‘பூதாய்’ என்னும் சிரிக்கும் புத்தர் நகைச்சுவைக் கூற்றும், மூடநம்பிக்கையின் வேர்களும்!

- Advertisement -

சமூக வலைதளங்களிலும், கடை களிலும், வீடுகளிலும் நாம் எத்தனையோ முறை பெரிய தொந்தியுடன் கலகலவெனச் சிரித்துக்கொண்டிருக்கும் ஒரு சிலையைக் கண்டிருப்போம். பலரும் இதனை ‘லாபிங் புத்தா’ (Laughing Buddha) அல்லது குபேரன் என்று அழைத்து வருகின்றனர்.

இந்தச் சிலையை வீட்டின் எந்தத் திசையில் வைக்க வேண்டும், வாடிக்கை யாளர்களின் கண்களில் படும்படி எங்குப் பொருத்த வேண்டும் என்றெல்லாம் பல்வேறு வாஸ்து கதைகளைக் கூறி, இது இருந்தால் செல்வம் கொழிக்கும் என்று வணிகரீதியாகவும் பரப்பி வருகிறார்கள். குறிப்பாக புங் சுயி வாஸ்து போன்ற ஏமாற்று வித்தைகளில் இவர் பெயர் அதிகம் அடிபடும்.

ஆனால், இந்தக் கதைகளின் பின்னணியில் இருக்கும் வரலாற்று உண்மையும், ஒரு நகைச்சுவையான விளையாட்டுப் பேச்சு எப்படிப் பிந்தைய காலத்தில் பாரம்பரிய மூடநம்பிக்கையாக உருவெடுத்தது என்பதும் மிக வியப்பானது.

இந்தச் சிலை உணர்த்தும் பூதாய் என்ற மனிதர் கற்பனைப் கதாபாத்திரம் அல்ல; அவர் 9-ஆம் நூற்றாண்டில் சீனாவில், கிழக்கு மாகாணமான ஜெஜியாங்கில் உள்ள யூலின் என்ற மலைநகரில் வாழ்ந்த பவுத்தத் துறவி. அனைவரையும் எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதைத் தனது வாழ்நாள் கொள்கையாகக் கொண்டிருந்தார்.

அவர் எப்போதும் தனது தோளில் ஒரு பையைத் தொங்கவிட்டுக் கொண்டுதான் வெளியே புறப்படுவார்; அந்தப் பைக்குள் குழந்தைகளுக்கான தின்பண்டங்கள், சிறிய பரிசுகள் நிறைந்திருக்கும். அவரது இயற்பெயர் என்னவென்பதே யாருக்கும் இன்றுவரைத் தெரியாது. எனினும், அவர் எப்போதும் பெரிய பையுடன் வலம் வந்ததால் மக்கள் அவரை  பெரிய பை கொண்ட தொப்பைச்சாமியார் (அதாவது ‘பூதாய்’) என்றே அன்போடு அழைத்தனர்.

மக்களின் வாழ்வியலோடு இணைந்த மனிதர்

பூதாய் வெறும் சிரிப்புடன் மட்டும் வலம் வரவில்லை; அவர் வானிலையைத் துல்லியமாக உற்றுநோக்கும் திறன் பெற்றிருந்தார். எப்போது மழை பெய்யும், எப்போது குளிர்காலம் தொடங்கும் என்பதை முன்கூட்டியே சரியாகக் கணித்துக் கூறுவார்.

அவரது கணிப்புகள் விவசாயிகளுக்குத் தானியங்களைக் காயவைக்கவும், உரிய நேரத்தில் விவசாயப் பணிகளைத் தொடங்கவும் பெரிதும் உதவின. இதனால் மக்களின் அன்றாட வாழ்வியலோடு அவர் மிக நெருக்கமாக இணைந்திருந்தார். 90 வயதிற்கும் மேல் வாழ்ந்த அவர், தன் இறுதிக்காலத்தில் யாருக்கும் சுமையாக இருக்கக்கூடாது என்று கருதி, யூலின் மாகாணத்தில் உள்ள அடர்ந்த மலைப்பகுதிக்குச் சென்றார்.

நகைச்சுவை எப்படி மூடநம்பிக்கையானது?

அவர் மலையை நோக்கிச் செல்லும் போது, அவரைச் சுற்றியிருந்த குழந்தைகள் “எங்கே போகிறீர்கள்?” என்று கவலையுடன் கேட்டனர். அதற்கு அவர், குழந்தைகளுடனான தமது பாசத்தின் காரணமாகவும், அவர்களின் சோகத்தைப் போக்கவுமாக ஒரு நகைச்சுவையாக, “அதோ அந்த மலைக்குச் சென்று, மீண்டும் குழந்தையாக உங்களோடு விளையாட வருவேன்” என்று விளையாட்டாகக் கூறிவிட்டுச் சென்றாராம்.

அவர் சென்ற மலைப்பகுதி மிக ஆபத்தானதும், கடினமான பாறைகள் கொண்டதுமாகும். அங்கே அவர் உண்ணாநிலையிருந்து தனது உயிரைத் துறந்தார். பவுத்தத் துறவிகள் மடங்களிலோ அல்லது வனங்களிலோ துறவு நெறிப்படி உயிர் துறப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால், பூதாய் குழந்தைகள் மற்றும் பொதுமக்களிடம் மிகுந்த அன்பைப் பெற்றிருந்ததால், அவரது மறைவு மக்களுக்குப் பெரும் சோகத்தை அளித்தது.

மைத்திரேய புத்தர் அவதாரமாக மாறிய விபரீதம்!

குழந்தைகளிடம் அவர் விளையாட்டாகக் கூறிய “நான் மீண்டும் குழந்தையாக வருவேன்” என்ற அந்த நகைச்சுவைக் கூற்று, காலப்போக்கில் மக்களின் ஏக்கத்தினாலும் நம்பிக்கையினாலும் திரிபுபடுத்தப்பட்டது. ஆரம்பத்தில் உணர்வுப்பூர்வமாகப் பேசப்பட்ட அந்த வார்த்தைகள், அடுத்தடுத்த தலைமுறைகளில் மெல்ல மூடநம்பிக்கையாக வேரூன்றத் தொடங்கின.

திபெத், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இவரைப் பற்றிய கதைகளோடு மேலும் சில கற்பனைகளையும் ‘மசாலாக்களையும்’ சேர்த்து, “இவர்தான் எதிர்காலத்தில் உலகை உய்விக்க வரப்போகும் மைத்ரேய புத்தரின் (Maitreya Buddha) அவதாரம்” என்று கதைகட்டத் தொடங்கினர்.

ஒரு மனிதரின் தூய்மையான புன்னகையும், குழந்தைகளிடம் காட்டிய அன்பும், அவர் உதிர்த்த ஓர் எளிய நகைச்சுவைக் கூற்றும் காலப்போக்கில் வணிக மயமாக்கப்பட்டு, இன்று வீடுகளிலும் வணிக வளாகங்களிலும் செல்வத்தைக் கொட்டும் ‘அதிர்ஷ்டச்’ சிலையாக உருமாறி நிற்பது ஒரு வரலாற்று முரண்.

மனிதர்களின் உளவியல் தேவைகளும், எளிய நம்பிக்கை களும் எப்படி ஒரு சாதாரண மனிதனின் நகைச்சுவையை உலகளாவிய ஒரு பெரும் மூடநம்பிக்கையாக மாற்றி விடுகின்றன என்பதற்கு ‘லாபிங் புத்தா’ எனப்படும் பூதாயின் வரலாறே ஆகச்சிறந்த சான்றாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *