் செல்கின்றனர்.
அந்த வகையில் அரியானா மாநிலம் குருஷேத்ரா மாவட்டத்தில் இருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 80 பேர் பேருந்தில் காஷ்மீரின் ஷிவ் கோரி குகை கோவிலுக்கு சென்று கொண்டிருந்தனர்.
இந்த பேருந்து நேற்று (30.5.2024) காலை காஷ்மீரின் ஜம்மு மாவட்டத்தில் உள்ள அக்னூரில் மலைப்பாங்கான சாலையின் ஒரு வளைவில் திரும்பியபோது பேருந்து திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் சாலையில் கவிழ்ந்த பேருந்து அங்கிருந்து உருண்டு சுமார் 150 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்து நொறுங்கி உருக்குலைந்துபோனது. பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு உள்ளூர் மக்கள் உதவிக்கு ஓடி சென்றனர்.
அவர்கள் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். எனினும் இந்த கோர விபத்தில் 22 பேர் நிகழ்வு இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
52 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு 5 சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
படுகாயம் அடைந்தவர்களில் பலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
கோவிலுக்கு சென்ற பக்தர்களின் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 22பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.