‘திராவிட நாடு’
யுவான் சுவாங் இந்திய தீபகற்பத்தில் 16 ஆண்டுகள் தங்கினார். இரண்டு ஆண்டுகள் தன்னுடைய வருகைப் பயணமும், ஓராண்டு சீனா செல்வதற்கான பயணத்தைக் குறிப்பிடுகிறார். ‘குளிர்காலம் முடிந்து மீண்டும் குளிர்காலம் வருவதை’ அவர் ஓராண்டு என்று குறிப்பிடுகிறார். அவர் காஞ்சியில் 2 ஆண்டுகள் தங்கினார். காஞ்சியில் 12 ஆயிரம் பவுத்த விகாரைகள் சிறியதும், பெரியதுமாக உள்ளதைப் பதிவு செய்துள்ளார்.
இங்கு ஏற்கெனவே இருந்த பெண் தெய்வ வழிபாட்டின் காரணமாக பவுத்த பெண் தெய்வங் களையும் வழிபாட்டில் சேர்த்துக் கொண்டனர். ஆகையால், தக்காணத்தில் பல இடங்களில் பவுத்த விகாரைகளோடு பெண் தெய்வ வழிபாட்டுத் தலங்கள் இருந்தன. இரண்டுக்கும் ஒரே நேரத்தில் விழா எடுத்து கொண்டாடியதைக் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிக்கு கிழக்கே தூரத்தில் கடற்கரையில் பெரிய புத்த விகாரை உள்ளதாக குறிப்பிடுகிறார். அவர் அங்கு செல்லவில்லை. ஆனால், அங்கிருந்து வந்த பவுத்த துறவிகள் கூறுவதைச் சான்றாக வைத்து எழுதியுள்ளார்.
கலிங்கதைக் கடந்து தெற்கு நோக்கி வரும் போது இன்றைய தென் இந்தியாவை ‘திராவிட நாடு’ என்று அழைப்பதைக் குறிப்பிடுகிறார்.
திராவிட நாடும், அதன் தலைநகரான காஞ்சிபுரமும்!
அவர் எழுதிய “பெரிய தாங் வம்ச மேற்கு நாட்டுப் பயணக் குறிப்பு” என்னும் நூலின் பத்தாவது தொகுதி, பக்கம் 154. இதில் திராவிட நாடும். அதன் தலைநகரான காஞ்சிபுரத்தை பற்றி எழுதியுள்ளார். திராவிட நாடு (達羅毘荼國) — தென்னிந்திய எல்லையில் உள்ளது ஹிந்து நாட்டில் இருந்து தெற்கே காடுகள் வழியாக சுமார் 1,500–1,600 மைல் செல்ல வேண்டும்.
திராவிட நாடு, சுற்றளவு 6,000-க்கும் மேற்பட்ட லீ. அதன் தலைநகரம் காஞ்சிபுரம் (建志補羋); அதன் சுற்றளவு 30-க்கும் மேற்பட்ட லீ.”
நிலம் வளமானது; விளைச்சல் செழித்தது; பல பூக்களும் பழங்களும் உள்ளன; விலை உயர்ந்த ரத்தினம் உள்ளிட்ட கற்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
காலநிலை மிதமான வெப்பம்; மக்கள் வீரமிக்கவர்கள்; நம்பிக்கையிலும் நேர்மையிலும் ஆழ்ந்தவர்கள்; உயர்ந்த அறிவும் கல்வியும் கொண்டவர்கள்.
ஆனால். மொழியும் எழுத்தும் ஹிந்த்ப் பகுதிகளை விட பெரிதும் வேறுபடுகின்றன.
12000-க்கும் மேற்பட்ட சிறிய பெரிய பவுத்த ஸ்தூபிகள் 100க்கும் மேற்பட்ட பவுத்த மடங்கள் (விகாரைகள்),
10,000-க்கும் மேற்பட்ட பவுத்தப் பிக்குகள் — அனைவரும் தேரவாத முறையைப் பின்பற்றுகின்றனர்.
புத்தர் உயிருடன் இருந்தபோது பலமுறை இந்நாட்டிற்கு வந்து தர்மம் போதித்ததாக இம்மக்கள் கூறுகின்றனர். ஆகவே அசோகர் ‘புனித’ இடங்களில் தூபிகளை (சைத்தியங்கள்) கட்டினார்.
தர்மபாலர்
காஞ்சிபுரம் என்பது தர்மபாலர் பிறந்த நகரம். அவர் இந்நாட்டு அமைச்சரின் மூத்த மகன். இருபதாம் வயதில் அரசர் தன் மகளை அவருக்கு மணம் முடித்துக் கொடுத்தார்; ஆனால், மனவாழ்வில் இருந்து விலகி பவுத்த துறவியாகி புத்தரைப் போலவே இரவோடு இரவாக அரண்மனையிலிருந்து சில நூறு மைல் தொலைவில் உள்ள மலைமீது உள்ள மடத்தின் உள்ளே சென்று அமர்ந்துகொண்டார்.
காலை மடத்தின் தலைவர் அங்கு வந்து பார்த்த போது அவரைத் திருடன் என நினைத்து விசாரித்தார்; அவர் தன்னுடைய உண்மை நிலையைக்கூறி தன்னை பவுத்த பிக்குவாக அங்கீகரிக்கும்படி துறவு பூண்டு விடும்படி கேட்டுக் கொண்டார்; அனைவரும் வியந்து அவரது விருப்பத்தை நிறைவேற்றினர். இந்த விவரம் அரசருக்குத் தெரிந்த பிறகு அரசர் அவரின் விருப்பத்தை உடனடியாக ஏற்றுகொண்டார்.
தர்மபாலா ஆழ்ந்த கல்வியிலும், உழைப்பிலும் ஈடுபட்டு விரைவில் புகழ் பெற்றார். பின்னாளில் மகதத்தில் உள்ள மிகப்பெரிய பல்கலைக்கழகமான நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராகவும் உயர்ந்தார்.
காஞ்சியில் மிகபெரிய பவுத்த மடம்; நாட்டின் அறிவாளிகள் அங்கு திரண்டு தங்கியுள்ளனர். 100 அடிக்கும் மேற்பட்ட உயரமுள்ள ஸ்தூபியை அசோகர் கட்டினார்; இங்கே புத்தரின் பாதங்களை வழிபடுகின்றனர்.
