தென்காசி, நவ. 11- தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சாலையில் கிடந்த சுமார் ரூ.30 லட்சம் மதிப்பிலான 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரொக்கப் பணத்தை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த 76 வயது முதியவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
தென்காசி மாவட்டம் அரியப்பபுரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 68). இவர் தனது 245 கிராம் (சுமார் 30 பவுன்) தங்க நகைகள் மற்றும் ரூ.5,000 ரொக்கப் பணத்தை ஒரு பையில் வைத்துக்கொண்டு பாவூர்சத்திரம் வழியாகச் சென்றபோது, ஆரியங்காவூர் சாலையில் அந்த பையைத் தவறவிட்டுள்ளார்.
அப்போது அந்த வழியாகச் சென்ற மேட்டூரைச் சேர்ந்த பாப்பையா (வயது 76) என்ற முதியவர், சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பையைக் கண்டெடுத்தார். அதனைத் திறந்து பார்த்தபோது உள்ளே அதிக அளவிலான தங்க நகைகளும் பணமும் இருப்பதைக் கண்டு, சிறிதும் தயங்காமல் உடனடியாக பாவூர்சத்திரம் காவல் நிலையத்திற்குச் சென்றார். அங்கு பணியிலிருந்த காவல் ஆய்வாளரிடம் அந்தப் பையை ஒப்படைத்தார்.
இதையடுத்து காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், அந்த நகைகள் அரியப்பபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியனுக்கு சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், உரிய ஆவணங்களைச் சரிபார்த்த காவல் துறையினர், நகைகளையும் பணத்தையும் அதன் உரிமையாளர் சுப்பிரமணியனிடம் பாதுகாப்பாக ஒப்படைத்தனர்.
விலைமதிப்பற்ற தங்க நகைகளைக் கண்டெடுத்தும், அதனை உரியவரிடம் சேர்க்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த முதியவர் பாப்பையாவின் நேர்மையைப் பாராட்டி, அவருக்கு சால்வை அணிவித்து காவல் துறையினர் பாராட்டுகளை தெரிவித்தனர். பொதுமக்களும் அவருக்கு தங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
அரசின் தவறைச் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை!
வைகோவுக்கு பெ.சண்முகம் பதிலடி!
சென்னை, நவ.11- அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை என்றும் கூட்டணியில் இருப்பதால் மதிமுகவின் நிலைப்பாட்டை நாங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர்
பெ.சண்முகம் இன்று (நவ. 10) தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் சில கட்சிகள் நாள்தோறும் தவெக ஆட்சியை விமர்சிப்பதாக வைகோ குற்றம்சாட்டியிருந்தார்.
முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு தான் ஒரு போர்வாள் என்றும், எதிரிகளிடமிருந்து விஜய்யை காக்கும் அரணாக இருப்பேன் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் இதற்கு பதில் அளித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் பேசியதாவது:
”கூட்டணிக்கு ஆதரவு அளித்திருந்தாலும் அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் எந்த தவறும் இல்லை. அரசை விமர்சிப்பது ஏன்? என எங்களை (இடதுசாரி) நோக்கி கேள்வி எழுப்ப எந்த உரிமையுமில்லை.
அரசை விமர்சிக்கக் கூடாது என்பது மதிமுகவின் நிலைப்பாடு. கூட்டணியில் இருப்பதால் மதிமுக எடுத்துள்ள நிலைப்பாட்டை நாங்கள் மேற்கொள்ள வேண்டும் என நினைப்பது தவறு. அதனை நாங்கள் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை.
எல்லாவற்றையும் திமுக – தவெக இடையிலான பிரச்சினை என்று பார்ப்பது நன்மை பயக்கும் விஷயம் அல்ல. மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளை அணுக வேண்டும் எனப் பேசினார்.
அடையாறு ஆற்றில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகள்!

கெருகம்பாக்கம், நவ. 11- காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியம், கெருகம்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட அடையாறு ஆற்றில் மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள் கொட்டப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.
மருத்துவமனைகள் மற்றும் மருந்துகங்களில் சேகரமாகும் மருத்துவக் கழிவுகள், காலாவதியான மருந்துகள் ஆகியவற்றை உரிய பாதுகாப்பு வழிமுறைகளின்படி தனியாக சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும். ஆனால், அவற்றை ஆற்றில் கொட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனவே சம்பந்தப்பட்ட இடத்தில் மாசுக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, மருத்துவக் கழிவுகளை கொட்டியவர்கள் யார் என்பதைக் கண்டறிய வேண்டும். ஆற்றில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை உடனடியாக அகற்றுவதுடன், இனிமேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
