சாலை வசதிகளை மேம்படுத்த 2036அய் இலக்கு! ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்க தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம்!

2 Min Read
- Advertisement -

சென்னை, நவ. 23- தமிழ்நாட்டில் சுமார் 2.71 லட்சம் கி.மீ. நீளத்துக்கு சாலைகள் உள்ளன. இதில் 6,805 கி.மீ. தேசிய நெடுஞ் சாலைகளும், 12,291 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகளும், 12,034 கி.மீ. மாவட்ட முக்கியச் சாலைகளும், 42,057 கி.மீ. இதர மாவட்ட சாலைகளும் உள்ளன. இதுதவிர 1,97,542 கி.மீ. நீளத்துக்கு ஊராட்சி மற்றும் கிராமச் சாலைகள் அமைந்துள்ளன. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் மட்டும் 73,187 கி.மீ. சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

போக்குவரத்து நெரிசல்

சாலை கட்டமைப்பு விரிவாக இருந்தாலும், வாகனங்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்ப தால் நகர்ப்புறங்களில் போக்குவரத்து சுமை அதிகரித்துள்ளது. சென்னை யில் ஓ.எம்.ஆர்., கிழக்கு கடற்கரை சாலை, தாம்பரம்-வேளச்சேரி, பாடி-திருநின்றவூர் பகுதிகளில் நாள்தோறும் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதே நிலை கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருப்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் காணப்படுகிறது. சாலைகளில் நடைபெறும் பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகளும் போக்குவரத்து பாதிப்புக்கு காரணமாகின்றன.

சென்னையில் 36 ஆயிரம் உள் சாலைகளில் 2,350 சாலைகளும், 488 பேருந்து வழித்தட சாலைகளில் 97 சாலைகளும் சேதமடைந்துள்ளதாக மாநகராட்சி ஆய்வில் தெரியவந்துள்ளது. சாலை விபத்துகளும் கவலை அளிக்கும் வகையில் உள்ளன. தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டில் 67,526 விபத்துகள் ஏற்பட்டு 18,449 பேர் உயிரிழந்துள்ளனர். 2025ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 34,611 விபத்துகளல் 8,652 பேர் உயிரிழந்துள்ளனர்.

சாலை விரிவாக்கம்

அதிவேகம், சாலை வடிவமைப்பு குறைபாடுகள், சிக்னல்கள் இல்லாமை, நடைபாதை வசதி இல்லாதது, சாலை பள்ளங்கள் போன்றவை விபத்துகளுக்கு முக்கிய காரணமாகிறது. இந்த நிலையை மாற்றும் வகையில், 2036ம் ஆண்டை இலக்காக கொண்டு சாலை மேம்பாட்டுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படுகிறது. இதில் தற்போதுள்ள சாலைகளை 4 வழி மற்றும் 6 வழிச்சாலைகளாக விரிவுபடுத்த வேண்டிய இடங்கள் கண்டறியப்படும்.

நெரிசல் அதிகமுள்ள பகுதிகளில் புறவழிச்சாலைகள், சுற்றுச்சாலைகள், மேம்பாலங்கள், உயர்மட்ட சாலைகள் அமைப்பதற்கான திட்டங்களும் வகுக்கப்படும். விபத்துகள் அதிகம் நடைபெறும் இடங்களில் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தவும், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்களை இணைக்கும் சாலை வசதிகளை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்களின் எண்ணிக்கை மற்றும் போக்குவரத்து தேவை எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை கணக்கிட்டு, அதற்கேற்ப சாலை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே விஷன் 2035 திட்டத்தின் கீழ் 144 வழித்தடங்களில் 4,543 கி.மீ. சாலைகளை சுமார் ரூ.36 ஆயிரம் கோடியில் மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை-திருச்சி-மதுரை கிரீன்பீல்டு சாலை, மதுரவாயல்-சிறீபெரும்புதூர் உயர்மட்ட சாலை, சென்னை-திருவண்ணாமலை விரைவுச்சாலை, கிழக்கு கடற்கரை உயர்மட்டச் சாலை உள்ளிட்ட திட்டங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.

ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் சாலை போக்குவரத்து கட்டமைப்பை அடுத்த 10 ஆண்டுகளில் மேம்படுத்தும் நோக்கில் ‘மாஸ்டர் பிளான்’ தயாரிக்க ஆலோசனை நிறுவனத்தை தேர்வு செய்ய தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை ஆணையம் ஒப்பந்தம் வெளியிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *