உவமைக் கவிஞர் சுரதா பிறந்தநாள் இன்று (23-11-1921)
உவமைக் கவிஞர் சுரதாவின் இயற்பெயர் ராசகோபாலன். தஞ்சை மாவட்டம் பழையனூர் (சிக்கல்) என்னும் சிற்றூரில் 1921 ஆம் ஆண்டு நவம்பர் 23 ஆம் நாளில் பிறந்தவர். பள்ளிப் படிப்பைச் சிறப்பான முறையில் கற்றறிந்ததோடு, சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட தீவிரப் பற்றின் காரணமாக, பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதைத் தன் பெயராக சுப்புரத்தினதாசன் என மாற்றிக்கொண்டு, பின்னர் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக் கவிதைத் தொகுப்புகளை வழங்கினார்.
செய்யுள் மரபு மாறாமல் எழுதி வந்தவர், உவமைகள் தருவதில் தனிப் புகழையும் பெற்றார். இதன் பொருட்டே இவர் ‘உவமைக் கவிஞர்’ என்று அனைவராலும் பெருமிதத்தோடு அழைக்கப்பட்டார்.
1941 ஆம் ஆண்டில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனை முதன்முறையாகச் சந்தித்து அவர்பால் ஏற்பட்ட மிகுந்த அன்பின் காரணமாக, அவரது கவிதைப் பணிக்குப் பேருதவியாகவும் இருந்தார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டு, அவரின் பாடல்களைப் படியெடுத்தல், அச்சுப் பணிகளை உடனிருந்து மேற்கொண்டதோடு மட்டுமல்லாது, அவரின் பல நூல்கள் வெளியீட்டிற்கும் துணைபுரிந்தார்.
1942 ஆம் ஆண்டில் சுயமரியாதை இயக்கத்தின் கருத்துகளைப் பரப்பும் வகையில், நாடகக் குழுவை அமைத்து தந்தை பெரியார், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ‘புரட்சிக் கவி’ நாடகத்தில் அமைச்சர் வேடமேற்று நடித்துள்ளார். அந்நாடகம் அக்காலத்தில் பெரும் பரபரப்பினையும், மிகுந்த வரவேற்பினையும் பெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்கள், உரையாடல்கள் எழுதியுள்ளார். “அமுதும் தேனும் எதற்கு, நீ அருகினில் இருக்கையிலே எனக்கு” மற்றும் “ஆடி அடங்கும் வாழ்க்கையடா, ஆறடி நிலமே சொந்தமடா” ஆகிய பாடல்கள் என்றும் மங்காத புகழ் பெற்றவை.
உவமைக் கவிஞர் சுரதாவின் முதல் நூல் ‘சாவின் முத்தம்’. 1954- இல் முத்தமிழறிஞர் கலைஞரின் ‘முரசொலி’ இதழில் தொடர்ந்து எழுதிய எழுச்சியும், வேகம்மிக்க கவிதைகளுக்கு மிகுந்த வரவேற்பு கிடைத்தது. 1955- இல், உலகிலேயே முதன்முறையாக கவிதை நடையிலேயே ‘காவியம்’ என்கிற வார இதழைத் தொடங்கிய பெருமை இவரையே சேரும். தொடர்ந்து இலக்கியம் (1958), ஊர்வலம் (1963), விண்மீன் (1964), சுரதா (1988) எனப் பல இலக்கிய ஏடுகளும், இதழ்களையும் தொடங்கிக் கவிதை வளர்ச்சிக்குப் பெரிதும் துணைபுரிந்தார்.
1969 -இல் தேன்மழை என்கிற உவமைக் கவிஞர் சுரதாவின் கவிதை நூல் தமிழ்நாடு அரசின் பரிசு பெற்றது. 1972- இல் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, 1990 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதல மைச்சராக இருந்தபோது கலைத்துறை வித்தகருக்கான ‘பாரதிதாசன் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.
2007 ஆம் ஆண்டு கவிஞர் சுரதா எழுதிய நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. மேலும் கவிஞர் சுரதாவின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில், 29.9.2008 அன்று சென்னையில் அவரது சிலையும் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞரால் திறக்கப்பட்டது.
சுரதா அவர்கள் 2006 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் நாளில் மறைவுற்றார்.
தகவல் : பாணாவரம் பெ.வீரமணி
