குஜராத் வன்முறை: நீதிக்கான போராட்டமும், பில்கிஸ் பானுவின் நம்பிக்கையும்!

- Advertisement -

பாணன்

2002-ஆம் ஆண்டு குஜராத்தில் நிகழ்ந்த ஹிந்துத்துவ வாதிகளின் வன்முறை வெறியாட்டம் இந்திய வரலாற்றில் விடுதலைக்குப் பிறகான மதவெறியாட்டத்தின் ஆறாத வடுவாகப் பதிந்த ஒரு மிகக் கோரமான வன்முறை நிகழ்வாகும்.

பிரிட்டன் அரசு அமைப்பின் அறிக்கை

அது கோத்ரா ரயில் எரிப்பு காரணமாக உருவான வன்முறை எனச் சித்தரிக்கப்பட்டு வந்த நிலையில், அது முன்கூட்டியே திட்டமிடப்பட்ட தாக்குதல் என பிரிட்டன் அரசின் உள் விசாரணை அறிக்கை வெளியிட்டுள்ள தகவல்கள் புதிய விவாதங்களை எழுப்பியுள்ளன.

இந்த மனிதாபிமானமற்ற படுகொலைகளின் மிகக் கொடூரமான சாட்சியமாக நிற்கும் பில்கிஸ் பானு வழக்கின் நீண்ட சட்டப் போராட்டமும், அண்மையில் அதில் இரண்டு குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட பிணையும், நீதித்துறையின் மீதான நம்பிக்கை குறித்தக் கேள்விகளை மீண்டும் உயிர்ப்பித்துள்ளன.

ஏப்ரல் 2002-இல் பிரிட்டன் தூதரக அதிகாரிகள் குஜராத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்த பின்னர் தயாரித்த அறிக்கையின் விவரங்களை ‘தி கேரவன்’  இதழ் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் முக்கிய அம்சங்கள் வன்முறையின் பின்னணியில் இருந்த திட்டமிடலைத் தோலுரித்துக் காட்டுகின்றன.

“பிப்ரவரி 27, 2002 அன்று நடந்த கோத்ரா ரயில் எரிப்பிற்குப் பிந்தைய தன்னிச்சையான எதிர்வினையாக மட்டும் இதைப் பார்க்க முடியாது. விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட சில்லறை ஹிந்து அமைப்புகளின் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக முன்கூட்டியே திட்டமிடப்பட்ட அரசியல் உள்நோக்கம் கொண்ட வன்முறையாக இது இருக்கக்கூடும்” என அறிக்கை குறிப்பிடுகிறது.

முஸ்லிம்களின் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களைத் துல்லியமாகக் கண்டறிந்து அழிக்க கணினி மயமாக்கப்பட்ட பட்டியல்கள் பயன்படுத்தப் பட்டதாகக் காவல்துறை வட்டாரங்களே தெரிவித்ததை இவ்வறிக்கைப் பதிவு செய்துள்ளது.

2,000 பேர் படுகொலை

வன்முறையில் 840 பேர் உயிரிழந்ததாக அப்போதைய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்த நிலையில், குறைந்தது 2,000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பிரிட்டன் அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர். மேலும், சுமார் 1,38,000 பேர் தங்கள் இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்ததாகவும், 99 விழுக்காட்டினர் முஸ்லிம்கள் என்றும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகள் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ள இவ்வறிக்கை, காவல்துறையினரின் நடவடிக்கைகளில் மாநில அரசின் மறைமுக அழுத்தம் இருந்ததாகவும், வன்முறையாளர்களுக்குத் தண்டனையிலிருந்து விலக்கு கிடைக்கும் சூழல் நிலவியதாகவும் விமர்சித்துள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள், நிவாரண முகாம்களின் அவல நிலை மற்றும் இழப்பீட்டுக் கொள்கைகளில் காட்டப்பட்ட பாகுபாடு ஆகியவற்றால் காவல்துறை, நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டதாக அந்த அறிக்கை அன்றே எச்சரித்திருந்தது.

நீதிக்கான 24 ஆண்டுகாலப் போராட்டம்  

பிரிட்டன் அறிக்கை சுட்டிக்காட்டிய பெண்களுக்கு எதிரான வன்முறை, காவல்துறையின் பாரபட்சமான அணுகுமுறை ஆகியவற்றிற்கு மிகப் பெரிய சான்றாக அமைந்தது பில்கிஸ் பானு வழக்கு.  2002 மார்ச் 3-ஆம் தேதி, அய்ந்து மாத மகப்பேறு நிலையில் இருந்த 21 வயது பில்கிஸ் பானு, வன்முறையிலிருந்து தப்பிக்கத் தனது குடும்பத்தினருடன் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் கிராமத்திலிருந்து வெளியேறினார்.

அப்போது வழிமறித்த வன்முறைக் கும்பல், பில்கிஸ் பானுவை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அவரது மூன்று வயது மகள் உள்பட குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை ஈவிரக்கமின்றிப் படுகொலை செய்தது.

வழக்கின் முக்கியத் திருப்பங்கள்!

குஜராத் காவல்துறையினர் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி இவ்வழக்கை முடித்து வைக்க முயன்றனர். தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உதவியுடன் பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தை நாடியதைத் தொடர்ந்து, வழக்கு சிபிஅய் விசாரணைக்கு மாற்றப்பட்டது. குஜராத்தில் விசாரணை நடந்தால் நீதி கிடைக்காது என்ற அச்சத்தால், 2004-ஆம் ஆண்டு வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

ஆரம்பகட்ட மூடி மறைப்புகளைக் கடந்து சிபிஅய் விசாரணைக்கு இவ்வழக்கு சென்றது  

நீண்ட விசாரணைக்குப் பிறகு, 2008 ஜனவரியில் மும்பை சிபிஅய் சிறப்பு நீதிமன்றம் 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. ஆதாரங்களை அழித்த காவல்துறையினரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 2017ஆம் ஆண்டு மே மாதம் மும்பை உயர் நீதிமன்றமும் இந்த ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி

ஆனால், 2022 ஆகஸ்ட் 15 அன்று, குஜராத் அரசு தனது தண்டனைக் குறைப்பு  கொள்கையின் கீழ் 11 குற்றவாளிகளையும் முன்கூட்டியே விடுதலை செய்தது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில், 2024 ஜனவரி 8 அன்று வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கிய உச்ச நீதிமன்றம், மகாராட்டிராவில் விசாரணை நடந்த வழக்கில் தண்டனைக் குறைப்பு வழங்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி 11 பேரின் விடுதலையை ரத்து செய்து, மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

இரண்டு குற்றவாளிகளுக்குப் பிணை  

2024-இல் 11 குற்றவாளிகளும் மீண்டும் சிறைக்கு அனுப்பப்பட்ட நிலையில், வழக்கின் போக்கில் மீண்டும் ஒரு திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரில் பிபின் சந்திர கனையாலால் ஜோஷி, பிரதீப் ராமன்லால் மோடியா ஆகிய இருவர், மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.

நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், பிரசன்னா பி. வரலே ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இவர்களின் மனுக்கள் விசாரணைக்கு வந்தன. குற்றவாளிகள் இருவரும் ஏற்கெனவே 17 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் இருந்துவிட்டனர் என்பதையும், அவர்களில் ஒருவர் மாற்றுத்திறனாளி நிலை என்பதையும் சுட்டிக்காட்டி, அவர்களின் ஆயுள் தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் பிணை (ஜாமீன்) வழங்கியுள்ளது.

இந்த உத்தரவு குறித்து பில்கிஸ் பானு, மிகுந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார்

2022 ஆம் ஆண்டு 11 பேர் விடுதலையான நிலையில், அதனை எதிர்த்து உச்சநீதிமன்றம் சென்று அந்த விடுதலை ரத்து செய்யப்பட்டதால் ஏற்கெனவே பலத்த வெறுப்பில் இருந்த ஹிந்துத்துவ அமைப்புகள் இந்த இரண்டுபேரின் விடுதலையை எதிர்த்து மேல் முறையீடு செய்யக்கூடாது என்று மிரட்டல் விடுக்கத் தொடங்கியது.

குறிப்பாக “இம்முறை மேல் முறையீடு செய்ய குடும்பத்தில் ஒருவர் கூட உயிரோடு இருக்கமாட்டார்கள்” என்று நேரடியாகவே மிரட்டல்கள் வந்துள்ளன.

ஏற்கெனவே குஜராத் அரசு செலவினங்களைக் காரணம் காட்டி பில்கிஸ் பானு, அவர்களது குடும்பத்திற்கு பாதுகாப்புத் தொடர்பான சலுகைகளை நீக்கி விட்டது. இந்த நிலையில் உயிரச்சம் காரணமாக   “உச்ச நீதிமன்ற உத்தரவிற்குப் பிறகு, அந்தக் குடும்பம் குஜராத்தை விட்டு வெளியேறியது,” என்று பில்கிஸ் பானுவின் மாமா அப்துல் ரசாக் மன்சூரி தெரிவித்தார்.

“உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, தண்டனை பெற்ற இருவரான பிபின்சந்த்  டாக்டர் கனையா லால் ஜோஷி, பிரதீப் ராமன்லால் மோடியா ஆகியோர் நவம்பர் 1 அன்று முறையே கோத்ரா மற்றும் தாவோத் சிறைகளிலிருந்து வெளியேறினர்” என்று இவ்விவகாரம் அறிந்த சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தாவோத் மாவட்டத்தில் உள்ள தேவத்கத் பாரியா நகரத்தில் வசிக்கும் மன்சூரி கூறுகையில், “பானு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வரை அந்த நகரத்தின் கப்டி விஸ்தார் பகுதியில் வசித்து வந்ததாகவும், பின்னர் குஜராத்தில் உள்ள மற்றொரு இடத்திற்குக் குடிபெயர்ந்ததாகவும்” தெரிவித்தார். “அவர் இப்போது மாநிலத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும், மிரட்டல்கள் தொடர்ச்சியாக வருகிறது, காவல்துறையும் ஒத்துழைக்கவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுதான் நாள் தோறும் உயிரச்சத்தோடு அவர்களால் வாழமுடியும் ஆகையால் குஜராத்தை விட்டு வெளியேறி விட்டார்” என்றார். இந்த பிணை உத்தரவை எதிர்த்துத் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தப் போவதாகவும் பில்கிஸ்பானு அறிவித்துள்ளார்.

வெளிநாட்டு அழைப்பை மறுத்த பில்கிஸ் பானு

இந்த நிலையில் இவருக்கு துருக்கி, சில வளைகுடா நாடுகளில் உள்ள மனித நேய அமைப்பினர் “இந்தியாவை விட்டு வெளியேறி மத்திய ஆசிய நாடுகளில் நீங்கள் தேர்ந்தெடுக்கும் நாட்டில் உங்கள் வாழ்நாள் முழுவதும் அமைதியாக வாழ அய்க்கிய நாடுகள் அமைப்பின் மூலம் அனுமதி வாங்கித்தருகிறோம்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்தக் கோரிக்கையை முழுமையாக பில்கிஸ் பானு நிராகரித்து விட்டார்.

இது தொடர்பாக மக்தூப் என்ற இணைய செய்தி நிறுவனத்திற்கு 2023 ஆம் ஆண்டு அளித்த நேர்காணலில் “எனக்கு என் நாட்டின் நீதித்துறையின் மீது நம்பிக்கை உள்ளது, சில நேரங்களில் பிறை நிலவு போல நம்பிக்கை சிதைந்தாலும் நீதி எனக்காக முழு நிலவாக ஒளிரும் அதற்காக நான் காத்திருப்பேன், இங்கு இருப்பது எனது தாயின் அரவணைப்பில் இருப்பது போன்ற உணர்வு என்றும் உள்ளது. இந்த உணர்வு வேறு எங்குமே கிடைக்காது” என்றார்.

நீதியின் மீதான அபார நம்பிக்கையை நீதித்துறை என்றுமே சிதைக்காது, சில நேரங்களில் சிறிய சறுக்கல்கள் ஏற்படும். இருப்பினும் இறுதியில் நீதியே வெல்லும் என்பதே அவரது நம்பிக்கை.

2002-ஆம் ஆண்டு குஜராத் வன்முறைக்குப் பிறகு பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கை சிதைந்துவிட்டதாக பிரிட்டன் அறிக்கை அன்று கணித்திருந்தது. இருபத்து நான்கு ஆண்டுகள் கடந்த பின்னரும், நீதிக்காகப் போராடும் ஒரு பெண்ணின் பாதுகாப்பும், மன அமைதியும் கேள்விக்குறியாகியிருப்பது, அந்த எச்சரிக்கை இன்றும் பொருத்தமாகவே இருப்பதை உணர்த்துகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *