ஏ.அய். வந்தால் நமக்கு வேலை இருக்குமா? தமிழில் பயன்படுத்தலாமா? எங்கிருந்து தொடங்குவது? (8)

- Advertisement -

இரவிசங்கர் அய்யாகண்ணு

ஏ.அய். வந்தால் வேலை இருக்குமா? தமிழில் பயன்படுத்தலாமா? எங்கிருந்து தொடங்குவது? ‘கேலக்ஸி புக்ஸ்’ பாலாஜி பாஸ்கரனுடனான உரையாடலிலிருந்து பொதுவான 12 கேள்வி களுக்குப் பதில்கள்.

‘கேலக்ஸி புக்ஸ்’ நண்பர் பாலாஜி பாஸ்கரனுடன் அண்மையில் ஒரு யூடியூப் நேரலையில் உரையாடினேன். ஏ.அய். என்றால் என்ன என்பதில் தொடங்கி, வேலைவாய்ப்பு, தமிழ், படைப்பாற்றல், மனித உறவுகள் என்று பல பக்கங்களிலும் பேச்சு சென்றது.

அவர் கேட்ட கேள்விகள் பலவும், நண்பர்கள் என்னிடம் அடிக்கடி கேட்பவைதான்.

“இதெல்லாம் தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை பார்க்கிறவர்களுக்குத்தானே?”

“இனிமேல் எல்லாவற்றையும் ஏ.அய். செய்து விட்டால் நாம் என்ன செய்வது?”

“கற்றுக்கொள்ள ஆசையாக இருக்கிறது. ஆனால், எங்கிருந்து தொடங்குவது?”

இந்தக் கேள்விகள் உங்களுக்கும் இருந்தால், வாருங்கள். கொஞ்சம் பேசுவோம்.

‘கேலக்ஸி புக்ஸ்’ பாலாஜி பாஸ்கரனுடன் முழு நேர்காணல்

ஆசிரியர் அறிக்கை

  1. முதலில், ஏ.அய். என்றால் என்ன?

ஒரு விவசாயி வானத்தைப் பார்த்துவிட்டு, “இன்றைக்கு மழை வரும்” என்று சொல்கிறார். எப்படி அவரால் சொல்ல முடிகிறது?

பல ஆண்டுகளாக வானத்தையும் மழையையும் பார்த்திருக்கிறார். எந்த மாதிரியான சூழலில் என்ன நடக்கும் என்ற பட்டறிவு அவருக்கு இருக்கிறது.

ஏ.அய்.யைப் புரிந்துகொள்ளவும் இதை ஓர் எளிய எடுத்துக்காட்டாக வைத்துக்கொள்ளலாம். நிறைய எழுத்துகள், படங்கள், ஒலிகள் போன்ற தரவுகளைக் கொண்டு ஒரு கணினி அமைப்புக்குப் பயிற்சி அளிக்கிறார்கள். அவற்றில் உள்ள தொடர்புகளையும், ஒழுங்குகளையும் கற்றுக்கொண்டு, புதிய கேள்விக்குப் பதில் தருவது, ஒரு படத்தில் இருப்பதை அடையாளம் காண்பது போன்ற வேலைகளை அது செய்கிறது.

மனிதர்கள் கற்றுக்கொள்வதும் ஏ.அய்.க்குப் பயிற்சி அளிப்பதும் அப்படியே ஒன்றல்ல. ஆனால், “இது என்னவோ நமக்குப் புரியாத மாயவித்தை” என்று நினைக்கத் தேவையில்லை.

  1. நான் ChatGPT பயன்படுத்தியதே இல்லையே. எனக்கும் ஏ.அய்.-க்கும் என்ன தொடர்பு?

நீங்கள் ஏ.அய். பயன்படுத்தாவிட்டாலும், ஏ.அய். உங்களைப் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

யூடியூபில் ஒரு காட்சிப் பதிவைப் பார்க் கிறீர்கள். அடுத்து அதே மாதிரியான காட்சிப் பதிவுகள் வருகின்றன. Netflix-இல் ஒரு படம் பார்த்தால், உங்களுக்குப் பிடிக்கக் கூடிய இன்னொரு படத்தைப் பரிந்துரைக் கிறது. மின்னஞ்சலில் வேண்டாத செய்திகள் தனியாகப் பிரிக்கப்படுகின்றன.

இதுபோன்ற பல சேவைகளின் பின்னணியில் ஏ.அய்., machine learning போன்ற நுட்பங்கள் இருக்கின்றன.

அதனால், ஏ.அய். நம் வாழ்க்கைக்குள் இனிமேல்தான் வரப்போகிறது என்று இல்லை. ஏற்கெனவே இருக்கிறது. இப்போது நாமே அதனுடன் நேரடியாகப் பேசி வேலை வாங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

  1. Generative A.I., Agentic A.I. என்று சொல்கிறார்களே. என்ன வேறுபாடு?

பெயர்களைப் பார்த்துப் பயப்பட வேண்டாம்.

ஒரு கடிதம், படம், பாடல், காட்சிப் பதிவு என்று புதிதாக ஒன்றை உருவாக்கிக் கொடுப்பதை Generative ஏ.அய். என்று சொல்கிறோம்.

“எனக்கு விடுப்புக் கடிதம் எழுதிக்கொடு” என்று கேட்டால், எழுதித் தருகிறது.

Agentic AI-யில், ஒரு குறிக்கோளைக் கொடுத்து வேலை செய்யச் சொல்கிறோம். அதற்குத் தேவையான கருவிகளும் அனுமதிகளும் இருந்தால், பல படிகளைக் கடந்து அந்த வேலையைச் செய்ய முயல்கிறது.

ஒரு பயண முகவரிடம், “இந்த நாளில் இந்த ஊருக்குப் போக வேண்டும். எனக்கு ஏற்ற பயண வாய்ப்புகளைப் பார்த்துச் சொல்லுங்கள்” என்போம் அல்லவா? அதுபோல.

ஒரு இணையதளம் வேண்டும் என்றால், அதன் தேவையைப் புரிந்துகொண்டு, code எழுதி, இயக்கிப் பார்த்து, திருத்தும் வேலைகளையும் ஒரு coding agent செய்யலாம்.

ஆனால், வேலை செய்து முடித்துவிட்டதாக அது சொல்வதோடு நம் வேலை முடிந்துவிடாது. சரியாகச் செய்திருக்கிறதா என்று பார்க்க வேண்டும்.

  1. இதைப் பயன்படுத்த ‘coding’ தெரிய வேண்டுமா? ஆங்கிலம் நன்றாகத் தெரியவேண்டுமா?

பொதுவான பயன்பாட்டுக்கு இரண்டுமே கட்டாயமில்லை.

தமிழிலேயே உங்கள் தேவையைச் சொல்லலாம். தட்டச்சு செய்வது சிரமமாக இருந்தால், குரல் வழியாகப் பேசும் வசதியையும் பயன்படுத்திப் பார்க்கலாம்.

முதலில், “சரியான ‘prompt’ எழுதத் தெரிய வேண்டுமே” என்று தயங்காதீர்கள். ஒரு நண்பரிடம் உங்கள் வேலையை விளக்குவதுபோலச் சொல்லுங்கள்.

“நான் இந்த வேலை செய்கிறேன். தினமும் இந்தச் சிக்கல் வருகிறது. இப்போது இப்படிச் சமாளிக்கிறேன். இதை இன்னும் எளிதாகச் செய்ய முடியுமா?”

இவ்வளவு சொன்னாலே ஓர் நல்ல உரையாடலைத் தொடங்க முடியும்.

தமிழில் வரும் பதில்களிலும், குறிப்பாகப் படங்களில் இடம்பெறும் தமிழ் எழுத்துகளிலும் பிழைகள் இருக்கலாம். படித்துப் பார்த்துத் திருத்திக்கொள்ள வேண்டும்.

  1. சரி, என் வாழ்க்கையில் இதை எதற்குப் பயன்படுத்துவது?

ஏ.அய். கற்றுக்கொள்வதை நான் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொள்வதுடன் ஒப்பிடுவேன்.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொடுக்கலாம். அதை வைத்துக்கொண்டு நீங்கள் எந்த ஊருக்குப் போக வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். அதுபோலத்தான் இதுவும்.

ஒருவருக்கு அலுவலக வேலைகளை ஒழுங்குபடுத்த வேண்டும். இன்னொருவருக்குத் தன் தொழிலுக்கான விளம்பரங்களை உருவாக்க வேண்டும். ஒரு ஆசிரியருக்குப் பாடத்தைப் பல விதமாக விளக்க வேண்டும். ஒரு வாசகருக்குக் கடினமான பகுதியைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எங்கள் வகுப்பில் கலந்துகொண்ட நண்பர் ஒருவர், காகிதத்தில் எழுதி வைத்துக்கொண்டிருந்த தனது வேலைப் பட்டியலை நிர்வகிக்க, தனக்குத் தேவையான ஓர் appஅய் உருவாக்கிப் பார்த்தார்.

அவருடைய தேவை அவருக்குத் தெரிந்திருந்தது. அதைச் செய்து பார்க்க ஏ.அய். உதவியது.

“ஏ.அய்.-யில் என்னென்ன செய்யலாம்?” என்று பொதுவாகக் கேட்பதுடன், “நான் செய்யும் இந்த வேலையில் இது எப்படி உதவும்?” என்றும் கேட்டுப் பாருங்கள்.

  1. A.I. வந்தால் வேலை போய்விடுமா?

இந்தக் கேள்வியை அலட்சியமாக எடுத்துக்கொள்ள முடியாது. குறிப்பாக, பல ஆண்டுகளாக ஒரு துறையில் வேலை செய்கிறவர்களுக்கு இருக்கும் பதற்றம் புரிகிறது.

வேலைவாய்ப்பில் பாதிப்பு இருக்காது என்று நான் சொல்ல மாட்டேன். சில வேலைகள் குறையலாம். சில வேலைகளின் தன்மை மாறலாம். குறைவான மனிதர்களைக் கொண்டு அதிக வேலை செய்யும் சூழலும் உருவாகலாம்.

அதே நேரத்தில், எல்லா ஆள் குறைப்புக்கும் ஏ.அய். மட்டுமே காரணம் என்று எடுத்துக்கொள்ளவும் முடியாது. நிறுவனத்தின் வணிக நிலை, முன்னர் எடுத்த பணியாளர்கள் எண்ணிக்கை, பொருளாதாரச் சூழல் என்று பல காரணங்கள் இருக்கலாம்.

நம் பங்கிற்கு, நமது வேலையைப் பிரித்துப் பார்க்கலாம்.

எந்தப் பகுதிகளை ஏ.அய்.யிடம் கொடுக்க முடியும்? எங்கே நமது அனுபவம் தேவை? எங்கே வாடிக்கையாளரைப் புரிந்துகொள்ள வேண்டும்? எங்கே நாம் முடிவெடுத்துப் பொறுப்பேற்க வேண்டும்?

இதுவரை நாமே செய்துகொண்டிருந்த சில வேலைகளை, இனி ஏ.அய்.யிடம் செய்யச் சொல்லி, அதன் தரத்தைப் பார்த்துத் திருத்தும் இடத்திற்கும் நாம் நகர வேண்டியிருக்கும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *