இத்தாலி, அயர்லாந்து, ஸ்காட்லாந்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ரோம், நவ. 12- இத்தாலியில், அடையாள தெரியாத நபர்கள் விடுத்த வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து சுமார் 300 பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வெளியேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலி, அயர்லாந்து ஆகிய நாடுகள் மற்றும் பிரிட்டனின் ஸ்காட்லாந்து, வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் பள்ளிக்கூடங்களைக் குறிவைத்து நேற்று (நவ. 11) அடையாள தெரியாத நபர்கள் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, இத்தாலியில் சுமார் 312 பள்ளிக்கூடங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களை வெளியேற்றி, வெடிகுண்டு வல்லுநர்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் சோதனைகள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது. இத்துடன், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனிக்கு எதிராகவும் அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும் நிலையில், பிரதமர் மெலோனி தலைமையில் சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இதுபற்றி, இத்தாலி பிரதமர் மெலோனி கூறுகையில், பள்ளிகளுக்கு எந்தவொரு திட்டவட்டமான ஆபத்தும் இல்லை எனவும், பீதியை உருவாக்கும் நோக்கத்துடன் இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த வாரம் அய்ரோப்பிய ஒளிப்பரப்பாளர்களுக்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டலில் இடம்பெற்றிருந்த அதே ரஷ்ய பெயருடன் இந்த மிரட்டல் மின்னஞ்சலும் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அய்ரோப்பிய நாடுகளிடையே அதிர்வலைகளை உருவாக்கியுள்ள சூழலில், அயர்லாந்து, ஸ்காட்லாந்தின் பள்ளிகளில் வெளியேற்றப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, கடந்த வாரம் அய்ரோப்பாவைச் சேர்ந்த ஏராளமான விமானங்களுக்கு விடுத்த வெடிகுண்டு மிரட்டல் களால் அங்கு பல்வேறு நாடுகள் இடையேயான விமானச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஷேக் ஹசீனாவின் மரண தண்டனையைத் தடுக்க தூதரக நடவடிக்கை தேவை!
லண்டன், நவ. 12- வங்கதேசத்தில் கடந்த 2024ஆம் ஆண்டு வெடித்த மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, இந்தியாவில் தஞ்சமடைந்த அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, அந்நாட்டின் பன்னாட்டு குற்றவியல் தீர்ப்பாயம் நவம்பர் 2025இல் மரண தண்டனை விதித்தது. இந்நிலையில், அடுத்த மாதம் நாடு திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். ஆனால், ஹசீனா நாடு திரும்பினால் அவர் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என வங்கதேச அட்டர்னி ஜெனரல் முகமது அமினுல் இஸ்லாம் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையைத் தடுக்கத் தூதரக நடவடிக்கை எடுக்கும்படி, இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் எட் மிலிபாண்டிற்கு, வங்கதேசத்தை சேர்ந்த 6 எம்பிக்கள் கடிதம் எழுதியுள்ளனர்.
இதில், ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என எழுத்துப்பூர்வமான உத்தரவாதம் பெறுதல், அரசியல் வன்முறைகளிலிருந்து பாதுகாப்பு அளித்தல், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உரிய சட்ட வாய்ப்புகள் வழங்குதல், வழக்கு விசாரணை மற்றும் சட்ட நடைமுறைகளை பன்னாட்டு அமைப்புகள் கண்காணிக்க வழிவகுத்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து வலியுறுத்தி உள்ளனர். மேலும், வங்கதேசத்தில் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த இங்கிலாந்து அரசு ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
10 ஆண்டில் புற்றுநோய் முற்றிலும் ஒழிக்கப்படும்:
ஆந்த்ரோபிக் சிஇஓ டாரியோ அமோடெய் கணிப்பு
பாரிஸ் / வாசிங்டன், நவ. 12- செயற்கை நுண்ணறிவின் (ஏஅய்) உதவியால் இன்னும் 10 ஆண்டுகளில் புற்றுநோய் முற்றிலுமாக ஒழிக்கப்படும் என்று ஆந்த்ரோபிக் ஏஅய் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி (சிஇஓ) டாரியோ அமோடெய் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டாரியோ அமோடெய் கூறியுள்ளதாவது: அண்மைக் காலத்தில் ஏஅய் தொடர்பான தொழில்நுட்பம் அபார வளர்ச்சி பெற்றுள்ளது. நாம் ஏஅய் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், மனிதகுலம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக் தீர்க்க முடியாமல் தவிக்கும் மருத்துவச் சவால்களுக்குத் தீர்வு காணும் ஒரு விந்தை யுகத்தைப் படைக்க முடியும். அதன் விளைவாக, அடுத்த 10 ஆண்டுகளுக்குள் புற்றுநோய், அல்சைமர், இதய நோய்கள் மற்றும் மனநலப் பிரச்சினைகள் போன்றவை முற்றிலும் ஒழிக்கப்பட்டு அவை கடந்தகால எச்சங்களாக மாறிவிடும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவரைப் போலவே எலான் மஸ்க் மற்றும் கூகுள் டீப்மைண்ட் தலைவர் டெமிஸ் ஹாசாபிஸ் போன்ற முன்னணி தொழில்நுட்பத் தலைவர்களும், ஏஅய் மூலம் சில வாரங்களிலேயே புதிய மருந்துகளைக் கண்டறிந்து நோய்களை முறியடிக்க முடியும் என தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மருந்து தயாரிப்பு நிறுவனமான வெர்டெக்ஸ் பார்மா சூட்டிகல்ஸ் தலைவர் ஜெஃப் லைடன், ஏஅய் தொழில்நுட்பம் 10 ஆண்டுகளில் நோய்களைக் குணப்படுத்திவிடும் என்ற கூற்று முற்றிலும் சாத்தியமற்றது” என தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.
ரஷ்யா – உக்ரைன் பேச்சுவார்தையில் முன்னேற்றம்
போர்க் கைதிகள் பரிமாற்றத்துக்கு உடன்பாடு
அபுதாபி, நவ. 12- அய்க்கிய அரபு அமீரகத் தலைநகா் அபுதாபியில், அமெரிக்காவின் பேச்சுவார்த்தையில் ரஷ்யா-உக்ரைன் இடையே கடந்த இரண்டு நாள்கள் நடைபெற்ற முத்தரப்பு அமைதிப் பேச்சு நிறைவடைந்தது.
சுமார் நான்கரை ஆண்டுகளைக் கடந்து நீடித்து வரும் இப்போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் முக்கியத் திருப்புமுனை எதுவும் எட்டப்படவில்லை என்றாலும், பெரும் எண்ணிக்கையில் போர்க்கைதிகளை இரு நாடுகளும் விடுவிக்க இரு தரப்பிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
ரஷ்ய – உக்ரைன் பிரதிநிதிகள் கடந்த பிப்ரவரிக்குப் பிறகு 9 மாதங்கள் கழித்து முதன்முறையாக நேரில் சந்தித்துப் பேசிய இந்த அமா்வில், போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக முன்கூட்டியே பெரிய எதிர்பார்ப்புகள் ஏதும் இருக்கவில்லை. இருப்பினும், அமெரிக்கா முன்னெடுத்த இம்முயற்சியில் மனிதாபிமான அடிப்படையில் போர்க்கைதிகள் பரிமாற்றம் என்ற அளவில் மட்டுமே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பில் உள்ள உக்ரைன் பகுதிகளின் எதிர்காலம், போருக்குப் பிந்தைய இருநாடுகளின் பாதுகாப்பு உத்தரவாதங்கள், அய்ரோப்பிய நாடுகளின் பங்களிப்பு ஆகியவற்றில் இரு தரப்புக்கும் இடையே கடும் முரண்பாடுகள் நீடிக்கின்றன. பேச்சு நிறைவடைந்த பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய அமெரிக்க பிரதிநிதியும், அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் மருமகனுமான ஜாரெட் குஷ்னா், ‘இரு நாடுகளிடையே மிக முக்கியமான மனிதாபிமான நடவடிக்கையாகப் போர்க்கைதிகள் விடுவிக்கப்பட உள்ளனா். விடுவிக்கப்படும் வீரா்களின் துல்லியமான எண்ணிக்கை இன்று (12.11.2026) இறுதி செய்யப்படும்’ என்றார்.
ரஷ்ய குழுவின் தலைவரான அந்நாட்டு அதிபா் புதினின் மூத்த ஆலோசகா் விளாதிமீா் மெடின்ஸ்கியும், உக்ரைன் குழுவின் தலைவரான அந்நாட்டு அந்நிய உளவுத்துறைத் தலைவா் ருஸ்டெம் உமேரோவும் இம்முடிவை உறுதி செய்தனா். இந்தப் பெரும் கைதிகள் பரிமாற்றம் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களுக்குள் நடைபெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
