சூத்திரப் பட்டமும், சிறுநீர்க் குடுவையும்! (4)

- Advertisement -

மருத்துவர்
இரா.கவுதமன்
இயக்குநர்,
பெரியார் மருத்துவ அணி

“இந்தியர்கள் இவ்வளவு ஒற்றுமையற்றவர்களாக இருப்பதற்கு வேறு ஏதாவது காரணமிருக்கிறதா? இவ்வளவு பிரிவுகளையும் வேறுபாடுகளையும் உருவாக்குவதற்குக் காரணம் இந்து மதம் அல்லவா? அதுவும் சில உயர்ந்தவை, சில தாழ்ந்தவை என்று சில வேதங்களும், சாஸ்திரங்களும்(இந்துக் கோட்பாடுகள்) இவற்றை நிரூபிக்கின்றன. இஸ்லாம் போன்ற பிற மதங்களுக்கு மாறாமல் ஜாதிகளையும், தீண்டாமையையும் ஒழிக்க வேண்டும் என்றால், ‘பிராமணர்’களைத் தவிர வேறு யாராவது சமூக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இவ்வளவு வசதிகளையும், சுதந்திரத்தையும் அனுபவிக்கிறார்களே என்று சிந்தியுங்கள். இந்து மதம் அழிக்கப்பட வேண்டும் என்பதை நிரூபிக்க வேறு என்ன தேவை? மதம் மனித குலத்திற்கு என்ன செய்தது என்று யாருமே சிந்திப்பதில்லை. மதவெறியால் ஏற்படும் தீமைகளை விட போதை தரும் பானங்களால் ஏற்படும் தீமைகள் குறைவு. மது அருந்தும் போதுதான் கெட்டுவிடும்.மதம் நீங்கள் நினைக்கும் நொடியே உங்களைக் கெடுத்து விடும்” என்று தந்தை பெரியார் மதவெறியால் ஏற்படும் தீமைகளை, உண்டாக்கப்படும் ஏற்ற தாழ்வுகளை கடுமையாகச் சாடுகிறார்.

“சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டிலுள்ள பல கட்சிகளைப் போலில்லாமல் அந்நியர்களிடமிருந்து யாதொரு விதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமாக உண்மையான விடுதலையையும், சமத்துவத்தையும், தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடிய ஓர் இயக்கமாகும்” என்று தந்தை பெரியார் தன் இயக்கத்தைப் பற்றி விளக்குகிறார். எந்த எதிர் பார்ப்பும் இல்லாமல் அவர் பொது வாழ்க்கைக்கு வந்தது போலவே, அவர் தோற்றுவித்த இயக்கமும் எந்த எதிர் பார்ப்புமின்றி, எந்த அரசியல் கட்சியின் தயவுமின்றி மக்களுக்கு அறிவைப் புகட்டும் இயக்கம் என்று தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

“இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கையெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலை உண்டாக்குவதேயாகும். அதனால் சுயமரியாதை இயக்கம் என்பதை ‘அறிவு விடுதலை இயக்கம்’என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால் ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் உள்ள கட்டுப்பாட்டையும், நிர்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானேயானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாகவே விளங்கும்” என்று தந்தை பெரியார் நம்பிக்கையோடும் உறுதியோடும் கூறுகிறார்.

“சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி 3, 4 ஆண்டு களுக்குள்ளாகவே மக்களிடம் அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும்கூட இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கம் என்பது தெளிவாக விளங்கும். நிற்க, தங்களுடய சொந்த அறிவினாலும், ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல் அந்நியர்களின் முட்டாள்தனத்திலேயே பிழைத்துக் கொண்டிருந்தவர்களான அரசியல் தேசியக் கூட்டத்தார்கள் என்பவர்களும், சமய இயல்பியல் வைதீகப் பண்டித கூட்டத்தார்கள் என்பவர்களும் இவ்வியக்கத்தைத் தங்களுடைய வாழ்விற்கும், பெருமைக்கும் ஆபத்து வந்து விட்டதாய்க் கருதி இவ்வியக்கத்தை பாமர மக்களிடம் திரித்துக் கூறி, அதாவது சுயமரியாதை இயக்கம் தேச விரோத இயக்கம் என்றும், நாத்திக இயக்கம் என்றும் சொல்லிக் கொண்டு எவ்வளவோ முயற்சியும் கட்டுப்பாடுமான சூழ்ச்சிகள் செய்தும்கூட – இவ்வளவுக்கும் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறிதும் பின்னடையாமல் அடிக்க, அடிக்க பந்து எழும்புவது போல் விஷமப் பிரச்சாரம் செய்யச் செய்ய, இப்பொழுது இந்திய தேச முழுவதும் பஞ்சில் நெருப்புப் பிடிப்பது போல் மக்களிடம் பரவிக் கொண்டே இருக்கிறது” என்று தந்தை பெரியார் எழுதுகிறார்.

“இவ்வியக்கம் ஆரம்பித்த காலம் முதல் இதற்கு எதிரிடையாக நமது நாட்டில் வேலை செய்த பத்திரிக்கைகள் எவ்வளவு என்பது யாவருக்கும் தெரியும். அதாவது அந்தக் காலத்தில் நாட்டில் செல்வாக்காயிருந்த சுதேசமித்திரன், இந்து, சுவராஜ்யா, தமிழ்நாடு, நவசக்தி, லோபோகாரி, ஊழியன் முதலிய சுதேச தேசிய மித்திரன், இந்து, பத்திரிக்கைகள் என்பவைகளும் மற்றும் பல குட்டிப் பத்திரிக்கைகளும் மனதார, நடந்தவைகளைத் திரித்து கூறுவதும், கருத்துகளை மாற்றிக் கூறுவதும், பொதுமக்களுக்கு துவேஷமும், வெறுப்பும் உண்டாகும்படி எழுதுவதுமான காரியங்களில் வெகு மும்முரமாக ஈடுபடுகின்றனர்” என்று தந்தை பெரியார் சுயமரியாதை இயக்கத்தின் எதிரிகளை அடையாளம் காட்டுகிறார்.

‘மற்றும் பிரச்சாரம் செய்வதிலும் தேசியத் தலைவர்கள், பிரச்சாரகர்கள் என்பவர்கள் எல்லோரும் ஒரு முகமாய் திருவாளர்கள் சீனிவாச அய்யங்கார், சத்திய மூர்த்தி அய்யர். ராஜகோபாலாச்சாரியார், கல்யான சுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடு, குழந்தை, ஷாபி முகமது, அண்ணாமலை, குப்புசாமி, பாவலர் என்பவர்களும் மற்றும் தேசியம் என்பதன் பேரால் நாட்டில் பாமர மக்களிடம் செல்வாக்குள்ள அனைவரும் அடியோடு பார்ப்பனக் கூட்டமும், காபிக்கடை முதல் தாசி வீடு வரையில், சட்டசபை முதல் சந்து பொந்துகள் எல்லாம் சென்று சுயமரியாதை இயக்கம் தேசத் துரோக இயக்கமென்றும், நாத்திக இயக்கமென்றும் “இதைக் கொல்வதற்கு ஆண்டவன் அருள் கொண்டு துணிந்து விட்டோம்” என்றும் “கடவுள் துணை கொண்டு இறங்கி விட்டோம்” என்றும், “கிருஷ்ண பகவானே துணை” என்றும் கர்ஜித்துக் கொண்டு தொண்டை கிழியப் பேசியும் பார்த்தார்கள்.”

“அவர்களுக்குள் வர்ணாசிரம மகாநாடு, சைவ மகாநாடு முதலிய மகாநாடுகள் கூட்டி தீர்மானித்தும் பார்த்தார்கள். மற்றும் புராண பண்டிதர்கள், புத்தகக் கடைக்காரர்கள், பூசாரிகள், குருக்கள், மடாதிபதிகள் முதலிய கூட்டத்தார்களும் தேசிய மேடையிலும், சமய மேடையிலும், “சுயமரியாதை இயக்கம் சமயத்தை பாழ் பண்ணி வருகின்றது. இதை ஒழிக்க வேண்டும் என்று கூவிப் பார்த்தார்கள்” என்று தந்தை பெரியார் தன்  எதிர்ப்பாளர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

“இவ்வளவும் போதாமல் வெளிநாடுகளிலிருந்தும் திருவாளர்கள் காந்தி, மாளவியா, மூஞ்சே ஆகியவர்களைக் கொண்டு வந்து இதற்கு எதிரிடையாகப் பிரச்சாரம் செய்தும் பார்த்தார்கள். இனியும் ரகசியமாக செய்த இழிதகைப் பிரச்சாரத்திற்கும் அளவே இல்லை. என்னவெனில் நம்முடைய தனிப்பட்ட நாணயத்தைப் பற்றியும், நடவடிக்கைகளைப் பற்றியும், ஒழுக்கங்களைப் பற்றியும் எவ்வளவோ கேவலமாகப் பேசியும், கூலி கொடுத்து காலிகளை ஏவி விட்டு பேசச் செய்தும் செய்யப்பட்ட இழி பிரச்சாரத்திற்கு அளவே இல்லை” என்று தன் இயக்கத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்புகளை விவரிக்கிறார் தந்தை பெரியார்.

“இவ்வளவும் போதாமல் நம்மைக் கொன்று விடுவதாகவும், குத்தி விடுவதாகவும், சுட்டு விடுவதாகவும் மற்றும் பல விதமாகவும் கண்டு எழுதிய அநாமதேயக் கடிதங்களுக்கும், பொய்க் கடிதங்களுக்கும் அளவே இல்லை” என்று தந்தை பெரியார் தனக்கு வந்த எதிர்ப்புக்களைக் குறிப்பிடுகிறார்.

“மற்றும் நமக்குள் இருக்கும் தொண்டர்களைக் கொண்டு செய்வித்த குறும்புகளுக்கும் அளவேயில்லை. இவ்வளவு தொல்லைகளையும், சங்கடங்களையும் தாண்டி இவ்வியக்கம் ஒருவாறு தமிழ்நாட்டில் உள்ள பொது மேடைகளை எல்லாம் கைப்பற்றி, தேசியத் தலைவர்கள் என்பவர்களையெல்லாம் முக்காடிட்டு. மூலையில் உட்கார வைத்தும், பெரிய, பெரிய பண்டிதர்கள், சாஸ்திரிகள், சமயவாதிகள், சமயத் தலைவர்கள், சண்ட பிரசண்டவாதிகள் என்பவர்களையெல்லாம் வெளியில் தலைகாட்டுவதற்கில்லாமல் செய்து விட்டதுடன் ஜாதி இறுமாப்பையும், சமய இறுமாப்பையும், பண்டித இறுமாப்பையும் கசகசவென்று நசுக்கிக் கொண்டு வருகின்றது” என்று தன் இயக்கத்தின் சாதனையைப் பெருமை பொங்கக் குறிப்பிடுகிறார் தந்தை பெரியார்.

(வரலாறு வளரும்…)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *