தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலையங்கம் குரியன் ஜோசப் ஆணையம் கலைப்பு: காரணமற்ற முடிவு!

3 Min Read
- Advertisement -

நீதிபதி குரியன் குழுவின் பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட் டிருந்தால், இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பு மேலும் வலுப் பெற்றிருக்கும்.

ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான நீதிபதி குரியன் ஜோசப் தலைமையிலான குழுவைக் கலைத்து விட்டு, அதன் பணிகளைத் தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆணையத்திடம் ஒப்படைத்ததன் மூலம், சி.ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, எந்தவொரு வலுவான காரணத்தாலும் அல்லது அவசியத்தின் அடிப்படையிலும் வழிநடத்தப்படாமல், முந்தைய முடிவுகளை மாற்றியமைக்கும் அரசியல் உந்துதலுக்குப் பணிந்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்காகக் கூறப்படும் காரணங்களே இந்தக் கருத்துக்கு வலுசேர்க்கின்றன.

இந்தக் குழு தனது பணியை மிகுந்த ஆய்வுத் திறனுடனும், அறிவியல் பூர்வமான அணுகுமுறையுடனும் மேற்கொண்டது. இதற்குச் சான்றாக, அதன் அறிக்கையின் முதல் பகுதியில் இடம்பெற்றுள்ள ஆய்வுகளைக் குறிப்பிடலாம். அந்த அறிக்கை பிப்ரவரி மாதம் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தக் குழு ஒரு ‘சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லாத அமைப்பு’ (Non-statutory body) என்பதே குழு கலைக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணமாகக் கூறப்படுவது நம்பத்தகுந்ததாக இல்லை. குறிப்பாக, மாநில சட்ட ஆணையமே ஓர் அரசாணையின் (Executive Order) மூலமாகத்தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

மேலும், ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான பிரச்சினைகளை மாநிலச் சட்ட ஆணையங்கள் ஆய்வு செய்துள்ளனவா அல்லது அவற்றுக்குத் தீர்வு காண முயன்றுள்ளனவா என்பதற்கான பொதுவெளி ஆதாரங்கள் எதுவும் இல்லை.

மாநிலங்களுக்கிடையிலான உறவுகள் மற்றும் ஒன்றிய – மாநில உறவுகள் தொடர்பான வழிமுறைகளையும் தீர்வுகளையும் பரிந்துரைப்பது என்ற பணி, ஆகஸ்ட் மாதத்தில் மறுசீரமைக்கப்பட்ட மாநிலச் சட்ட ஆணையத்தின் விரிவான பணி வரம்பில் இடம்பெறும் ஒரே ஒரு பகுதிதான்.

மாநிலச் சட்ட ஆணையத்தின் பரந்த பொறுப்புகளைக் கருத்தில் கொண்டால், அடுத்தடுத்து வந்த தமிழ்நாடு அரசுகள், மாநிலப் பட்டியல் மற்றும் ஒத்திசைவுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள அதிகாரங்கள் தொடர்பான முரண்பாடுகளை ஆராயவும், அவற்றுக்கான குறிப்பிட்ட தீர்வுகளைப் பரிந்துரைக்கவும் உயர்நிலைக் குழுக்களை அமைத்துள்ளன.

அத்தகைய குழுக்களின் பரிந்துரைகளின் அடிப்படையில்தான், ஒன்றிய அரசின் சட்டங்களால் ஏற்படும் சில கட்டுப்பாடுகளைத் தாண்டி, தமிழ்நாடு அரசு சில சட்டங்களை இயற்ற முடிந்தது.

இதற்கு ஓர் எடுத்துக்காட்டாக, பின்தங்கிய மாணவர்களுக்கான தொழில் முறைப் படிப்பு சேர்க்கையில் கிடைமட்ட இடஒதுக்கீட்டை (Horizontal Reservation) அறிமுகப்படுத்தியதைக் குறிப்பிடலாம்.

எனவே, இந்தக் குழுவுக்கும் மாநிலச் சட்ட ஆணையத்துக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பணிகளின் தன்மையும், வரம்பும் ஒரே மாதிரியான அம்சங்களுடன் உள்ளன என்ற தற்போதைய மாநில அரசின் மற்றொரு வாதமும் ஆழமான பொருளுடையதாக இல்லை.

எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், இந்தக் குழுவின் செயல்பாடுகளை முடக்குவதற்கான முயற்சி நடைபெறுவதாக செப்டம்பர் மாதத்தில்  குற்றம் சாட்டியிருந்தார்.

அந்தக் குழுவின் முதல் பகுதி அறிக்கையை நியாயமான முறையில் மதிப்பீடு செய்தால், மாநில சுயாட்சி, தொகுதி மறுவரையறை மற்றும் ஆளுநர் அலுவலகத்தின் அதிகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அந்தக் குழு மிக விரிவாகவும் ஆழமாகவும் ஆய்வு செய்திருப்பது தெரியவரும்.

பாரதிய ஜனதா கட்சியைத் தவிர, மற்ற அரசியல் கட்சிகள் பெரும்பாலும் அந்த அறிக்கையை வரவேற்றிருந்தன. வியப்புக்குரிய வகையில், அந்த அறிக்கையின் உள்ளடக்கங்கள், மாநில உரிமைகள் தொடர்பாகத் திரு. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பொது வெளியில் வெளிப்படுத்தி வரும் கொள்கை நிலைப்பாட்டிற்கு முற்றிலும் முரணானதாகக்கூட இல்லை.

மேலும், அரசியல் தொடர்புடைய ஒரே உறுப்பினராக அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த பேராசிரியர் மு.நாகநாதன் ஏற்கெனவே தனது பதவியை விட்டு விலகிவிட்டார்.

எனவே, இந்தக் குழு தனது பணியை முழுமையாக நிறைவு செய்வது குறித்துத் தமிழ்நாடு அரசு மீண்டும் சிந்தித்து அனுமதிப்பதே சிறந்ததாக இருக்கும்.

இத்தகைய நடவடிக்கை, மேலும் சமநிலையான கூட்டாட்சி நிர்வாகக் கட்டமைப்பை உருவாக்குவதற்கான அரசியல் முன்னெடுப்பை வலுப்படுத்தும். அதன்மூலம் ஒன்றிய – மாநில அரசுகளுக்கிடையே இணக்கமான உறவுகளை உருவாக்கவும் வழிவகுக்கும்.

‘தி இந்து’ ஆங்கில நாளேட்டின் தலையங்கம், 11.11.2026

தமிழில்: அன்பு

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *