இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு செல்பவர்கள், எந்தவித சோதனைக் கருவி யாலும் கண்டுபிடிக்க முடியாத ஓர் அருவருப்பான ஆபத்தான ஜாதி என்னும் மனித விரோதத்தை, அழுகி நாற்றம் எடுக்கும் மனம் என்னும் கழிவுத் தொட்டியில் சுமந்து செல்வது மட்டுமல்லாமல், அங்குள்ள வெளிநாட்டவர்கள் மத்தியிலும், அந்தத் துர்நாற்றத்தை பரப்பிக் கொண்டிருக்கிற காலகட்டம் இது!
அதிர்ச்சியான கசப்பான வரலாறு தான்… ஆனாலும் உண்மை!
கரோனா என்னும் பெரும் நோய் வந்த பொழுது அதனைப் பின் தொடர்ந்து எப்படி கோவாக்சின் போன்ற தடுப்பு மருந்துகள் மனித உயிர்களை காப்பாற்றியதோ, அதேபோல இன்றைக்கு வெளிநாடுகளில் பரவும் ஜாதி எனும் கொடிய நோயைத் தடுக்கின்ற விதமாக, தந்தை பெரியார் என்னும் ஜாதி நோய்த் தடுப்பு மருந்துகளைப் பரப்புகின்ற ஓர் அற்புத இயக்கமாக, பெரியார் பன்னாட்டு அமைப்பு இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த இயக்கம் பற்றிப் படர்ந்து உலகெங்கும் பல நாடுகளில் கிளைகள் பரப்பி நிற்கின்றது.
எங்கும் பரவி நிற்கும் அந்தத் தங்க நிற கிளைகளைத் தாங்கும் ஆலமரமாய் இருக்கின்றார்கள் நம்முடைய மருத்துவ இணையர்கள் அம்மா சரோஜா இளங்கோவன் அவர்களும், அய்யா சோம.இளங்கோவன் அவர்களும்.
பெரியார் பன்னாட்டு மய்யம் தந்தை பெரியாரின் கொள்கைகளை பரப்புவதோடு நிற்காமல், பாபாசாஹேப் அவர்களின் கொள்கைகளையும் பரப்பிக் கொண்டிருக்கிறது.
அறிவாசான் தந்தை பெரியாரும், புரட்சியாளர் பாபா சாஹேப் அவர்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள், வற்றாது ஓடும் ஜீவ நதியின் இரண்டு கரைகள், ரயில் பெட்டிகளை சுமக்கின்ற தண்டவாளத்தின் இரண்டு பக்கங்கள் என்று நம்முடைய அறிவாசிரியர் தமிழர் தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து, சொல்லிக் கொண்டே வருகிறார்.
நானும், தோழர் ஊ.ஜெயராமன் அவர்களும், ஜெர்மனியில் தொடங்கி, பெரியார் பன்னாட்டு மய்யம் வெளிநாடுகளில் நடத்திய அத்தனை பன்னாட்டு மனிதநேய மாநாடுகளிலும் கலந்து கொண்டவர்கள். முதன்முதலாக பெரியார் பன்னாட்டு மய்யம் சார்பாக மாநாடு ஜெர்மனியில் நடைபெற்ற பொழுது, கவிஞர் அய்யா, அக்கா வெற்றிச்செல்வி, நான், தோழர்
ஊ.ஜெயராமன் ஆகிய நான்கு பேரும் தங்கிய விடுதியி லிருந்து மாநாட்டுக்கு செல்லும் வழி தெரியாமல், விடுதிக்கு முன் சாலையில் நின்றிருந்தோம். அப்பொழுது தமிழர் தலைவர் அவர்கள் அந்தச் சாலை வழியாக காரில் மாநாட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.
எங்களைப் பார்த்ததும் கார் ஓட்டுநரை நிறுத்தச் சொல்லி எங்கள் நான்கு பேரையும், அவருடைய காரில் அழைத்துச் சென்றதை இன்று வரையில் கூட நாங்கள் மறக்க முடியாது.
வெளிநாடுகள் செல்கின்ற பொழுது நாங்கள் சந்தித்த அனுபவங்கள் மூலம் கற்றுக்கொண்ட பாடம், பன்னாட்டு அழைப்புகள் கொண்ட ஓர் அலைபேசி இணைப்போடு செல்ல வேண்டும் என்பதுதான்.
மாநாட்டிற்கு முன்பாகவே நிறைய இயக்கப் பணிகள் தொடர்ந்து இருந்ததால் எங்களால் அந்த ஓர் இணைப்பை இங்கே இந்தியாவில் வாங்கிச் செல்ல முடியவில்லை. என் சகோதரர் சக்திவேல் எங்களுடனே இந்த மாநாட்டில் இருந்ததால், எங்களுக்கு கொஞ்சம் வசதியாக இருந்து விட்டது.
நிச்சயமாக அடுத்த முறை மாநாடுகளுக்கு செல்லும் பொழுது இந்த பன்னாட்டு இணைப்பை அலைபேசிகளில் நிச்சயமாக ஏற்படுத்திக் கொள்வோம்.
ஜப்பான் பயணத்தில் நாங்கள் உணர்ந்ததை இங்கு நிறைய தோழர்களும் அவர்கள் உணர்ந்து எழுதி இருக்கிறார்கள். அது மீண்டும் மீண்டும் எழுத அவசியமில்லை. ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “One who fails to plan, plans to fail”.
மேலே குறிப்பிட்ட அந்த எச்சரிக்கையை சரியாக மனதில் ஏற்றுக்கொண்டு நம்முடைய தோழர் வி.சி.வில்வம் அவர்கள் இந்தப் பயணத்தின், ஏற்பாடுகளின் முதல் நாளிலிருந்து, Whatsapp வழியாக நமக்கு ஒரு மிகப்பெரிய வழிகாட்டுதலை வழிமுறைகளை சொல்லிக் கொண்டே வந்திருந்தார்.
பயணங்களின் போதும் ஒவ்வொரு முறையும், எல்லோரும் வந்து சேர்ந்து விட்டார்களா என்று ஆட்களை எண்ணிக்கொண்டே தான் இருந்தார். மருத்துவர் கவுதமன் அவர்கள் இருந்ததும் எங்களைப் போன்றவர்களுக்கும் மிகவும் ஒரு ஆறுதலாக இருந்தது. ஏனென்றால் இதற்கு முன் வெளிநாடு சென்ற பொழுது தோழர் ஜெயராமனுக்கு ஒரு சில நேரங்களில், உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. இந்த முறை எந்தச் சிக்கலும் இல்லை.
சில இடங்களில் நாங்கள் அதிக தூரம் நடக்க வேண்டி இருந்தது என்ற ஒரு குறையைத் தவிர, முழுமையாக மகிழ்ச்சியாக நிறைவடைந்தது ஜப்பான் பயணம்.
எப்பொழுதும் கோபம் வராத மிகுந்த பொறுமையோடு நம்மை வழிநடத்திச் சென்ற ஜப்பானைச் சேர்ந்த தோழர் சந்தீப் அவர்கள் ஓர் அற்புதமான மனிதர். மாநாடுகளில் பேசிய தோழர்கள் கனிமொழி அவர்கள், சரோஜா இளங்கோவன் அவர்கள், அருள்மொழி அவர்கள். இவர்கள் மூவரின் பேச்சுக்களும், ஆணாதிக்க சிந்தனைகள் மீதும் பார்ப்பனிய சிந்தனைகள் மீதும், தொடுக்கப்பட்ட ஒரு பேராயுதம். அதாவது பேச்சாயுதம். எங்களுடன் பயணித்த மகளிர் தோழர்கள் வீரமர்த்தினி, ஈஸ்வரி, அமலோற்பவம், ராஜேஸ்வரி, தனலட்சுமி. செல்வி, கலா, நான் உள்ளிட்ட அனைவரும் ஒரு குடும்பம் போல ஒருவருடன் ஒருவர் உரையாடியதும், உறவாடியதும் சிறப்பான ஒன்று.
பாலாஜி விலாஸ், மொரிங்கா, உள்ளிட்ட உணவகங்களில் பரிமாறிய அத்தனை தோழர்களும் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் உணவளித்தார்கள். எங்களை அழைத்துச் சென்ற பேருந்து ஓட்டுநர், அமைதியின் மொத்த உருவமாய், ஒரு சிறு முணுமுணுப்பும் சலிப்பும் இன்றி எங்களை அழைத்துச் சென்றார் என்பதும் இந்தப் பயணத்தில் குறிப்பிட வேண்டிய ஒன்று.
ஜப்பான் நாட்டில் பவுத்த மதமும், ஷிண்டோ மதமும் பின்பற்றப்படுகின்றன. “நான்கு வருணங்களையும் நானே படைத்தேன்…” என்ற கிருஷ்ணரை போற்றும் இந்து மதம் இங்கே இல்லை. அதனால் தான் இங்கே ஜாதிகள் இல்லை. குடியானவத் தெரு என்றும், காலனி என்றும், மனிதர்களைப் பிரிக்கும் இட எல்லைகள் இல்லை. கருவறைக்குள் நுழையாதே! ஆகமங்கள் உங்களை உள்ளே விட அனுமதிக்கவில்லை என்று பார்ப்பனர் அல்லாத மக்களை கருவறைக்குள் நுழைய விடாமல் தடுத்து நிற்கும், பார்ப்பன இரும்புக் கரங்கள் ஜப்பானில் இல்லை.
இந்த மாநாட்டின் நோக்கம் – BRIDGE 2026 – எந்த அடிப்படையிலும் மக்களைப் பிரிக்கக் கூடாது. இணைக்க வேண்டும். மேலும் BRIDGE ஆக உயர வேண்டும். INTERNATIONAL BRIDGE ஆக உலக நாடுகளை இணைக்க வேண்டும்.
ஜப்பானில் நாங்கள் ஆச்சரியமாக பார்த்தது, மக்கள் மிகவும் ஒல்லியாக இருக்கிறார்கள். சுறுசுறுப்பாக நடக்கிறார்கள். 100 பேரில் ஒருவர் இருவர்தான் குண்டாக இருக்கிறார்கள். வயதானவர்கள் கூட யாருடைய துணை இன்றி அவர்களே தனியாக நடந்து செல்கிறார்கள்.
நம் தமிழர் தலைவர் அவர்கள் தான் அப்பொழுது நினைவுக்கு வந்தார். 94 வயதை எட்டுகின்ற நேரத்திலும் வேகமான அவருடைய நடை ஓர் ஆச்சரியம்தான்.
மருத்துவ சிகிச்சையில் இருந்த பொழுதும் சென்னை விமான நிலையத்தில் எங்களை வரவேற்க ஒரு தாய் உள்ளத்தோடு காத்திருந்தார் தமிழர் தலைவர் அவர்கள்.
ஜப்பான் பயணத்தில் தமிழர் தலைவருடன் நாம் பயணிக்கவில்லையே என்ற ஏக்கத்தோடு இருந்தவர்களுக்கு அவரைப் பார்த்ததும் உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைத்தது.
நம் தமிழர் தலைவர் ஓர் இயக்கத்தின் தலைவராக மட்டும் இருக்கவில்லை. திராவிடர் குடும்பங்களுக்கெல்லாம் தந்தைக்குத் தந்தையாய் – தாய்க்குத் தாயாய் – தலைவருக்குத் தலைவராய் இருக்கிறார் என்பதன் அடையாளமாக அது இருந்தது.
– தகடூர் தமிழ்ச்செல்வி,
மாநில மகளிர் அணி செயலாளர்,
ஊ.ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர்
