‘தி டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டின் ஆசிரியர் அருண்ராம் எழுதியது என்ன?

- Advertisement -

ஒரு ஹீரோவின் மவுனம் ஒரு கட்சிக்கே அவமானம்!
த.வெ.க. என்பது ஒரு கட்சியும் அல்ல; மாற்றமும் அல்ல!

 

இந்தியாவின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையின் தமிழ்நாடு பதிப்புக்கான உறைவிட ஆசிரியர் அருண்ராம் உள்ளிட்டோர் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய்யைச் சில மாதங்களுக்கு முன்னர் சந்தித்த பதிவுகள் முதலமைச்சரின் தளத்திலிருந்து அண்மையில் நீக்கப்பட்டன. அதற்கு “ஒரு ஹீரோவின் மவுனம் ஒரு கட்சிக்கே அவமானம்! த.வெ.க. என்பது ஒரு கட்சியும் அல்ல; மாற்றமும் அல்ல” என்ற தலைப்பில் 16.11.2026 அன்று அவர் எழுதிய கட்டுரையே காரணம் என்று சொல்லப்படுகிறது. அக்கட்டுரையில் அப்படி அவர்  என்ன எழுதியிருந்தார்? இதோ அக்கட்டுரையின் தமிழாக்கம்:

தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த பல நிர்வாகிகள் மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், தனது சொந்தக் கட்சியினரையும் தவறு செய்தால் தட்டிக்கேட்கத் தயாராக இருக்கிறாரா?

தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ்நாட்டிற்கு ஒரு புதிய அரசியல் மாற்றத்தைக் கொண்டுவருவதாக விஜய் உறுதியளித்தார்.

வாக்குறுதிகள்
கேள்விக்குறியாகி விட்டன!

தூய்மையான அரசியல், மக்களுக்கு முன்னுரிமை, கட்சியைவிட மக்கள் நலனே முக்கியம் என்ற வாக்குறுதிகளுடன் அவரது கட்சி அரசியல் களத்தில் இறங்கியது. ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று ஆறு மாதங்கள்கூட ஆகாத நிலையில், அந்த வாக்குறுதிகள் கேள்விக்குறியாகத் தொடங்கியுள்ளன.

தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள், பெண்களிடம் அத்து மீறல், தாக்குதல், வழிப்பறி முயற்சி, ஊழல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச் சாட்டுகள் எனப் பல புகார்கள் எழுந்துள்ளன.

இவை தனிப்பட்ட சிலரின் தவறுகளாக மட்டும் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளன. கட்சியின் கட்டுப்பாடு மற்றும் தலைமைப் பொறுப்பு குறித்தும் கேள்விகள் எழுகின்றன.

தொடரும் சர்ச்சைகள்!

இந்தக் குற்றச்சாட்டுகள் எப்போது, யார் மீது எழுந்தன என்பதைப் பார்ப்போம். ஜூன் மாதம், தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மேற்கு மாவட்ட இளைஞரணிப் பொறுப்பாளர் பாலமுருகன் மற்றும் மற்றொரு கட்சி நிர்வாகி ஆகியோர், வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒரு பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டனர்.

பத்திரிகையாளர் மீது தாக்குதல்!

ஜூலை மாதம், மாம்பாக்கம் ஊராட்சித் தலைவர் வீராசாமி, ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் கேட்டதாகக் கைது செய்யப்பட்டார்.

ஆகஸ்ட் மாதம், சோளிங்கர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜி.கபில் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் பத்திரிகையாளர்களைத் தாக்கியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் சிக்கினர்.

நவம்்பர் மாதம், கள்ளக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சி.அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியர் ஜே.இ.பத்மஜாவுக்கு ஆபாசமான குறுஞ்செய்திகளை அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

போதைப் பொருள் கடத்திய
த.வெ.க. நிர்வாகி!

அக்டோபர் மாதம், போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என். பூபாலனைப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். கிரிஸ்டல் மெத்தபெட்டமைன் எனப்படும் போதைப்பொருளை கடத்த முயன்றதாக அவர் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது.

அதே காலகட்டத்தில், கன்னியாகுமரி மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கிறிஸ்டோபர் என்பவர், கல்லூரி மாணவி ஒருவருக்கு காரில் வீட்டிற்குச் செல்ல உதவுவதாகக் கூறி அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கைது செய்யப்பட்டார்.

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள்!

இதற்கு முன்பாக, கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள் இருவர், வெவ்வேறு வழக்குகளில் சிக்கினர். ஒருவர் சங்கிலிப் பறிப்பில் ஈடுபட முயன்றதாகவும், மற்றொருவர் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.

நவம்பர் மாதத்தில், கோவை மாவட்டம் காரமடை ஒன்றியச் செயலாளர் கருப்புசாமி மீது பெண் கட்சி நிர்வாகி ஒருவர் புகார் அளித்தார். அதில், பாலியல் துன்புறுத்தல், ஜாதியை அடிப்படையாகக் கொண்ட இழிவான பேச்சு மற்றும் மிரட்டல் விடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.

பேரவைத் துணைத்
தலைவர் அராஜகம்!

இதேபோல், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சட்டப் பேரவை துணைத் தலைவருமான எம். ரவிசங்கர், தன்னிடம் புகார் அளிக்க வந்த பொதுமக்களில் ஒருவரைத் தாக்கியதாகக் குற்றச் சாட்டு எழுந்தது.

கட்சியிலிருந்து நீக்குவது
மட்டுமே தீர்வா?

வீராசாமி, பூபாலன், கிறிஸ் டோபர் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். ஆனால், கைது நடவடிக்கைகளுக்குப் பிறகோ, பொதுமக்களின் எதிர்ப்புகள் அதிகரித்த பிறகோ சிலரை மட்டும் கட்சியிலிருந்து நீக்குவது நிரந்தரத் தீர்வாகிவிடாது.

கட்சியில் தவறு செய்பவர்களைக் கண்டறிந்து, அவர்கள் அதிகாரப் பொறுப்புகளுக்கு வருவதைத் தடுக்கும் வகையில் முறையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் தேவை. அத்தகைய ஒரு கொள்கை தமிழக வெற்றிக் கழகத்தில் இருக்கிறதா என்பதே இப்போதைய கேள்வி.

மாவட்ட ஆட்சியருக்கு குறுஞ்செய்தி!

இதில் மிகவும் வருத்தமளிக்கும் விஷயம் என்னவென்றால், கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் தொடர்ந்து தனது பதவியில் நீடிப்பதுதான். அவர் மீது மாவட்ட ஆட்சியருக்கு ஆபாசமான குறுஞ்செய்திகள் அனுப்பியதாகக் குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அந்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் மத்தியில் பேசுவதற்குக்கூட தயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலை வெளியிடுவதற்காக செய்தியாளர்களைச் சந்திக்கக்கூட அவர் முன்வர வில்லை எனக் கூறப்படுகிறது.

FIR – கூட பதிவு செய்யப்படவில்லை!

சட்டமன்ற உறுப்பினரின் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் முதலமைச்சர் அலுவலகத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அரசு உறுதியளித்துள்ளது. ஆனால், இதுவரை முதல் தகவல் அறிக்கை (FIR) கூட பதிவு செய்யப்படவில்லை.

அருள் விக்னேஷை பதவியிலிருந்து நீக்கினால் சட்டப்பேரவையில் தனது கட்சி பலவீனமடைந்துவிடும் என்று விஜய் அஞ்சுகிறாரா என்ற கேள்வியும் எழுகிறது.

முதலமைச்சரின்
அணுகுமுறை சரியல்ல!

இந்தப் பிரச்சினைகளுக்கான இறுதிப் பொறுப்பு கட்சித் தலைவர் விஜய்யையே சாரும். முக்கியமான பிரச்சினைகள் எழும்போதெல்லாம் தலைவரே மவுனமாக இருப்பதும், சில அமைச்சர்கள் மட்டும் பதிலளிப்பதும் சரியான அணுகுமுறை அல்ல. அவர்களும் பல நேரங்களில் முந்தைய ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டு வதையே தங்களது முதல் பதிலாகக் கூறுகின்றனர்.

ஆட்சியில் இருக்கும் எந்தக் கட்சியிலும் குற்றப் பின்னணி கொண்டவர்கள் இருக்கலாம். ஆனால், மற்ற கட்சிகளிலிருந்து தாங்கள் முற்றிலும் மாறுபட்டவர்கள் என்று கூறிக்கொள்ளும் ஒரு கட்சிக்கு, இதுபோன்ற குற்றச்சாட்டுகள் மிகப்பெரிய சவாலாகும்.

விஜய்யின் மவுனம், தவறு செய்பவர்களைக் கண்டும் காணாமல் இருப்பதாக மட்டுமல்லாமல், அவர்களுக்கு மறைமுகமாகப் பாதுகாப்பு அளிப்பதாகவும் மக்களால் புரிந்துகொள்ளப்பட லாம்.

தான் கூறியபடி, உண்மையான அரசியல் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று விஜய் விரும்பினால், அதற்கேற்ப அவர் செயல்பட வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்தக் கட்டுரையில் அருண்ராம் எழுதியுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *