உளுந்தூர்பேட்டை, நவ.26 கல்லக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில் இரண்டாம் நாள் பிரச்சாரம் 22.11.2026 அன்று உளுந்தூர்பேட்டை நகர, ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் கோ.சா.பாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
முதல் கூட்டம் மாலை 4 மணிக்குக் நாராயணன் திரையரங்கு பேருந்து நிலையம் அருகிலும், அதனைத் தொடர்ந்து இரண்டாம் கூட்டம் இரவு 7 மணிக்கு ஆசாத் தெரு முனையிலும் சிறப்பாக நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றிய திராவிடர் கழகத் தலைவர் செல்வ சக்திவேல் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் அரங்க.பரணிதரன் முன்னிலை வகித்தார்.
கூட்டங்களின் தொடக்கத்தில் ஆத்தூர் விடுதலை சந்திரனின் ‘‘மந்திரமா? தந்திரமா?’’ மூட நம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது. மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் இராம.அன்பழகன் மூட நம்பிக்கைகளுக்கு எதிராக தனது நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்து சிறப்புரையாற்றினார். திராவிட மாணவர் கழகத் தோழர்கள் இரா.பிரபாகரன், இரா. இளமாறன், நெய்வேலி பாவேந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சில நாட்களுக்கு முன்பு மாந்திரீக மூடநம்பிக்கைச் செயல்களாக அச்சத்தில் இருந்த மக்களிடையே திராவிடர் கழகத்தின் தொடர்ப் பிரச்சாரம் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
