நேற்றைய (23.11.2026) தொடர்ச்சி வருமாறு
வர்ண தர்மம்
*ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதிகளாகிய ஸ்ரீ ஜகத்குரு ஸ்ரீசங்கராசார்ய ஸ்வாமிகள் மயிலாப்பூரில் செய்த பிரசங்கம். இது பக்தர் வேண்டுகோளுக்கிணங்க லாஜர்னல் பிரஸில் அச்சியற்றியதை ஸ்ரீபரமாசார்யர் களுடைய அநுமதிக்கிணங்க மறுபடியும் பிரசுரிக்கலா யிற்று. அவர்களுக்கு எங்கள் நன்றி உரித்தாகுக.
15-10-1932
நம் தேசத்தில் ப்ரஹ்ம க்ஷத்ரிய வைச்ய சூத்ரர் என்று நான்கு வர்ணங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இந்த வர்ணங்களைத்தான் நாம் பெரும்பாலும் ஜாதி என்றும் சொல்லுகிறோம், அந்த நான்கு வர்ணங்களைப் பற்றிய விஷயங்கள் சாஸ்த்ரங்களில் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு வர்ணத்தாருக்கும் தனித்தனியே காரியங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒருவர் செய்த காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது. ஒவ்வொருவருக்கும் பலவிதமான நிர்ப்பந்தங்கள் உண்டு. ஒரு குடியானவன் பஞ்சகச்சம் கட்டிக் கொண்டு பூணூல் அணிந்து பவித்ரம் போட்டுக் கொண்டு வந்தால் நமக்கு கோபம் வருகிறது. நிரம்ப மீறிப் போய் விட்டானென்று சொல்லுகிறோம். ப்ராஹ்மணன் சுருட்டுக் குடித்துக் கொண்டு பஞ்சகச்சம் கட்டிக்கொள்ளாமல் பூணூல் போட்டுக் கொள்ளாமல் வந்தால் அவனை அயோக்யனென்று சொல்லுகிறோம். பறையனும், குடியானவனும் குடித்தால் அவ்வளவாகக் கோபித்துக் கொள்வதில்லை. ப்ராஹமணன் குடித்தால் ஜாதிப்ரஷ்டம் செய்யவேண்டும் என்ற எண்ணம் உண்டாகிறது. அவனை அதிகமாய்ப் பரிஹஸிக்கிறோம். இவ்வளவு ஜாதிக்காரர்களும் ஒரே மதத்தை உடையவர்களே ஆனாலும் நல்ல காரியமாயிருந்தாலும் கெட்ட காரியமாயிருந்தாலும் ஒருவர் செய்வதை மற்றவர் செய்தால் கோபம் வருகிறது.
ப்ராஹமணன் கலப்பை எடுத்து உழுதால் ஆசாரமில்லை என்று சொல்லுகிறோம். பறையன் வேதாத்யயநம் செய்தால் காலம் கெட்டுப் போயிற்றென்று குறை கூறுகிறோம். இப்படி ஒரே மதத்தில் பலவித வித்யாஸங்கள் இருக்கின்றன. ஒருவரோடு ஒருவர் உட்கார்ந்து சாப்பிடக் கூடாது, ஒரு ஜாதியாரை தொடக்கூடாது, ஒருவர் கிட்ட வரக்கூடாது, ஒரே வீட்டிற் குடி இருக்கக்கூடாது, கல்யாணம் பண்ணக்கூடாது, ஒருவர் செய்த காரியத்தை மற்றொருவர் செய்யக்கூடாது என்று இப்படி எவ்வளவோ வித்யாஸங்கள் இருக்கின்றன.
நாலு வர்ணம் என்று பெயரளவில்தான் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன. இப்படி இந்த மதமானது ஒரு விசித்ரமான மதமாக இருக்கிறது. முன்னொருநாள் லோகம் முழுவதற்கும் இந்த ஒரே மதம் இருந்தது என்று சொன்னேன். அவ்வளவு பெருமையுள்ள மதத்தில் இப்படி ஒன்றுக்கொன்று வித்யாஸப்படும் பல ஸம்ப்ரதாயங்கள் இருக்கின்றன.
மற்ற மதங்களிலும் விதிகளும் நிவேஷதங்களும் உண்டு. ஆனால் அந்த மதத்திலுள்ள யாவர்க்கும் ஒரே விதமான விதிகள் ஒரே விதமான விலக்குகளே உண்டு. நமக்குள்ளேயோ ஒரே மதமாக இருந்தாலும் விதிகளும் நிஷேதங்களும் பல வகைகளாக இருக்கின்றன. ஒரு காரியத்தை ஒருவன் செய்தால் தர்மமாகிறது. அதையே வேறொருவன் செய்தால் அதர்மமென்கிறோம்.
இவ்விடத்தில் ஓர் உதாஹரணம் நினைவுக்கு வருகிறது. ஒரு பெரியவர் ஒரு பெரிய ஆச்சரியத்தைச் சொல்லுகிறார். நாமெல்லாம் மரணமடைவது ஆச்சரியமன்று: இந்த உடம்பில் இருக்கிற ஒன்பது ஓட்டைகளுக்குள்ளே உயிரானது போகாமல் நிற்கிறதே, அதுதான் பெரிய ஆச்சரியம் என்று அவர் சொல்லி இருக்கிறார்.
नवद्वारे शरीरेऽस्मिनवायुः स्रवति सन्ततम् ।
जीवतीत्यद्भुतं तत्र गच्छतीति किमद्द्भुतम् ॥
அதைப் போல பலவிதமான ஸந்தேஹங்களுக்கும், வித்யாஸங்களுக்கும் இடமான இந்த மதமானது எவ்வளவோ வருஷங்களாக இருக்கிறதே என்பதை நினைத்து ஆச்சரியப்பட வேண்டியிருக்கிறது.
பறையனும், சக்கிலியனும் தங்களுக்குள் வித்யாஸம் பாராட்டுகிறார்கள். எந்த இடத்திலும் வித்யாஸம் காணப்படுகிறது. கோயிலுக்குப் போனால் ப்ராஹ்மணன் அர்த்த மண்டபம் வரைக்குந் தான் போகலாமாம். மற்றவர்கள் வெளியிலேயே நிற்கவேண்டுமாம். சிலபேர் த்வஜ ஸ்தம்பத்தினடியிலேயே நிற்கவேண்டுமாம்.
இப்படியே நம்முடைய வீட்டிற்குள்ளும் வித்யாஸம் இருக்கிறது. சிலபேர் அன்ன ச்ராத்தம் செய்யலாம். சிலபேர் ஆமச்ராத்தந்தான் பண்ணவேண்டும். சில காரியங்களைச் சில பேர் வேதோக்தமாகவே செய்யவேண்டும். அதே மாதிரி காரியத்தைச் சிலபேர் வேதோக்தமாகச் செய்தால் அவர்களுக்குக் கெடுதல் உண்டாகும். வேதத்தை விட்டால் சிலருக்குப் பாபம். வேதம் சொன்னால் சிலருக்குப் பாபம். இவ்வளவு வித்யாஸங்களும் பக்ஷபாதங்களும் ஏன் இருக்கின்றன.
இந்த விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொள்வது அவமானமாக இருக்கிறதென்று நாம் நினைக்கிறோம். இவை தொலைந்தால் நல்லதென்றும் நினைக்கிறோம். இந்த வித்யாஸங்கள் பல நல்ல அம்சங்களையுடைய நமது மதத்துக்குக் களங்கமாக இருக்கின்றன என்று சிலர் சொல்லுகிறார்கள். நன்றாக ஊன்றிப் பார்த்தால் முழுவதும் இப்படித்தான் வித்யாஸம் இருக்கிறது. நல்ல அம்சம் ஒன்றுகூட இல்லையென்றே சில ஸமயம் தோன்றுகிறது.
இப்படிப் பலபேருக்கு இந்த விஷயங்களில் மனஸ் உறுத்திக்கொண்டே இருக்கிறது. சில பேர் ஏதாவது தெரிந்து ஸமாதாநம் செய்து கொள்ளுகிறார்கள். சில ஸமயங்களில் சிலபேர் இந்த மாதிரி வித்யாஸங்களை எடுத்துக் காட்டி உறுத்தி உறுத்திச் சொல்லுகிறபோது நம்முடைய மனஸ் மிகவும் கஷ்டப்படுகிறது. சிலபேர் அவர்களோடு சேர்ந்தே விடுகிறார்கள். ஆனாலும் அநுஷ்டாநத்தை விடுவதற்கு மனஸ் துணிவதில்லை. சண்டாளன் முதற்கொண்டு தன் அநுஷ்டாநத்தை விடுவதனால் ச்ரமப்படுகிறான். இந்த மாதிரி விஷயங்களை யெல்லாம் யோசிக்கும் பொழுது ஒன்றுமே புரிவதில்லை.
நம்முடைய தேசத்தில் நம்மை வேறு தேசத்திலிருந்து வந்தவர்கள் ஆளுகிறார்கள். நாமெல்லாம் அவர்களுக்கு அடங்கி நடக்கிறோம். சில தேசங்களில் அந்த அந்தத் தேசத்தார்களே ஆண்டு வருகிறார்கள். நம்முடைய நிலைமையை ராஜாங்க ஸம்பந்தமான ப்ரஸங்கங்களைச் செய்கிறவர்களெல்லாம் அடிமைத்தனம் என்கிறார்கள். இந்த அடிமைத்தனத்திற்குக் காரணம் நாம் நமக்குள் சிலரை அடக்கி அடிமையாக நடத்திய பாபமே என்கிறார்கள். இதை எல்லோரும் பல இடங்களில் கேட்டிருப்பார்கள்.
நம்முடைய தேச ஜனங்கள் வேறு பல தேசங்களுக்குக் கூலிவேலைக்காகவும் வ்யாபாரத்திற்காகவும் போயிருக்கிறார்கள். அந்த இடங்களில் நம்மவர்களை முனிஸிபாலிடியில் வெள்ளைக்காரர்கள் இருக்கும் இடங்களில் வஸிக்கவிட ஸம்மதிப்பதில்லை. வண்டியில்கூட ஏற்றுவதில்லை. வீடு முதற்கொண்டு தனி. ஸஞ்சாரத்திற்கும் தனியான இடம். இதற்கென்ன காரணம்? நாம் நமக்குள் சில பேரை விலக்கி வைத்ததே காரணம் என்கிறார்கள்.
அந்தத் தேசங்களில் ஏறக்கூடாதென்ற வண்டியில் நாம் ஏறினால் அவர்கள் நம்மை அடிப்பார்கள்; அதுதான் அதற்கு ப்ராயச்சித்தம். ஆனால், நம் ஊரில் நம்மில் ஆசார ச்ரத்தையுள்ள முதியோர்கள் ஏறும் வண்டியில் ஏறக்கூடாதவன் ஒருவன் ஏறினால் தாங்கள் பட்டினி கிடந்து ஸ்நாநம் செய்வார்கள். மேலே சொன்ன அந்த நாடுகளில் குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள். இங்கே ஒருவர் குற்றஞ்செய்ய மற்றொவர் தாமே தண்டனையை ஏற்றுக் கொள்ளுகிறார்.
இந்த வித்யாஸம் ஸ்வல்பமாகத் தோன்றினாலும் உண்மையைப் பார்க்கும்பொழுது இது தான் பெரிய வித்யாஸம்.
இப்பொழுது பெரியோர்களிடந்தான் நமது தர்மம் கொஞ்சம் இருந்து வருகிறது. நாம் சமையல் பண்ணவேண்டி இருந்தால் அடுப்பில் செத்தை, புல் முதலியவைகளைப் போட்டு மூட்டுகிறோம். மழைநாளாக இருக்கிறது. நெருப்பு அணைந்துபோய்விடும் போலிருக்கிறது. கொஞ்சம் நெருப்புப்பொறிகள் மாத்திரம் பாக்கி இருக்கின்றன. அவைகளால் என்ன பண்ணுவோம் என்று நாம் விட்டுவிட மாட்டோம். விசிறி ச்ரமப்பட்டு முயற்சி செய்து மறுபடிபும் பற்ற விடப் பார்ப்போம் அல்லவா? அதைப்போல் நம் முதியோர்களிடம் இருக்கும் ஆசாரத்தையும், தர் மத்தையும் எல்லோரிடத்திலும் பரவச் செய்யலாம் என்பது எனது பேராசை. அதனால்தான் நான் இதைச் சொல்லுகிறேன்.
நம்முடைய மதம் எவ்வளவோ யுகங்களாக நீடித்து வாழ்ந்து வந்திருக்கிறது. ஏதோ ஆதாரம் இருந்துதான் இந்த மதம் இவ்வளவு நாள் பிழைத்திருக்கிறது. எந்த மதமும் இவ்வளவு தீர்க்காயுஸோடு இருந்ததாகத் தெரியவில்லை. நம்முடைய மதத்தை நான் நம்முடைய கோயிலைப் போல நினைத்திருக்கிறேன். நம்முடைய கோயில்கள் மற்றவர்களுடைய கோயில்களைப்போலச் சுத்தமாக இல்லை. மற்ற மதத்தார்களுடைய கோயில்களோ வெள்ளை யடித்துச் சுத்தமாக வைக்கப்பட்டிருக்கின்றன. நம்முடைய கோயில்களில் முளைத்திருக்கும் மரங்களுக்குக் கணக்கே கிடையாது. அவ்வளவையும் தாங்கிக்கொண்டு நமது கோயில்கள் நிற்கின்றன.
மற்ற மதத்தார்கள் கோயில்களோ இரண்டு மூன்று வருஷத்திற்கு ஒருதரம் ரிபேர் செய்யாவிட்டால் ஒரு க்ஷணநேரங் கூடத் தாங்காது. நம் கோயில்களெல்லாம் கருங்கல்லால் கட்டப்பட்டிருக்கின்றன. பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு நம்முடைய பெரியோர்கள் பலமாக அஸ்திவாரம் போட்டிருக்கிறார்கள். ஆகையால்தான் கோயில்கள் நீடித்து நிற்கின்றன.
நாம் எவ்வளவோ ப்ரதிகூலங்கள் செய்து வருகிறோம். பல ஆபாஸங்களைச் செய்கிறோம். அபசாரங்கள் செய்கிறோம். இவ்வளவுக்கும் ஈடு கொடுத்துக்கொண்டு நம்முடைய கோயில் நிற்கிறது. லோகத்திற்குள் மிகப் புராதனமான கோயில்கள் இந்தியாவில்தான் இருக்கின்றன என்று எல்லோரும் சொல்லுகிறார்கள். சீமையில் இருந்து நம்முடைய கோயில்களைப் படம் பிடிப்பதற்காகப் பலபேர் வருகிறார்கள்.
ஒவ்வொரு க்ஷணமும் அழிவதற்குரிய காரணங்கள் பல இருந்ததும் அவை அழியாமல் நிற்கின்றன. அவற்றை இடித்து விடலாமென்றாலோ அதுவும் ச்ரமமாக இருக்கின்றது. கட்டுவதற்கு எவ்வளவு ச்ரமப்பட்டிருக்குமோ அவ்வளவு இடிப்பதற்கும் பாடுபடவேண்டும்.
நம்முடைய மதமும் இப்படித்தான் இருக்கின்றது. நமக்குத் தெரியாமல் ஏதோ ஒன்று இதைத் தாங்கிக் கொண்டு நிற்கிறது. எவ்வளவோ வித்யாஸங்கள் இருந்தாலும் இந்த மதம் அழியாமல் நிற்கிறது. முப்பது வருஷ காலமாக ‘எல்லாம் ஒன்றாகவேண்டும்’ எல்லாம் ஒன்றாகவேண்டும்’ என்ற பேச்சே எங்கும் இருக்கிறது.
ஒரு அரசர் இருக்கிறார். அவருக்குப் பல ப்ரஜைகள். ஒரு ப்ராஹ்மண குடும்பம் இருக்கிறது. அந்தக் குடும்பத்தில் அண்ணன் தம்பியாக இரண்டுபேர். மூத்தவர் வைதிகர் – சாஸ்திரிகள் – வேதாத்யயனம் செய்தவர். “மஹா ப்ரபு தங்களுடைய க்யாதி எங்கும் பரவி இருக்கிறது. தங்களுடைய தர்மத்தை அபேக்ஷித்து நான் வந்தேன்” என்று ஸ்தோத்திரம் பண்ணிப் பல ப்ரபுக்களிடம் பணம் வாங்கிக்கொண்டு ஜீவனம் செய்துவருகிறார். இந்த வ்ருத்தியினால் அவருக்கு நிரம்பப் பணம் கிடைக்கிறது. வைதிகர் ஆகையால் அதிகமாகச் செலவு பண்ணமாட்டார். அவருக்குப் பணம் நிறையச் சேருகிறது.
அவர் தம்பி இங்கிலீஷ் வாசித்தார். ஸப் மாஜிஸ்டிரேட் உத்யோகம் பண்ணுகிறார். இங்கிலீஷ் படிப்பினால் செலவு பண்ணும் விதங்களை நன்றாகத் தெரிந்துகொண்டார். அலங்காரம் செய்து கொள்ளவேண்டும், நல்ல உடுப்பு வேண்டும், வீடு பெரியதாயிருக்கவேண்டும் என்று செலவு செய்கிறார். டாக்டருக்குப் பணம் கொடுத்து மருந்து சாப்பிடுகிறார். இப்படிச் செலவு பண்ணுவதால் இவருக்குப் பணம் சேர்வதில்லை.
“நம் அண்ணாவுக்கு மட்டும் எப்படிப் பணம் சேர்ந்தது?” என்று யோசித்துப் பார்த்தார். நம் அண்ணாவைப் போல் நாமும் மஹாராஜாவின் ப்ரஜைதானே, ஏன் நாமும் அவர் செய்வதைப்போல் செய்யக்கூடாது? அவரைவிட நமக்குச் செல்வாக்கு அதிகம் இருக்கிறது” என்று நினைத்து இவரும் வாங்குந் தொழிலைச் செய்ய ஆரம்பித்தார். இது மேலதிகாரிகளுக்கு தெரிந்தது. உடனே இவரை வேலையைவிட்டுத் தள்ளி விட்டார்கள். இவர் மேலே அப்பீல் செய்தார். “நாங்கள் இருவரும் ஒரே அரசனுடைய ப்ரஜை தானே. எனக்கு ஒரு விதி. அவருக்கு மற்றொன்றோ?” என்று இவர் கேட்டார்.
இந்தக் கேள்விகளுக்கு நம்முடைய சாஸ்த்ர ராஜ்யத்தில்தான் ஸரியான பதில் இருக்கிறது. இவர் கேட்டதோ கிறிஸ்தவ ராஜ்யத்தில் கிறிஸ்தவர்களோ எல்லாருக்கும் ஒரே விதி என்று சொன்னாலும் இந்த விஷயத்தில் அவ்வாறு நடக்க முடியவில்லை. வேறு விதமாகச் செய்யவேண்டியிருக்கிறது. அவர்கள் மதத்தில் பத்துக் கட்டளைகளும் (Commandments) எல்லோருக்கும் ஒரே விதந்தானே? லோக நிர்வாஹத்தில் மாத்ரம் ஒரே விதமென்னும் முறையை ஏன் மறுக்கிறார்கள்?
அவர்களுடைய மதம் சில கட்டளைகளுக்குள் அகப்பட்டுவிட்டது. நம்முடைய மதத்துக்கு இன்னதுதான் வரையறை என்று சொல்ல முடியவில்லை. இதுதான் சாஸ்த்ரம் என்றும் தெரியவில்லை. அந்தச் சாஸ்த்ரங்களில் என்ன சொல்லியிருக்கிறதென்பதும் தெரியாது. விழுப்புடன் வந்தால் மேலே படக்கூடாது என்கிறோம். பறையன் வந்தால் விலகும்படி சொல்லுகிறோம். இவை போன்றவை தாம் நமக்குத் தெரியும்.
லோகம் முழுவதும் எல்லா மதங்களும் இப்படி வித்யாஸங்களுள்ள மதங்களாகவே இருந்துவிட்டால் இது தப்பென்று தோன்றாது. மற்ற மதங்களெல்லாம் ஒரே மாதிரி தர்மத்தை அநுஸரித்துவர நம்முடைய மதம் மட்டும் இப்படி இருப்பதனால்தான் தப்பாகத் தோன்றுகிறது. அந்த மதங்கள் இவ்விதம் இருப்பது நம்மைச் சுட்டிக் காட்டித் தோஷம் கூறுவதுபோல் இருக்கிறது.
இது இருக்கட்டும். மதமென்றால் என்ன? ஆத்மா கடைத்தேறுவதற்கு என்ன வழியோ அதுதான் தர்மம்; அதுதான் மதம் எனப்படுகிறது.
உடம்பிற்கு இன்ன வ்யாதி வந்திருக்கிறதன்றும் அதைப்போக்க இதுதான் மருந்தென்றும் வைத்யனுக்குத்தான் தெரியும். உடம்புக்கு வ்யாதி வராமல் காப்பவன் வைத்யன். உடம்பு இருப்பதனால்தான் வ்யாதி வருகிறது. நமக்கு உடம்பே வராமல் இருந்திருந்தால் வ்யாதியே வந்திருக்காது. வ்யாதிக்குக் காரணமும் இடமுமாகிய உடம்பே வராமல் இருக்க ஒரு வழி இருக்கிறது. அந்த வழியைச் சொல்லும் ஒரு வைத்யர் நான் சொல்வதை நம்பு என்று சொல்லுகிறார். அவர் தாம் தர்மசாஸ்த்ரகாரர். அவருக்கு மநு என்று பெயர். தர்மசாஸ்த்ரக்காரரை வைத்யரென்று நான் மட்டும் சொல்லவில்லை; “மநு சொன்ன துதான் பேஷஜம்” என்று வேதமும் சொல்லுகிறது;
यद्वै किं च मनुरवदत् तत् भेषजम् ।
(தைத்திரீயஸம்ஹிதை]
பேஷஜம் என்றால் மருந்தென்று அர்த்தம். உடம்பு வராமல் இருக்கும் மருந்து தர்மசாஸ்த்ரத்தில் சொல்லப்படுகிறது.
(தொடரும்)
