வெங்கடாச்சலம் – இராசம்மாள் இல்லத்தைத் தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா
தஞ்சை, நவ 16, வெங்கடாச்சலம் – இராசம்மாள் இல்லத் திறப்பு விழா, சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழாக்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் ‘‘கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று 5ஆம் தலைமுறையாக ஆர்.தருமராசன் குடும்பத்தினர் வழிவழியாக பெரியார் கொள்கைகளை கடைப்பிடித்து வருகின்றனர். அவர்களது குடும்பத்தில் 11 டாக்டர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் இருக்கின்றனர். கொள்கைக் குடும்பமாக இருக்கின்ற இக்குடும்பத்தில்,நான் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் என்னை வழிநடத்துகிற அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள்” என்று பெருமிதமும், நெகிழ்ச்சியும் கலந்து உரையாற்றினார்.

வெங்கடாச்சலம் – இராசம்மாள் இல்லத்தினர் சார்பில், தஞ்சை, சாலியமங்கலம் ஊராட்சியில், நேற்று (15.11.2026) காலை 10 மணிக்கு வி.ஆர்.இல்லத்திறப்பு விழாவும், காலை 11:00 மணிக்கு வி.ஆர். மகாலில் சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழாவும் நடைபெற்றன. இவ்விருபெரும் விழாக்கள், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றன. நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு, சாலியமங்கலம் நால்ரோட்டில், ‘ஜெய் பேண்ட் இசைக்குழு’வினரின் அதிரடி இசை முழங்கவும், வெடிகள் வெடித்தும் எழுச்சிகரமான வரவேற்பு வழங்கினர். சாலியமங்கலம் நால் ரோட்டில் இருந்து, வெள்ளாளத்தெரு புதுமனை புகுவிழா இடம் வரையிலும் இருந்த குறுகலான பாதையில் இரண்டு பக்கமும் கழகத் தலைவரின் முழு உருவப் பதாகையும், கழகக் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. அந்த கழகக் கொடிகளுடனூடே கழகத் தலைவர் இசை முழக்கத்தினுடே ஊர்வலமாக அழைத்துச்செல்லப்பட்டார். அதைத் தொடந்து இல்லம் கழகத் தலைவரால் திறந்துவைக்கப்பட்டது.

11 மணிக்கு வி.ஆர்.மகாலில் நடைபெற்ற ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழாவில், வழக்குரைஞர் த.வீரசேகரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் கோபு. பழனிவேல் இணைப்புரை வழங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்களான தஞ்சை இரா.ஜெயக்குமார் மேடை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தும், இரா.குணசேகரன் இயக்கப் புத்தகங்களை அறிமுகம் செய்தும் உரையாற்றினர். ஆர்.தருமராசன் அவர்களின் வழிவந்த அய்ந்து தலைமுறையினரும் மேடையில் கூடியிருக்க, கழகத் தலைவர் ஆசிரியர், தருமராசன் படத்தைத் திறந்துவைத்தார். ஆர்.தருமராசன் அவர்களுக்கு பார்வையாளர்கள் உள்பட அனைவரும் புகழ் வணக்கமும், வீரவணக்கமும் செலுத்தினர். நிகழ்வில், டாக்டர் அருமைக்கண்ணு எம்.பி.பி.எஸ்.டி.ஓ., வழக்குரைஞர் சித்தார்த்தன் பி.ஏ.பி.எல்., டாக்டர் தமிழ்மணி எம்.டி.டி.ஜி.ஓ., அம்மாபேட்டை திராவிடர் கழகத்தின் ஒன்றியத் தலைவர் ஜவகர், சம்பந்தி புஷ்பம் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றியும், ஆர்.தருமராசன் குடும்பத்தினரான டாக்டர் வசந்தி வீரசேகரன், வெ.கோவிந்தராஜன், பொறியாளர் சண்முகநாதன், டாக்டர் இரா.அன்பு, சாந்தி, டாக்டர் மாலதி, டாக்டர் இரா.மலர்க்கொடி எம்.டி., டாக்டர் வாசுதேவன், டாக்டர் கோ.இராஜசேகரன், முனைவர் க.ஜான்சிராணி, டாக்டர் கோ.சிந்தனா, முனைவர் சு.பாலமுருகன், முனைவர் அப்பாவு (எ) பாலமுருகன், நீதிசிந்தியா, அண்ணாமலை, வழக்குரைஞர் சி.விவேக் தர்மராசன், டாக்டர் சி.அஜய், டாக்டர் சங்கரநாராயணன், பெரியார் பிஞ்சுகள் இரா.ராஜமித்ரன், இரா.நித்திலா, அ.சி.விண்மதி, அ.சி.இயலினி ஆகியோர் கலந்துகொண்டும் சிறப்பித்தனர்.

திருச்சியில் சிறுகனூரில் உருவாகி வரும் பெரியார் உலகம் கட்டுமானத்துக்கு, ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா சார்பாக, ரூபாய் 1 லட்சம் காசோலையாக சுயமரியாதைச் சுடரொளி தருமராசன் குடும்பத்தினர் வழங்கினர். கழகத் தலைவர் ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா மலரை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வெளியிட, திண்டுக்கல் டாக்டர் சங்கரநாராயணன், மூர்த்தி, மதுரை வரதராஜன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். டாக்டர் செல்வராணி, டாக்டர் கஸ்தூரி, டாக்டர் ரவீந்தரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். ஆர்.தருமராசன் குடும்பத்தின் வழிவந்த இணையர்கள் அனைவருக்கும், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி – மோகனா வீரமணி ஆகியோர் இணைந்து பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். டாக்டர் விஜயசேகரன் அவர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்து பாராட்டுகளை தெரிவித்தும், கழகத் தலைவருக்கு மரியாதை குடும்பத்தினர் சார்பில் பயனாடை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வை கோபு பழனிவேல் ஒருங்கிணைத்தார். நிறைவாக கழகத் தலைவர் பிற்பகல் 12 மணிக்கு உரையாற்றினார்.

அவர் தமது உரையில், “தந்தை பெரியாரின் அணுக்கத்தொண்டராக இருந்து, எந்தப்பணியைக் கொடுத்தாலும் செவ்வனே செய்யக்கூடியவரும், அன்றைக்கு ஸ்டேசன் மாஸ்டர் தருமராசன் என்று அறியப்படக்கூடிய அவரது படத்தை, தந்தை பெரியாரின் கொள்கை வழிவழி வந்தவர்களுடன் திறந்து வைக்கக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்” என்று அடக்கத்துடன் குறிப்பிட்டு, தருமராசன் அவர்களின் பெருமையை உயர்த்திக்காட்டினார். அவர், ‘‘கடந்த ஆண்டில் திராவிடர் இயக்கத் தலைவர்கள், தொண்டர்கள் என்று பலருக்கும் நூற்றாண்டு விழாக்களை சிறப்பாகக் கொண்டாடி இருக்கிறோம். அந்த வரிசையில் சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழாவையும் சென்னை பெரியார் திடலில் கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். அப்போதுதான், சாலியமங்கலத்தில் புதுமனை புகுவிழாவையும், நூற்றாண்டு விழாவையும் நாங்களே சிறப்பாகக் கொண்டாடுகிறோம் என்று வழக்குரைஞர் த.வீரசேகரன் போன்றவர்கள் கேட்டு, அதே போல சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள்” என்று நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை வாழ்த்தியதோடு, திராவிடர் கழகமே ஆர்.தருமராசன் அவர்களின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாட இருந்தது என்பதைக் குறிப்பிட்டதன் மூலம், ஆர்.தருமராசனுக்கான முக்கியத்துவத்தையும் அழுத்தமாகச் சுட்டிக்காட்டினார்.

‘‘சுயமரியாதைச் சுடரொளி ஆர்.தருமராசன் நூற்றாண்டு விழா என்பது ஒரு கொள்கைக் குடும்ப விழாவாகும். அய்ந்து தலைமுறைகளாக பெரியார் கொள்கைவழி தொடர்கின்ற ஆலமரம் போன்ற குடும்பம் இது. இவர்கள் நாங்கள் பார்த்து வளர்ந்த பிள்ளைகள். வழக்குரைஞர் த.வீரசேகரன் போன்றவர்கள் எங்களுக்கே வழிக்காட்டக்கூடிய அளவில் சிறப்பாக வந்திருக்கிறார்கள்” என்று பெருமிதமும், நெகிழ்ச்சியும் கலந்து குறிப்பட்டார். தந்தை பெரியார் காலத்தில் மருத்துவக் கல்லூரிக்கு சிபாரிசு செய்ததையும், அதற்குப் பிறகும் அந்தப்பணி தொடர்வதையும் சுட்டிக்காட்டி, அதில் பயன் பெற்ற டாக்டர் தமிழ்மணி போன்றவர்கள், பணிக்கு வந்தபிறகு முதல் மாத ஊதியத்தைக் கொண்டு வந்து பெரியாரிடம் கொடுத்ததுடன் இன்றைக்கும் பெரியார் இயக்கத்துக்கு நன்றி பாராட்டிக்கொண்டிருப்பதை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். இக்குடும்பத்தில் 27 மேலான சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தக்குடும்பத்தில் 11 டாக்டர்கள் மற்றும் வழக்குரைஞர்கள் இருக்கின்றனர் என்பதையும் கூறி வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார்.


இந்நிகழ்வில், திராவிடர் கழக மாநில தொழிலாளரணிச் செயலாளர் மு.சேகர், விவசாய தொழிலாளரணி துணைச் செயலாளர் அ.அருணகிரி, திராவிடர் கழக வழக்குரைஞர் அணிச் செயலாளர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன், தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளர் வி.சி.வில்வம், ஊடகப்பிரிவுத் தலைவர் அழகிரிசாமி, தஞ்சை மாநகரத் தலைவர் வீரகுமார், அம்மாபேட்டை ஒன்றியத் தலைவர் ஜவகர், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் செந்தூரபாண்டியன், தஞ்சை மாவட்டக் காப்பாளர் மு.அய்யனார், தஞ்சை மாவட்டத் தலைவர் வன்னிபட்டு செ.தமிழ்ச்செல்வன், தஞ்சை மாவட்டச் செயலாளர் கருவிழிக்காடு ரெ.சுப்பிரமணியன், ஒன்றிய துணைத் தலைவர் உத்ராபதி, ஒன்றிய துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகரத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டத் துணைத் தலைவர் பா.நரேந்திரன், ப.க.பொறுப்பாளர் தம்பித்துரை, தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி மற்றும் ஏராளமான ஆர்.தருமராசன் குடும்ப வழி வந்தவர்கள், திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளிட்ட அமைப்புகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
