2007ஆம் ஆண்டு ‘தெஹல்கா’ இதழ் நடத்திய ரகசிய படக்கருவியின் நேர்காணலில், நரோடா (பாட்டியா) நகரத்தில் நடந்த படுகொலையின் போது கவுசர் பானு என்ற நிறைமாத மகப்பேறு நிலையில் இருந்த பெண் கொல்லப்பட்டது குறித்து பாபு பஜ்ரங்கி மிகவும் கொடூரமான, சர்ச்சைக்குரிய வகையில் வாக்குமூலம் அளித்திருந்தார்.
வயிற்றைக் கிழித்துக் கொன்றேன்
“தாக்குதலின் போது, கவுசர் பானு ஓட முடியாமல் கீழே விழுந்து எங்கள் ஆட்களிடம் கையெடுத்துக் கும்பிட்டார். அப்போது நான் அதைக் கவனித்து அவளின் கழுத்தை மிதித்து ஆடையைக் கிழித்தேன். பின்னர் அப்பெண்ணின் வயிற்றை வாளால் கிழித்து, உள்ளே இருந்த சிசுவை திரிசூலத்தால் குத்தி வெளியே எடுத்துப் போட்டேன். அந்தப் பெண் அப்போது உயிரோடு இருந்தார். உடனே எனது ஆட்களிடம் கூறி அவர்மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்க உத்தரவிட்டேன்” என்று பாபு பஜ்ரங்கி எந்தவிதக் குற்ற உணர்ச்சியுமின்றி விவரித்திருந்தார்.
கொலைக்கான காரணம்
எதிர்காலத்தில் ஒரு குழந்தை கூடப் பிறந்து வளரக் கூடாது என்ற கொடூரமான எண்ணத்திலேயே அவ்வாறு செய்ததாக அவர் அந்த காட்சிப் பதிவில் பெருமையுடன் பேசியிருந்தார்.
மேலும் அப்பகுதியில் கலவரத்தின்போது தப்பியோட முயன்றவர்களைத் தங்கள் கும்பல் சுற்றி வளைத்து, ஆயுதங்களால் வெட்டியும், உயிருடன் தீ வைத்தும் கொன்றதைப் பெருமையோடு கூறினார். கழிவுநீர் கால்வாய்களுக்குள் ஒளிந்திருந்த சிறுவர்களையும், சிறுமிகளையும் பார்த்த உடன் உள்ளே வைக்கோல் போன்றவற்றைப் போட்டு பெட்ரோல் ஊற்றி, தீ வைத்துக் கொன்றதாகவும் அவர் கூறியிருந்தார்.
“மகாராணா பிரதாப் போல வீரனாகி விட்டேன்”
இந்தப் படுகொலைகளைச் செய்து முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்பியபோது, தான் ஏதோ மகாராணா பிரதாப் போலப் பெரிய வீரச் செயலைச் செய்துவிட்டதாக உணர்ந்ததாகவும், அதன் பிறகு நிம்மதியாகத் தூங்கியதாகவும் அவர் அந்தக் காட்சிப் பதிவில் மேலும் பெருமையுடன் குறிப்பிட்டிருந்தார்.
கலவரத்தின் முதல் இரண்டு நாள்களுக்குக் காவல்துறை தங்களைத் தடுக்காமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதித்ததாகவும், அப்போதைய மாநில அரசின் ஆதரவு தங்களுக்கு இருந்ததாலேயே இவ்வளவு பெரிய தாக்குதலை நடத்த முடிந்ததாகவும் அவர் கூறியிருந்தார். மேலும், கலவரத்திற்குப் பிறகு தான் தலைமறைவாக இருக்கவும், சிறையிலிருந்து பிணையில் வெளிவரவும் அரசுத் தரப்பில் உதவிகள் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பின்னணியும், சட்ட நடவடிக்கைகளும்!
இந்த ரகசிய நேர்காணல் பதிவின் ஆதாரங்கள் நீதிமன்றத்தில் முக்கிய சாட்சியங்களாகப் பயன்படுத்தப் பட்டன. இதன் அடிப்படையில், 97 பேர் கொல்லப்பட்ட நரோடா பாட்டியா நகரத்தின் படுகொலை வழக்கில் 2012-ஆம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் பாபு பஜ்ரங்கிக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.
பின்னர், கடுமையான உடல்நலக் குறைபாடுகளைக் காரணம் காட்டி பிணை கேட்டு மனு செய்தார். இதனை விசாரித்த இந்திய உச்ச நீதிமன்றத்தால் 2019-ஆம் ஆண்டு மார்ச் மாதம் மருத்துவப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
தனது பார்வைத் திறன் பறிபோய்விட்டதாகவும், சிறையில் தனக்கு உதவ ஆட்கள் இன்றிச் சிரமப் படுவதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இதற்காக மாநில அரசு உரிய மருத்துவச் சான்றிதழ் வழங்கி இருந்தது. இதனை வைத்துத்தான் உச்சநீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது.
நிரந்தர விடுதலை
கழிவு நீரோடையில் 7 சிறுவர் சிறுமிகளைக் கொன்ற நரோடா காம் (Naroda Gam) படுகொலை வழக்கிலும், போதிய சான்றுகள் இல்லை என்று கூறி 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றம் பாபு பஜ்ரங்கி உட்பட 67 பேரையும் விடுதலை செய்தது.
விடுதலையாகி வந்த அவர் “தொடர் சிகிச்சையில் பார்வை குறைபாடு நீங்கிவிட்டது” என்று கூறி பல்வேறு அரசியல் நிகழ்வுகளில் கலந்துகொண்ட செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
