பெரியாரின் சமூக நீதி சமத்துவத்திற்கும் – ஆர்.எஸ்.எஸ்.சின் சித்தாந்தத்திற்கும் இடையே நடக்கும் தத்துவ போராட்டம்தான் நடக்கவிருக்கும் மக்களவைத் தேர்தல்!
நெல்லை தேர்தல் பரப்புரையில் ராகுல் காந்தி முழக்கம்
நெல்லை, ஏப் 13- பெரியாரின் சமூகநீதி சமத்துவத்திற்கும் ஆர்எஸ்எஸ்சின் சித்தாந்தத்திற்கும் இடையே நடக்கும் தத்துவ போராட்டம் தான் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தல் என்றார் ராகுல் காந்தி அவர்கள்.
நெல்லையில் பிரச்சாரப் பொதுக்கூட்டம்
இந்தியா கூட்டணி சார்பில் நெல்லை பாளையங் கோட்டை ‘பெல்’ மைதானத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டம் நேற்று (12-4-2024) மாலை நடை பெற்றது. இதில் காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டு இந்தியா கூட்டணி வேட்பாளர் கள் ராபர்ட் புரூஸ் (நெல்லை), விஜய்வசந்த் (கன்னியா குமரி), கனிமொழி (தூத்துக்குடி) ஆகியோரை ஆதரித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு ஒவ்வொருமுறை வரும் போதும், தமிழ்நாட்டு மக்களை மனமார நேசிக்கிறேன். தமிழ் நாட்டு மக்களின் பண்பாடு, கலாச்சாரம், மொழி என்னை மிகவும் ஈர்த்த ஒன்று. தமிழ் மொழியை படிக்காவிட்டா லும், அதன் சரித்திரத்தை படித்துப் பார்த்து, அதை இந் தியாவின் பிரதிபலிக்கும் கண்ணாடியாக பார்க்கிறேன்.
உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாக உள்ள தந்தை பெரியார்!
உலகின் மிகப்பெரிய ஜாம்பவனாக உள்ள பெரியாரை இந்த மண்ணிலிருந்து தந்து உள்ளீர்கள். அதேபோல் காமராஜர், அண்ணா, கலைஞர் போன் றோரையும் தந்து உள்ளீர்கள். சமூகநீதியின் பாதையில் எப்படி நடக்கவேண்டும் என்று இந்திய மக்களுக்கு தெரி வித்துள்ளீர்கள். அதனால் தான் தமிழ்நாட்டில் இருந்து ‘பாரத் ஜோடா’ நடைப்பயணத்தைத் தொடங்கினேன். கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 4 ஆயிரம் கிலோ மீட் டர் தூரம் நடந்து மாபெரும் தத்துவங்களை எடுத்துக் கூறினேன். தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டுக்குத் தலை வணங்குகிறேன்.
தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டுள்ள உறவு, அரசி யல் உறவு அல்ல. இது குடும்ப உறவு. தற்போது தத்துவ போர் நடந்து வருகிறது. பெரியார் போதித்த சமூக நீதி, சமத்துவத்துக்கும் எதிரே ஆர்.எஸ்.எஸ். மற்றும் நரேந் திர மோடியின் வெறுப்புக்கும், துரோகத்துக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
தமிழ் என்பது மொழியல்ல; ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும் வாழ்வியல் முறை!
இந்திய நாட்டில் பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், பண்பாடுகள் உள்ளன. ஒவ்வொன்றும் எதற்கும் தாழ்ந் ததல்ல. தமிழ் என்பது மொழியல்ல. ஒவ்வொருவரும் புரிந்துகொள்ளும் வாழ்வியல் முறை. தமிழ் மீதான தாக்குதலை தமிழ்நாட்டின் மீதான தாக்குதலாகவே பார்க்கிறேன். தமிழ்மொழி மட்டுமல்லாமல் இந்தியாவில் பேசப்படும் பல்வேறு மொழிகளின்றி இந்நாட்டின் சிறப்பு இருக்க முடியாது. இந்தியாவில் இருக்கிற கலாச்சாரம், பண்பாடும் ‘புனித’மானது. ஆனால், ‘‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தலைவர்” என்பதிலேயே பாரதீய ஜனதா குறியாக இருக்கிறது.
இந்த நாட்டில் உள்ள இளைஞர்களில் 83 சதவீதம் பேர் வேலைவாய்ப்பு இன்றி தவித்து வருகிறார்கள். ஆங்கிலேயர் காலத்தைக் காட்டிலும் இப்போதைய இந்தியா சமச்சீரற்ற இந்தியாவாக உள்ளது.
ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை
நாட்டில் 25 பெரிய பணக்காரர்கள் 70 சதவீதம் செல்வத்தை தங்கள் கையில் வைத்துள்ளனர். ஒவ்வொரு நாளும் 30 இந்திய விவசாயிகள் தற்கொலை செய்து வருகிறார்கள். ஆனால், விவசாயிகளின் கடனை தள்ளு படி செய்ய பிரதமர் தயாராக இல்லை. ஆனால், பணக் காரர்களுக்கு ரூ.16 லட்சம் கோடி கடனை பிரதமர் தள்ளுபடி செய்துள்ளார்.
சி.பி.அய்., வருமானவரித் துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை எதிர்க்கட்சியினரை வீழ்த்தும் அரசியல் ஆயுதமாக பயன்படுத்துகிறார்கள். நாட்டின் தேர்தல் ஆணையரை பிரதமர் சுட்டிக்காட்டும் நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம், எதிர்க் கட்சி தலைவர்கள், முதலமைச்சர்கள் சிறையில் அடைக் கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசு வெள்ள நிவாரணத்துக்குப் பணம் கேட்டால், மோடி அரசு வழங்க மறுக்கிறது. தமிழர்களின் வேண்டுகோள் மறுக்கப்படுகிறது. தமிழ்நாட்டு மீனவர் கள் உதவி கேட்ட போது ஒன்றிய அரசு எதுவும் செய்ய வில்லை. விவசாயிகள் டில்லி ஜந்தர்மந்தருக்கு வந்து போராடியும் எதுவும் கிடைக்கவில்லை.
‘நீட்’ தேர்வு மாநில அரசின் முடிவுப்படியே செயல்படுத்தப்படும்!
தமிழ்நாட்டு மாணவர்களுக்கு ‘நீட்’ தேர்வு மிகப் பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை ‘நீட்’ தேர்வு மாநில அரசின் முடிவுப் படியே செயல்படுத்தப்படும்.
தமிழ்நாடு அரசு விரும்பாவிட்டால், அவர்களே அவர்களது கல்வியை முடிவு செய்து கொள்ளலாம். ‘நீட்’ தேர்வு ஏழை மக்களுக்கு எதிரானது. அதுகுறித்து நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். நாங்கள் அந்த முடிவை ஏற்றுக் கொள்வோம்.
உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழ்மொழியையோ, கலாச்சாரத்தையோ அழிக்க முடியாது என்று உறுதியளிக்கிறேன்
கலாச்சாரம், மொழியை பாதுகாக்க தொடுக்கப்படும் போரே இந்தத் தேர்தல். நானும், காங்கிரஸ் கட்சியும் மக்களுடன் இருப்போம். நரேந்திர மோடி மட்டுமல்ல, உலகின் எந்தவொரு சக்தியாக இருந்தாலும் தமிழ்மொழி யையோ, கலாச்சாரத்தையோ அழிக்க முடியாது என்று உறுதியளிக்கிறேன். இந்திய அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்கத் தொடுக்கப்படும் இந்தப் போரில் இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்.
-இவ்வாறு ராகுல் காந்தி அவர்கள் பேசினார்.
முன்னதாக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை வரவேற்றுப் பேசினார். முடிவில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம். தென்னரசு நன்றி கூறினார்.