சென்னை, நவ. 18- ‘விழுப்புரம் மாவட்டம் அய்யனூர் கிராமத்தில் உள்ள ராமானுஜரின் கோயிலுக்குள் சென்று பட்டியலின மக்கள் வழிபாடு செய்வதை உறுதி செய்வது அரசின் கடமை. பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தக் கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது’ என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் அய்யனூர் கிராமத்தில் உள்ள ராமானுஜர் கோயிலுக்குள் நுழையக் கூடாது என்றும், அங்கு வழிபாடு நடத்தக் கூடாது என்றும் பட்டியலின சமூக மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தத் தடையை நீக்கி வழிபாடுகளில் பங்கேற்க அனுமதி வழங்கக்கோரி ஆறுமுகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாரா யணன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ஜாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக போராடிய ராமானுஜரின் கோயிலுக்குள் பட்டியலின மக்களை அனுமதிக்க மறுப்பது வாய்ப்புக்கேடானது என வேதனை தெரி வித்தார்.
அப்போது அரசுத் தரப்பில், அந்தக் கோயிலுக்கு மின் இணைப்பு வழங்க அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால், தனிநபர் பெயரில் மி்ன் இணைப்பு கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதையடுத்து நீதிபதி, சிலர் எதிர்ப்பு தெரிவித்தால் என்ன, ராமானுஜரே நேரில் வந்து மின்இணைப்பு கோர வேண்டும் என நினைக்கிறீர்களா எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், பட்டியலின மக்கள் ராமானுஜரின் கோயிலுக்குள் சென்று வழிபாடு செய்வதை உறுதி செய்வது அரசின் கடமை. பட்டியலின மக்கள் வழிபாடு நடத்தக்கூடாது என சொல்வதற்கு யாருக்கும் உரிமை கிடையாது. மீறி யாராவது தடுத்தால் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் ராமானுஜர் கோயிலுக்கு எப்போது மின் இணைப்பு வழங்கப்படும் என்பது குறித்து மின்வாரியமும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி விசார ணையை தள்ளி வைத்துள்ளார்.
