டெக்கான் கிரானிக்கள், அய்தராபாத்:
* இந்திய மக்கள்தொகையில் 25% பேர் 24 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என அய்.நா. மக்கள் தொகை நிதியம் (UNFPA) தெரிவித்துள்ளது; இந்தியாவின் மக்கள் தொகை 81 ஆண்டுகளில் இரட்டிப்பாகும். 2026 மக்கள் தொகை எதிர்கால ஆய்வின்படி, 83% இந்தியர்கள் எதிர்காலம் குறித்து நம்பிக்கையுடன் உள்ளனர்; அதேவேளையில், குடும்ப அளவு, குழந்தைப்பேறு விருப்பம் மற்றும் மகப்பேறு காலத் தாய் இறப்பு விகிதம் தொடர்பான முக்கியத் தகவல்களும் வெளியாகியுள்ளன.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உலக விவகாரங்களில் இந்தியா வெறும் பார்வையாளராக மாறிவிட்டது – ராகுல் காந்தி! அமெரிக்கா – ஈரான் அமைதிப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ள நிலையில், உலக அரங்கில் இந்தியாவின் செல்வாக்கு குறைந்து விட்டதாக ராகுல் காந்தி விமர்சனம். மோடியின் தனிநபர் உறவுகளை மய்யமாகக் கொண்ட வெளியுறவுக் கொள்கையையும் அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழக உரையாடலில் சாடினார்.
தி இந்து:
* பெண்கள் இன்னும் உண்மையான சமத்துவத்தை அடையவில்லை: உச்சநீதிமன்ற நீதிபதி நாகரத்னா ஆதங்கம். நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்புத் திருத்தங்கள், முடிவெடுக்கும் அதிகாரத்தில் பெண்களின் பங்களிப்பு அவசியம் என்பதை உணர்த்துகின்றன என பேச்சு. நிறுவனங்களில் வரலாற்று ரீதியாக புறக்கணிக்கப்பட்ட சமூகங்களுக்கு பிரதிநிதித்துவம் வழங்க, சட்டப்படியான சமத்துவம் மட்டும் போதாது; உண்மையான பிரதிநிதித்துவமும் அவசியம் என நீதிபதி நாகரத்னா வலியுறுத்தினார்.
தி டெலிகிராப்:
* குஜராத் படுகொலையில் உயிர் தப்பி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளின் பிணையை எதிர்த்துப் போராடும் பில்கிஸ் பானோ! மீண்டும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்த பில்கிஸ் பானோ, நீதி கிடைக்கும் வரை தனது போராட்டம் தொடரும் என உறுதி.
* வாக்குத் திருட்டு குற்றச்சாட்டை பணமதிப்பிழப்பு நடவடிக்கையுடன் இணைத்து மோடி, அமித் ஷாவை காங்கிரஸ் சாடல். மக்கள் விரோதக் கொள்கைகளால் ஏழைகளும் நடுத்தர மக்களும் பாதிக்கப்படுகின்றனர்; ஆனால் அரசு எவ்விதப் பொறுப்புணர்வும் இன்றி செயல்படுகிறது என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* வரி குறைத்தும் ஏன் வேலைவாய்ப்பும் ஊதிய உயர்வும் வழங்கவில்லை? தொழில்துறையினருக்கு பிரதமர் மோடி கேள்வி! நிறுவன வரி 30%-லிருந்து 22%-ஆகக் குறைக்கப்பட்டும், ரூ.12 லட்சம் வரையிலான வருமானத்திற்கு வருமான வரி விலக்கு அளித்தும் ஊழியர்களின் சம்பளத்தையோ எண்ணிக்கையையோ உயர்த்தாதது ஏன் என பிக்கி (FICCI) கூட்டத்தில் தொழிலதிபர்களிடம் கேள்வி எழுப்பினார்.
– குடந்தை கருணா
