விழுப்புரம், நவ. 24- திண்டிவனம் அருகே கன்னிகாபுரத்தில் சபரிமலை பக்தர்கள் சென்ற வேன் மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அய்யப்ப பக்தர்கள் 2 பேர் பலியாகினர். 13 பேர் படுகாயங்களுடன் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களது வேன் திண்டிவனம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று எதிர்பாராவிதமாக வேன் மீது பயங்கரமாக மோதியது.
வேன், சாலையில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்த 2 அய்யப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், வேனில் பயணம் செய்த 13 பக்தர்கள் படுகாயமடைந்தனர். இந்த அய்யப்ப பக்தர்கள் திருவள்ளூர் மாவட்டம் வருதாபுரத்தை சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து குறித்து தகவல் அறிந்த அப்பகுதி பொதுமக்கள், நெடுஞ்சாலை சுற்றுக் காவல்துறையினர் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். படுகாயமடைந்த 13 பேரும் மருத்துவ அவசர
ஊர்திகள் மூலம் மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் கடுமையாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
