சென்னை, நவ 23 வானில் நிகழும் அரிய வானியல் அதிசயங்களில் ஒன்றான ‘சூப்பர்மூன்’ வரும் நவம்பர் 24 ஆம் தேதி இரவு வானில் மாபெரும் அளவில் தோன்றவுள்ளது. இந்திய நேரப்படி இரவு சுமார் 8:23 மணிக்கு முழு நிலவு தனது உச்ச நிலையை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் மிகச் சிறிய முழு நிலவுடன் ஒப்பிடும் போது, இந்தச் சூப்பர்மூன் 14 சதவீதம் பெரிய தாகவும், 30 சதவீதம் அதிகப் பிரகாசத்துடனும் காட்சியளிக்கும் என நாசா தெரிவித்துள்ளது.
குளிர்காலம் தொடங்குவதற்கு முன்பு நீர்நாய்கள் தங்களது இருப்பிடங்களை உறுதிப்படுத்தவும், குளிர்காலத்திற்குத் தேவையான உணவு மற்றும் பொருட்களைச் சேகரிக்கவும் மிகச் சுறுசுறுப்பாகச் செயல்படும் காலத்தில் இந்த முழு நிலவு தோன்றுகிறது. இதன் காரணமாகவே நவம்பர் மாத முழு நிலவு பாரம்பரியமாக ‘பீவர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது.
இதன் பின்னணியில் உள்ள அறிவியல்
நிலவின் சுற்றுப்பாதை மற்றும் பூமியுடனான அதன் தூரத்தில் ஏற்படும் மாற்றங்களே சூப்பர்மூன் நிகழ்வுக்கு முக்கியக் காரணமாகும்:
நீள்வட்டச் சுற்றுப்பாதை நிலவு பூமியைச் சுற்றி வரும் பாதை முழுமையான வட்ட வடிவில் இல்லாமல் சற்று நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளது. இதனால், சுமார் 27 நாட்கள் கொண்ட சுற்றுப்பாதையில் நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிலையும் ஏற்படுகின்றன.
நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் நிலையை 90 சதவீதத்திற்கும் நெருக்கமாக அடையும்போது முழு நிலவு தோன்றினால், அது ‘சூப்பர்மூன்’ எனக் குறிப்பிடப்படுகிறது.
பூமிக்கு மிக அருகில் இருக்கும்போது நிலவின் தோற்ற விட்டம் சற்று அதிகமாக இருக்கும். இதன் விளைவாக, ஆண்டின் மிகத் தொலைவில் இருக்கும்போது தோன்றும் முழு நிலவை விட இது சுமார் 14 சதவீதம் பெரியதாகத் தெரிகிறது.
நிலவு பூமிக்கு அருகில் வரும்போது, நிலவின் மேற்பரப்பிலிருந்து பிரதிபலிக்கும் சூரிய ஒளி பூமியை அடையும் தூரம் குறைகிறது. ஒளியின் செறிவு தூரத்தின் வர்க்கத்திற்கு எதிர்விகிதத்தில் மாறும் வானியல் விதியின்படி, பூமிக்கு அருகில் உள்ள நிலவு சுமார் 30 சதவீதம் வரை அதிகப் பிரகாசத்துடன் ஒளிர்கிறது.
ஒவ்வொரு மாதமும் நிலவு பூமிக்கு அருகில் வந்தாலும், அந்த நேரத்தில் பெரிய ஒளிமிக்க நிலவு அமைவது எப்போதும் நிகழ்வதில்லை. முழு நிலவு நிலையும், பூமிக்கு மிக அருகிலான நிலையும் ஒரே சமயத்தில் இணையும்போது மட்டுமே இந்தச் சிறப்புத் தோற்றம் காணப்படுகிறது. குறிப்பாக குளிர்கால துவக்கத்தில் வாணம் மிகவும் தெளிவாகவும் காற்று அடர்த்தி குறைவாக காணப்படுவதால் ஒளி விரைவாக தரையை அடைவதால் பளிச்சென்ற நிலவும் நமக்குக் காட்சி தரும்.
வானம் தெளிவாக இருக்கும் பகுதிகளில் வெறும் கண்ணாலேயே இந்தப் பிரம்மாண்ட முழு நிலவையும் அதன் கூடுதல் ஒளியையும் மக்கள் எளிதாகக் கண்டு ரசிக்க முடியும்.
