தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

5 Min Read
- Advertisement -

*   தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளை நாடெங்கும் கொண்டாடுவோம்!

* ‘நீட்’டை எதிர்த்து நாடெங்கும் ஆர்ப்பாட்டம்!

* நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்ததற்குக் கண்டனம்!

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டப்படி நியமனங்களை
டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் தமிழ்நாடு அரசு செயல்படுத்தவேண்டும்!

இல்லையேல் போராட்டத்தைத் திராவிடர் கழகம் அறிவிக்கும்!

தஞ்சை, நவ.14 திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்த நாளை (டிச.2) தமிழ்நாடெங்கும் கொண்டாடுவது, ‘நீட்’ தேர்வை எதிர்த்துப் போராட்டம், டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை நிலை நாட்டவேண்டும்; இல்லையேல், திராவிடர் கழகத்தின் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட ஏழு தீர்மானங்கள் தஞ்சாவூரில் இன்று (14.11.2026) திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம் எண்: 1

இரங்கல் தீர்மானம்
(3 ஆம் பக்கம் காண்க)

தீர்மானம் எண் 2:

தமிழர் தலைவரின்
பிறந்த நாளைக் கொண்டாடுவோம்!

தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் ஆகி யோரால் வளர்க்கப்பட்டு, அவர்களாலேயே அடையாளம் காட்டப்பட்டு, அவர்கள் காலத்துக்குப் பின்னால், இயக்கத்தை வழிநடத்தி, இன்னல்கள், இடையூறுகள், இழிசொற்கள், தாக்குதல்கள் அனைத்தையும் கடந்து இயக்கத்தை இளைஞர்களின் பாசறையாக மாற்றியமைத்து, தந்தை பெரியாரை உலக மயமாக்கலில் வெற்றி கண்டுவரும், தந்தை பெரியார் கொள்கைகளைச் செயல்படுத்தியும், அவர்தம் லட்சியங்களை நிறை வேற்றியும் வரும் நமது அரும் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 94 ஆம் ஆண்டு பிறந்தநாளுக்கு இத் தலைமைச் செயற்குழு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் பிறந்தநாளைச் ‘‘சுயமரியாதை நாளாக’’ உலகெங்கும் கொண்டாட வேண்டும் என்றும் தமிழினப் பெரு மக்களையும், சமூகநீதி உணர்வாளர்களையும் இக் கூட்டம் கேட்டுக் கொள்கிறது!

திராவிடர் கழகத்தின் சார்பில், ‘யுனெஸ்கோ மன்றம் பார்வையில் பெரியார்’ புத்தக அறிமுக விழாக்கள், தெருமுனைக் கூட்டங்கள், குருதிக் கொடை முகாம்கள், சுயமரியாதைக் குடும்ப விழாக்களைத் தொடர்ச்சியாக மாவட்டம் தோறும் அதன் முக்கிய செயலாக்கமாக நடத்துவது என்றும் இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் எண் 3:

நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான மாநில உரிமைகளை வலியுறுத்தும் ஆணையத்தைக் கலைப்பதா?

இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படியான மாநில உரிமைகளுக்கான பாதையை உருவாக்கியது தமிழ்நாடு. இதற்கென்றே இந்தியாவில் முதல்முறையாக 1969 ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர்  முத்தமிழறிஞர் கலைஞரால் அமைக்கப்பட்டது ஜஸ்டிஸ் பி.வி.ராஜமன்னார் ஆணையம் ஆகும். அதன் பின்னரே சர்க்காரியா கமிஷன், பூஞ்ச்சி கமிஷன் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. கடந்த 12 ஆண்டுகளாக, மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நடந்து வந்த சூழலில், கடந்த திராவிட மாடல் அரசில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் ஓய்வுபெற்ற நீதிபதி ஜஸ்டிஸ் குரியன் ஜோசப் தலைமையில் அமைக்கப்பட்ட “ஒன்றிய மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு” தமது முதல் கட்ட அறிக்கையைச் சமர்ப்பித்திருந்த நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.

திராவிடர் கழகம்

திராவிடர் கழகம்

இறுதிக் கட்ட அறிக்கையைச் சமர்ப்பிக்க இன்னும் காலம் இருக்கும் சூழலில், வரலாற்றுச் சிறப்புமிக்க அந்த ஆணையத்தைத் திடீரென ஆளும் த.வெ.க. அரசு கலைத்திருப்பதை இத் தலைமைச் செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

இது தமிழ்நாட்டுக்கும், இந்தியாவின் மாநில உரிமைக்கும் இழைக்கப்பட்டுள்ள வரலாற்றுத் துரோகம் என்பதையும் இச் செயற்குழு சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவையே ஒற்றையாட்சி நாடாக, சர்வாதிகார நாடாக மாற்ற  சட்டரீதியாகச் சூழ்ச்சி செய்துவரும் ஒன்றிய பா.ஜ.க. அரசை, சட்டரீதியாகவே சந்திக்க அமைக்கப்பட்ட இக் குழுவைக் கலைப்பதற்கான எந்த நியாயமும் இல்லை. பா.ஜ.க. இதனை வரவேற்றிருப்பதன் மூலம் தமிழ்நாடு ஆளும் த.வெ.க. அரசு யாருக்குச் சார்பாகச் செயல்பட்டிருக்கிறது என்பதை அறியமுடியும்.

தமிழ்நாடு அரசு தமது முடிவிலிருந்து பின்வாங்கி, ஆணையத்தைக் கலைத்த ஆணையைத் திரும்பப் பெற வேண்டும் என்று இத் தலைமைச் செயற்குழு வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 4:

நீட்டை எதிர்த்து
மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம்!

நீட் நுழைவுத் தேர்வின் கெடுவிளைவாக, தமிழ்நாட்டில் 90 சதவிகிதம் பயிலும் மாநிலப் பாடத் திட்ட மாணவர்களின் உரிமை பறிக்கப்பட்டு, அவர்களுக்கு 40 சதவிகித இடம் மட்டுமே மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் மாபெரும் அநீதியைக் கண்டித்தும், நீட் தேர்வின் சமூக அநீதியை எடுத்துக் காட்டியும் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்திட இச் செயற்குழு தீர்மானிக்கிறது.

 

தீர்மானம் எண் 5:

அனைத்து ஜாதியினருக்கும்
அர்ச்சகர் உரிமையை செயல்படுத்துக!

தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்கும் சட்டத்தைச் செயல்படுத்தியது கடந்த ‘திராவிட மாடல்’ ஆட்சி. ஆனால், அதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில் உச்சநீதிமன்றத்தில் இருக்கும் சில வழக்குகளைக் காரணம் காட்டியும், ஆகமக் கோயில் – ஆகமம் அல்லாத கோயில் என்று பிரித்து, ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக விடாமல் தடுக்கவும், பல்வேறு வலைப்பின்னல்கள் மூலம் முயற்சிகள் நடைபெறுகின்றன. உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பினைப் பெற்றுத் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைத் தொடருவதற்கு எந்தத் தயக்கமும் இருக்க அவசியமில்லை. இந்த அரசு, இதற்கான திசையில் ஆக்கப்பூர்வமான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல், இந்தப் பிரச்சினையைக் கண்டுகொள்ளாமல் இருப்பது சரியானதல்ல. உச்சநீதிமன்றத்தின் தடையை நீக்கிட, தீவிர சட்ட முயற்சிகளை எடுக்கத் தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும்.

தமிழ்நாடு அரசின் சட்டப்படி, அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக நியமிக்கும் நடவடிக்கைகள் தொடரவேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் படிப்போர் இடையூறின்றி படிப்பைத் தொடர வழி செய்யவேண்டும். டிசம்பர் 31 -க்குள் நியமனங்கள் நடைபெற வேண்டும். இல்லையெனில், 2027-ஆம் ஆண்டில் திராவிடர் கழகம் போராட்டத்தை அறிவிக்கும் என்பதை அரசுக்கு இத் தலைமைச் செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

 

தீர்மானம் எண் 6:

1000 போராட்டக் கள வீரர்களின் பட்டியல் –
மேலும் விரிவாகட்டும்!

திராவிடர் கழகப் பொதுக் குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கோரியபடி 1000 போராட்டக் கள வீரர்கள் பட்டியலைச் சேலத்தில் வழங்கிய கழகப் பொறுப்பாளர்கள், அடுத்த கட்டமாக நடைபெறவிருக்கும் அறவழிப் போராட்டங்களுக்கு, கள வீரர்களை ஆயத்தப்படுத்துவதுடன், அடுத்த போராட்டக் கள வீரர்கள் கொண்ட இரண்டாவது பட்டியலையும் டிசம்பர் மாத இறுதிக்குள், மாவட்டம் வாரியாக தயாரித்து, தலைவரிடம் பொறுப்பாளர்கள் நேரில் அளிக்கவேண்டும். ‘போராட்டம் நமது ரத்தவோட்டம்’ என்ற நினைப்புடன், கழகத்தவர் அனைவரும், குறிப்பாக இளைஞர், மகளிர் ஆயத்தமாகவேண்டும்.

தந்தை பெரியார் பணி முடிக்க முனைப்பாக இருக்கவேண்டும் என்று கழகத் தோழர்களை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

 

தீர்மானம் எண் 7:

மூடநம்பிக்கை ஒழிப்பு சூறாவளிப் பிரச்சாரம்!

கல்லக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் சில இடங்களில் மாந்திரீகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும், இதனால் அச்சமுற்ற மக்கள் சாமியார்களை, மதவாதிகளை நோக்கிச் செல்வதாகவும் ஒரு செய்தி வெளிவந்ததையடுத்து, கழகத் தலைவரின் ஆணைப்படி, அம் மாவட்டத்தில் நவம்பர் 21, 22 ஆகிய இரண்டு நாட்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொள்வது என்று இக் கூட்டம் தீர்மானிக்கிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *