எங்களுடைய கண்ணோட்டம் ஓட்டுக் கண்ணோட்டம் அல்ல; நாட்டுக் கண்ணோட்டம் – மக்கள் கண்ணோட்டம்! சிறப்புக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் சிறப்புரை

9 Min Read
- Advertisement -

பெரியார் திடலிலே இருந்து எந்தக் கேள்வி பிறந்தாலும், அந்தக் கேள்விக்கு
விடை கிடைக்காத வரையில் விடமாட்டோம் – நிச்சயமாக விடை கிடைக்கும்!

நாங்கள் பதவிக்காக இருக்கிறவர்கள் அல்ல;
மக்கள் நலனுக்காக இருக்கக்கூடியவர்கள்!

சென்னை, நவ.14  ‘‘பெரியார் திடலிலே இருந்து எந்தக் கேள்வி பிறந்தாலும், அந்தக் கேள்விக்கு விடை கிடைக்காத வரையில் விடமாட்டோம். நிச்சயமாக விடை கிடைக்கும்; ஏனென்றால், இது சுயநலத்தைப் பொருத்தது அல்ல. நாங்கள் பதவிக்காக இருக்கிறவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக இருக்கக்கூடியவர்கள். ஓட்டுக் கண்ணோட்டம் அல்ல, எங்களுடையது நாட்டுக் கண்ணோட்டம் – மக்கள் கண்ணோட்டம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்.

தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’ வைக் கலைத்தது சரிதானா?
மாநில உரிமைகளை அடகு வைப்பதா?

கடந்த 12.11.2026 அன்று மாலை 6.30 மணிக்கு சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், பெரியார் நூலக வாசகர் வட்டம் – தமிழ்நாடு மூதறிஞர் குழு சார்பில், தி.மு.க. அரசு அமைத்த ‘‘ஒன்றிய – மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு’’ வைக் கலைத்தது சரிதானா? மாநில உரிமைகளை அடகு வைப்பதா? என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கருத்தரங்கில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பல்கலைக் கழகங்களைத் தவிர, தேர்வு நடத்தக்கூடிய உரிமை அரசியலமைப்புச் சட்டத்திலேயே யாருக்கும் இல்லை!

ஏன் நீட் தேர்வு அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது? ஒன்றிய அரசுக்கு அந்தத் தேர்வு நடத்த  அதிகாரம் கிடையாது. அப்படி நடத்துவது பல்கலைக் கழகங்களின் சுதந்திரத்தைப் பறிப்பதாகும் என்பதற்குப்  பல இடங்களில் இருந்து சட்ட விதிகளை எடுத்துக் காட்டி, பல்கலைக் கழகங்களைத் தவிர, தேர்வு நடத்தக்கூடிய உரிமை அரசியலமைப்புச் சட்டத்தி லேயே யாருக்கும் இல்லை, இல்லாத ஒன்றை நீங்கள் திணித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பன போன்ற பல்வேறு செய்திகளை இந்த அறிக்கையில் எடுத்துச் சொல்லி இருக்கிறார்கள்.

மும்மொழிக் கொள்கை என்பதை ஏன் ஏற்க கூடாது? என்பதற்கு அரசியல் காரணம் அல்ல. முழுக்க முழுக்கப் பிள்ளைகளுடைய கல்விச் சூழல்தான் காரணம். அந்த அடிப்படையைத் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஒவ்வொரு பகுதியாக எடுத்து
‘விடுதலை’ நாளேட்டில்  வெளியிடப்படும்!

தோழர்களே, இதையெல்லாம் விளக்கி மணிக்கணக்கில் அல்ல; நாள் கணக்கில் பேச வேண்டி இருப்பதால், ஒன்றை முடிவு செய்திருக்கி றோம். மிக முக்கியமான இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் தெளிவாகப் பதிலளித்திருக்கின்ற இந்த ஆணையத்தின் அறிக்கையிலிருந்து, ஒவ்வொரு பகுதியாக எடுத்து ‘விடுதலை’ நாளேட்டில் வெளியிடப்படும். பிறகு அது நூலாகவும் ஆகும். நல்ல வாய்ப்பாக, இதை யார் வேண்டுமானாலும் அச்சிடலாம்; யார் வேண்டுமானாலும் பரப்பலாம் என்று சொல்லியி ருக்கிறார்கள்; யாரும் படிக்கக்கூடாத புத்தகம் என்று மறுக்கவில்லை. இந்த ஜாதிதான் படிக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய புத்தகம் அல்ல இது! ‘‘இதை எல்லோரும் படிப்பதற்கு உரிமை கொடுத்திருக்கிறோம்’’ என்று சொல்லும்போதே, அவர்கள் இது பரவ வேண்டும் என்பதில் எவ்வளவு அக்கறை எடுத்திருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம்தான் இது.

மாநிலப் பட்டியலில் இருந்தது, கல்வி. நெருக்கடி காலத்தைப் பயன்படுத்திக்கொண்டு, அதை ஒன்றிய அதிகாரத்தினுள்  ஒத்திசைவுப் பட்டியலில் தள்ளி னார்கள். கடைசி நேரத்தில், பார்ப்பனியம், ஆரியம் எல்லாவற்றுக்கும் முன் நின்றது. மற்ற சில முக்கிய பிரிவுகளையும் திருத்தினார்கள்.

கல்வியை மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வர வேண்டும் என்று நம்முடைய டாக்டர் எழிலன் போன்றவர்கள், அதேபோல திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சட்டத்துறைச் செயலாளரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான வழக்குரைஞர்  என்.ஆர்.இளங்கோ அவர்கள் வாதாடினார். அந்த வழக்கில், ஒரு செய்தியைச் சொன்னார்.  இன்னும் பல பேருக்குத் தெரியாது, செய்தியாளர்களுக்கே தெரி யாது. உயர்நீதிமன்றத்தில இன்னும் அந்த வழக்கு நிலுவையில் இருக்கிறது பல ஆண்டுகளாக! அதற்கு என்ன காரணம் என்று நினைத்துப் பார்க்க வேண்டும்.

வழக்குரைஞர் நண்பர்கள் குழு,
வழக்குப் போட்டிருக்கிறார்கள்!

அது மட்டுமல்ல, உங்களுக்கும் சொல்ல வேண்டும். ஏன், மற்றவர்கள் அப்போது முயற்சி எடுக்கவில்லை என்றார்கள்.  முயற்சி எடுத்தார்கள். அப்படி முயற்சி எடுத்தவுடனே, முதலில் ஒப்புக்கொண்டு – அது மக்களவையிலே நிறைவேற்றப்பட்டுவிட்டது. மாநிலங்கள் அவையில் விவாத்திற்குப் போகின்ற நேரத்தில், ஆட்சிகள் மாறக்கூடிய அளவுக்கு வந்த உடனே, அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார்கள். இந்த நிலையை ‘ஏன்?’ என்று கேட்டு, வழக்குரைஞர் நண்பர்கள் குழு, வழக்குப் போட்டிருக்கிறார்கள். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது.

இந்த ஆணையம் அரசியல் ரீதியானது என்று நீங்கள் கருதுகிறீர்களா? கல்வி, மாநிலப் பட்டியலிலிருந்து, ஒத்திசைவுப் பட்டியலுக்குப் போனதால் தானே, நமக்கு நீட் தேர்வு என்ற கழுத்தறுப்பு.  கல்வியை மாநிலப் பட்டியலிருந்து எடுத்ததினால்தானே, துணைவேந்தர் நியமனங்கள் இல்லாமல், பல பல்கலைக்கழகங்கள் இருக்கின்றன. அதற்கு என்ன  தீர்வு என்று வரும்போது, இவையெல்லாம் வழிகாட்டக் கூடியவையாக இருக்கின்றன, யாருக்கு? ஆட்சியாளருக்கு!

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவோம் என்று சொன்னீர்களே?

இன்றைய ஆட்சியாளர்களுக்கு இருக்கிற பல கெட்ட பெயர்களிலே ஒன்று என்னவென்றால், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் மாற்றி விடுவோம் என்று சொன்னீர்களே, இதுவரையில் 14 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தரே இல்லையே, அதற்கு என்ன காரணம்?

துணைவேந்தர்களை நியமிக்கக்கூடிய குழுவிலே ஆளுநர்  இருக்கக்கூடாது, வேந்தராக ஆளுநர் இருக்கக் கூடாது. அதனுடைய வரலாறு என்ன? என்று யோசிக்க வேண்டாமா? ஒரு தனி நபரை மனதில் வைத்துக் கொண்டு அல்ல; அனுபவங்களை வைத்துக்கொண்டு!

இதெல்லாம் எப்படி வந்தது?  எப்படி திரிபுவாதம் மாற்றப்பட்டது? இந்த வரலாற்றை நீங்கள் படிக்க வேண்டும். ஒவ்வொரு பகுதியாக ‘விடுதலை’யில் வெளியிடப்படும்.

கலைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, நீங்கள் மீண்டும் மறுபரிசீலனை
செய்ய வேண்டும்!

ஆகவேதான், சிறப்பாக, அருமையாக இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களுக்கு ஆயிரம் பாராட்டுகள், ஆயிரம் நன்றிகள்! நாம் அமர்ந்து கொண்டு அல்ல; எழுந்து நின்று, அதனை சிறப்பாக வரவேற்று, இதை ‘திராவிட மாடல்’ ஆட்சி செய்தது என்பதற்காக, அந்த ஆட்சியாளர்களையும் சேர்த்துப் பாராட்டுகிறோம். மிக முக்கியமாக ‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சிறப்பான சாதனைகளிலே எதிர்காலச் சந்ததியினருக்கு, இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய ஒரு சந்ததியி னருக்கு, சிறப்பானது இது. எனவேதான், கலைக்கப்பட்ட உயர்நிலைக் குழுவை, நீங்கள் மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும். மீண்டும் அந்தக் குழு வரவேண்டும்.

(ஆசிரியர் அவர்கள் எழுந்து நின்று, தீர்மானமாகவே இதனை முன்மொழிந்ததும், மேடையில் இருந்தவர்களும், அரங்கில் இருந்த தோழர்களும் எழுந்து நின்று, கையொலி எழுப்பி, இத்தீர்மானத்தை வழிமொழிந்தார்கள்).

அந்த வகையிலே நண்பர்களே!  பரந்தாமன் அழகாக ஒன்றைச் சொன்னார். Statutory Rights இருக்கிறதா? என்றெல்லாம் கேட்டு,  அவை பொருந்தாக் காரணங்கள் என்று சொன்னார். பரந்தாமன் சொன்னால், அதைத் தி.மு.க.காரர் சொல்லி இருக்கிறார் என்று நினைப்பார்கள். இது நேற்றைய (11.11.2026) ‘இந்து’ பத்திரிகையில் வெளிவந்த தலையங்கம். இந்து பத்திரிகையும் உங்கள் எதிரிதானா?  எல்லோரும் எதிர்க்கட்சிதானா?

ஆங்கிலத்தில் வெளிவந்த தலையங்கத்தை தமிழில் தருகிறோம்.

குரியன் ஜோசப் ஆணையம் கலைப்பு:
காரணமற்ற முடிவு!

‘‘நீதிபதி குரியன் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால், இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு மேலும் வலுப் பெற்றிருக்கும்.

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்து விட்டு, அதன் பணிகளைத் தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்ததன் மூலம், சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, எந்தவொரு வலுவான காரணத்தாலும் அல்லது அவசியத்தின் அடிப்படையிலும் வழிநடத்தப்படாமல், முந்தைய முடிவுகளை மாற்றியமைக்கும் அரசியல் உந்துதலுக்குப் பணிந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்காகக் கூறப்படும் காரணங்களே இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கின்றன.

இந்தக் குழு தனது பணியை மிகுந்த ஆய்வுத் திறனுடனும், அறிவியல் பூர்வமான அணுகு முறையுடனும் மேற்கொண்டது. இதற்குச் சான்றாக, அதன் அறிக்கையின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள ஆய்வுகளைக் குறிப்பிடலாம். அந்த அறிக்கை பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குழு ஒரு ‘சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத அமைப்பு’ (Non-statutory body) என்பதே குழு கலைக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாகக் கூறப்படுவது நம்பத்தகுந்ததாக இல்லை. குறிப்பாக, மாநில சட்ட ஆணையமே ஓர் அரசாணையின் (Executive Order) மூலமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை மாநிலச் சட்ட ஆணையங்கள் ஆய்வு செய்துள்ளனவா அல்லது அவற்றுக்குத் தீர்வு காண முயன்றுள்ளனவா என்பதற்கான பொதுவெளி ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மாநிலச் சட்ட ஆணையத்தின் பரந்த பொறுப்புகளைக் கருத்தில் கொண்டால், அடுத்தடுத்து வந்த தமிழ்நாடு அரசுகள், மாநிலப் பட்டியல் மற்றும் ஒத்திசைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடுகளை ஆராயவும், அவற்றுக்கான குறிப்பிட்ட தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளன.

அத்தகைய குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்ப டையில்தான், ஒன்றிய அரசின் சட்டங்களால் ஏற்படும் சில கட்டுப்பாடுகளைத் தாண்டி, தமிழ்நாடு அரசு சில சட்டங்களை இயற்ற முடிந்தது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பின்தங்கிய மாண வர்களுக்கான தொழில் முறைப் படிப்பு சேர்க்கையில் கிடைமட்ட இடஒதுக்கீட்டை (Horizontal Reservation) அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

எனவே, இந்தக் குழுவுக்கும் மாநிலச் சட்ட ஆணையத்துக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளின் தன்மையும், வரம்பும் ஒரே மாதிரியான அம்சங்களுடன் உள்ளன என்ற தற்போதைய மாநில அரசின் மற்றொரு வாதமும் ஆழமான பொருளுடையதாக இல்லை.

எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்தக் குழுவின் செயல்பாடுகளை முடக்குவதற்கான முயற்சி நடைபெறுவதாக செப்டம்பர் மாதத்தில்  குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தக் குழுவின் முதல் பகுதி அறிக்கையை நியாயமான முறையில் மதிப்பீடு செய்தால், மாநில சுயாட்சி, தொகுதி மறுவரையறை மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தக் குழு மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்திருப்பது தெரியவரும்.

பாரதிய ஜனதா கட்சியைத் தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அந்த அறிக்கையை வர வேற்றிருந்தன. வியப்புக்குரிய வகையில், அந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள், மாநில உரிமைகள் தொடர்பாகத் திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பொது வெளியில் வெளிப்படுத்தி வரும் கொள்கை நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகக்கூட இல்லை.

மேலும், அரசியல் தொடர்புடைய ஒரே உறுப்பினராக அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் மு.நாகநாதன் ஏற்கெனவே தனது பதவியை விட்டு விலகிவிட்டார்.

எனவே, இந்தக் குழு தனது பணியை முழுமையாக நிறைவு செய்வது குறித்துத் தமிழ்நாடு அரசு மீண்டும் சிந்தித்து அனுமதிப்பதே சிறந்ததாக இருக்கும்.

இத்தகைய நடவடிக்கை, மேலும் சமநிலையான கூட்டாட்சி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்தும். அதன்மூலம் ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.’’

 

வருமான வரம்பு நீண்டு இருக்குமேயானால், எம்ஜிஆர் ஆட்சியும் நீண்டிருக்க முடியாது!

ஆட்சியாளர்கள் தலையில் ‘குட்டு’ மட்டுமல்ல; சிறப்பான அறிவுரையை, பொதுவானவர்கள் சொல்லுகி றோம். இந்த அறிவுரை, அவர்களுடைய காதுகளுக்குக் கேட்கவேண்டும்;  நிச்சயமாக அது கேட்கும். கேட்டால் உங்களுக்கு லாபம் – கேட்டால் உங்களுக்குப் பழிச்சொல் தீரும். நீங்களே ஏற்படுத்திக் கொண்ட பள்ளத்தை, நீங்களே அதை அடைக்கக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும். தவறுகளைத் திருத்திக் கொள்வதும் ஜனநாயகம் தான். எம்.ஜி.ஆர். அவர்கள் முதலமைச்சராக இருந்தபொழுது, 9 ஆயிரம் ரூபாய் வருமான வரம்பைக் கொண்டு வந்தார்.  பிறகு, அதே எம்.ஜி.ஆர்.அவர்கள் திருத்திக் கொண்டதினால்தான், எம்.ஜி.ஆர். இன்றைக்கு மதிக்கப்படுகிறார். அன்றைக்கு அந்த வருமான வரம்பு நீண்டு இருக்குமேயானால், எம்ஜிஆர் ஆட்சியும் நீண்டிருக்க முடியாது. தெளிவாக அன்றைக்கு இருந்த நிலை அதுதான். இன்றைய சிறு பிள்ளைகளுக்குத் தெரியாது, அதனால் நினைவூட்டுகிறோம்.

நாங்கள் பதவிக்காக இருக்கிறவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக இருக்கக்கூடியவர்கள்!

ஆளுங்கட்சியினரே, முதலமைச்சர் அவர்களே, மற்றவர்களே, அவர்களுக்கு ஆலோசனை சொன்ன வர்களே, ஒரு பொதுநிலையில் இருந்து நாங்கள் சொல்கிறோம். பெரியார் திடலிலே இருந்து எந்தக் கேள்வி பிறந்தாலும், அந்தக் கேள்விக்கு விடை கிடைக்காத வரையில் விடமாட்டோம். நிச்சயமாக விடை கிடைக்கும்; ஏனென்றால், இது சுயநலத்தைப் பொருத்தது அல்ல. நாங்கள் பதவிக்காக இருக்கிறவர்கள் அல்ல; மக்கள் நலனுக்காக இருக்கக்கூடியவர்கள். ஓட்டுக் கண்ணோட்டம் அல்ல, எங்களுடையது நாட்டுக் கண்ணோட்டம் – மக்கள் கண்ணோட்டம்.

(தொடரும்)

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *