சேந்தநாட்டில் திராவிட மாணவர் கழகம் நடத்திய தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் விழா – சிறப்புக் கருத்தரங்கம்

- Advertisement -

சேந்தநாடு, நவ. 17- அறிவுலக பேராசான் தந்தை பெரியார் அவர்களின் 148ஆம் பிறந்தநாள் விழா, விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகம் சார்பில் சிறப்பு கருத்தரங்கம் சேந்தநாடு சுயமரியாதைச் சுடரொளி வை. சு. அரங்கநாதன் திடலில் 14.11.2026 அன்று மாலை 4 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது.

நிகழ்வின் தொடக்கமாக திண்டுக்கல் ஈட்டி.கணேசனின் “மந்திரமா” தந்திரமா?” – மூடநம்பிக்கை ஒழிப்பு, பகுத்தறிவு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்கள் அதனை ஆர்வத்துடன் பார்த்தனர்.

கருத்தரங்கத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில இணைச் செயலாளர் நாகை. மு.இளமாறன் தலைமை ஏற்றும், மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அரங்க.பரணிதரன், மாவட்டச் செயலாளர் ஏ.ரமேஷ், மாவட்டக் காப்பாளர் கொ. பூங்கான், மாவட்ட இணைச் செயலாளர் வளவனூர் சு. மாறன், மாவட்ட துணைச் செயலாளர் ச. தண்டபாணி, விழுப்புரம் நகரத் தலைவர் இரு. இராஜேந்திரன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

சேந்தநாடு திராவிட மாணவர் கழகத் தோழர் ய. இன்பதமிழன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் த. பகவான்தாஸ் கருத்தரங்கத்தில் இணைப்புரை வழங்கி ஒருங்கிணைத்தார்.

மாணவர் தோழர்கள் வி.அசோக்ராஜ், அ.அசரா ஆகியோர் அவர்களது பார்வையில் தந்தை பெரியார் குறித்து உரையாற்றினார்கள்.

தொடர்ந்து தலைமையேற்று உரையாற்றிய திராவிட மாணவர் கழக மாநில இணைச்செயலாளர் மு. இளமாறன் ஜாதி ஒழிப்பிற்காகவே தோன்றிய மாணவர் இயக்கம் திராவிட மாணவர் கழகம் என்றும் அதன் வரலாற்றையும், ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மூடநம்பிக்கை ஒழிப்பு என்ற அடிப்படைக் கொள்கைகளைப் பற்றியும், தந்தை பெரியாரின் அரசியலமைப்பு சட்ட எரிப்புப் போராட்டத்தையும், அதில் மாணவராக 14 வயது வாளாடி பெரியசாமியின் வீரத்தையும், கருஞ்சட்டைத் தோழர்களின் தியாகத்தையும் விளக்கி உரையாற்றினார்.

திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூரப் பாண்டியன் மாணவர்களோடு கலந்துரையாடி தந்தை பெரியாரிடம் உங்களுக்கு பிடித்தது என்ன? என்று கேள்வி எழுப்ப மாணவர்கள் ஒவ்வொருவரும் “கடவுள் இல்லை” என்றது, ஜாதி ஒழிப்பு, சமூகநீதி, சமத்துவம், பெண்ணுரிமை, பகுத்தறிவு, கோவில் நுழைவுப் போராட்டம் என்று பதில்களை அடுக்கினர். மாணவர்களின் கல்வியைக் குறி வைக்கும் ஒன்றிய பார்ப்பன பாஜக அரசின் அரசின் நீட், தேசிய கல்விக் கொள்கை போன்ற அநீதிகளை ஒழித்துக் கட்டத்தான் திராவிட மாணவர் கழகம் களத்தில் முன்னின்று போராடிக் கொண்டிருக்கிறது என்பதையெல்லாம் விளக்கித் தொடக்க உரையாற்றினார்.

திராவிடர் கழக மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி தந்தை பெரியார் அவர்களைப் பற்றியும், மூட நம்பிக்கை என்னும் நோயில் சிக்கி மந்திரவாதிகளால் பாதிக்கப்படும் அப்பாவி பொதுமக்களைப் பற்றியும் விளக்கினார். “யார் சொல்லி இருந்தாலும், எங்கு படித்து இருந்தாலும் நானே சொன்னாலும் உனது புத்திக்கும் பொது அறிவுக்கும் எட்டாத எதையும் நம்பாதே” என்று தந்தை பெரியார் அவர்கள் கூறியதை கூறி மாணவர்களுக்கு கருத்துரை வழங்கினார்.

திராவிடர் கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளராக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் அறிவிக்கப்பட்ட இராம.அன்பழகன் அவர்களுக்கு விழுப்புரம் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் அரங்க.பரணிதரன் வாழ்த்துகளை கூறி பயனாடை அணிவித்து சிறப்புச் செய்தார்.

தொடர்ந்து மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், இராம.அன்பழகன் “நூலைப் படி, சங்கத் தமிழ் நூலைப் படி, முறைப்படி..” என்று புரட்சி கவிஞரின் பாடலை பாடி மாணவர்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துரைத்தார், தந்தை பெரியாரின் உழைப்பினால் ஏற்பட்ட மாற்றங்களை விளக்கினார், “வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு விளையாடப் போகும்போது சொல்லி வைப்பாங்க – உன் வீரத்தைக் கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க! வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாகக் கூட நம்பி விடாதே!” என்ற பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனார் பாடலைப் பாடிப் பேய் பிசாசு என்பவை பொய் என்பதை விளக்கினார், மூடநம்பிக்கைகளுக்கு எதிராகவும், கடவுள் மறுப்புப் பற்றி பாடல்கள் மூலமும், நகைச்சுவைக் கேள்விகள் மூலமும் மாணவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தார். வரும் டிசம்பர் 2இல் 94ஆம் அகவை காணும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஓய்வறியா உழைப்பை எடுத்துக் கூறியும் சிறப்புரையாற்றினார்.

விழுப்புரம் மாவட்ட திராவிட மாணவர் கழகச் செயலாளர் சரண் நன்றி உரையாற்றினார். தொடர்ந்து மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர் இராம.அன்பழகன் தந்தை பெரியார் படத்தினை திறந்து வைத்தார். “தந்தை பெரியார் வாழ்க!” “அன்னை மணியம்மையார் வாழ்க!” “தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்க!” “தமிழர் தலைவர் தலைமையில் தந்தை பெரியார் பணி முடிப்போம்!” என்று மாணவர்கள் முழக்கமிட்டனர். எழுச்சியோடு நடைபெற்ற இக்கருத்தரங்கம் 7 மணிக்கு நிறைவடைந்தது. திராவிட மாணவர் கழக தோழர்கள், இளைஞரணித தோழர் மணிராஜ், பெரியார் சமூகக் காப்பு அணித் தோழர் நிலவன், விழுப்புரம் சட்டக் கல்லூரி திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர் இசையமுது உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *