கடந்த சில ஆண்டுகளாகவே ஜப்பானிய புத்தகங்களைப் படிப்பதில் எனக்கொரு தனி ஆர்வம் உண்டு. ஏனென்றால் அவை உள்ளத்திற்கு ஊக்கமும், உடலுக்குப் பாதுகாப்பும், சமூக ஒழுக்கத்திற்குத் துணையாகவும் உள்ள புத்தரின் பூங்காக்களில் மணம் பரப்பும் வாழ்க்கை மலர்கள்.
வாழ்ந்து காட்டும் பண்பும், அடக்கமும், ஆழமும் நிறைந்தவர்களானதாலும், அதை வாழ்வியலாகவே கொண்டு ஒழுகுபவர்களாகவும் உள்ள அப்பெருமக்கள், நீண்டகாலம் வாழுகிறார்கள் என்பதைவிட, நீண்ட காலம் நலத்துடன், நல்ல அறிவு அனுபவ வளத்துடன் வாழ்ந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுகிறார்கள்.
அண்மையில் நான் படித்து வரும் ஒரு நூல் – ஜப்பானிய பண்பாடு எப்படி அவர்களுக்கான வாழ்க்கை முறையாக மட்டும் அமையாது, மானிடத்திற்கேயான வெளிச்சமாக விரிவடைந்துள்ளது என்பதை விளக்கும் நூல்!
அவர்கள் யாருக்கும் கற்றுக் கொடுப்பதுடன், பெற்றுக் கொள்ளும் உரிமையை நமக்கு விசாலப் பார்வையால் அள்ளித் தருகிறார்கள் – விரிந்த வானம்போல! ஆழ்ந்தகடல் போல!
‘Wabi – Sabi’ என்ற தலைப்பில் ‘பெத் கெம்டன்’ என்ற அமெரிக்கர், ஜப்பானிய உருக் கொண்டு இதனை வரைந்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன் சிங்கப்பூர் பயணத்தில் எனக்குக்கிடைத்தது.
(முன்பே ஒரு வாழ்வியல் சிந்தனைமூலம் எழுதியுள்ளேன்)
இடையில் தொடர்ந்து எழுத இயலாத அடுக்கடுக்கான பல இடையூறுகள்.
என்றாலும் எனக்கு மருந்து எனது தோழர்களும், புத்தகங்களும்தானே!
மீண்டும் அந்த நூலை எடுத்து எனது இளைப்பாறுதலை (Relaxation) நடத்திக் கொண்டதால், யான் பெறும் இன்பம் மற்ற எமது நட்புறவுகளும், வாசகத் தோழர்களும் பெற வேண்டாமா? எனவே அந்நூல்பற்றி சில தொடர் வாழ்வியல் கட்டுரைகளை மீண்டும் தொடருகிறேன். – ‘மீண்டு’ தொடருகிறேன்!
‘Wabi – Sabi’ (‘வாபி – சாபி’) என்பது பெரிதும் ஜப்பானிய மக்களின் பண்பாடு! எதையும் ரசிக்கும் அழகியலும், அதையும் மிகவும் மென்மையாக சுவைத்தலும் கூடிய ஒரு பதற்றமில்லா, அடக்கமும், அன்பும் சிறந்த ஒரு பண்பாட்டின் அடித்தளம் என்று கூறலாம் என்கிறார் இந்நூலாசிரியர்.
இந்த ‘வாபி சாபி’ என்பது ஜப்பானியர்களைப் பொறுத்த வரையில், ஈர்க்கக்கூடிய புரிதல், தேடல் ஆகும். அதைப் ‘பற்றிக்கொள்பவர்’களுக்கு அது சிறந்து, புத்திக் கூர்மையையும், நிதானத்துடனும் எதையும் விசாரித்து, ஆராய்ந்து – அதை திறந்த மனதுடன் அணுகி முடிவுக்கு வரும் ஓர் அணுகுமுறையின் தன்மையேயாகும்.
‘‘நான் சில ஆண்டுகளாக ஜப்பானில் இருந்தும், அவர்களோடு பழகியும், அவர்களது எடுத்துக்காட்டான பண்பாட்டில் திளைத்தும் வந்தவன் ஆவேன்.
ஆங்கிலம் பேசாத அந்த ஜப்பானிய மக்களுடன் இரண்டறக் கலந்தவனாகி விட்டேன். 10 ஆயிரம் மணி நேரங்களைச் செலவழித்துள்ளேன். அந்நாடு முழுவதும் பயணம் சென்று, அந்த மக்களோடு அரிய பழக்க வழக்கங்களை நன்கு புரிந்தவன் மட்டுமல்ல; ஒன்றியவனாகவே மாறி விட்டேன்’’ என்று துவக்கத்தில் கூறும்…
‘வாபி சாபி’ என்பதை என்னால் நன்கு உணரத்தான் முடிகிறதே தவிர, அதற்குப் போதிய சொற்களைக் கொண்டு எழுத முடியாத அளவுக்குச் சொற்கள் இன்றித் தவிக்கிறேன்’’ என்கிறார்.
அது மட்டுமா? ‘‘என்னதான் பேசினாலும், எழுதினாலும் அதை வாழ்ந்து உணர்ந்து பார்த்தால் மட்டுமே அதனுடைய ‘வசந்தத்தை அனுபவிக்க முடியும்’’ என்கிறார்.
நூலாசிரியரே அப்படி ஒரு சிக்கலான முகப்புரையை ‘வாபி – சாபி’க்கு அளிக்கும்போது அதை நமது வாசகர்களுக்கு அள்ளித் தருவது எப்படி எழுத்துகளால் முடியும்?
சிலவற்றை நினைக்கலாம்.
சிலவற்றை எழுதலாம்
ஆனால் சிலவற்றை அகம் குளிர
அள்ளிப் பருகுவதன் மூலமே தான்
அனுபவித்து சுகம் – சுவை
காண முடியும் –
என்றாலும் எழுதி விளக்க முயல்கிறேன்.
(வளரும்)
