ஜெருசலேம், நவ. 9- ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை இன்னும் முடிவுக்கு வரவில்லை என்றும், அணுஆயுதம் தயாரிக்கும் முயற்சியை ஈரான் புதுப்பித்து வருவதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
1956-ஆம் ஆண்டு சினாய் போரில் உயிரிழந்த இஸ்ரேல் வீரர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் காட்ஸ், “ஈரானைப் பொறுத்தவரை நமது லட்சியப் பணி இன்னும் நிறைவடையவில்லை. இஸ்ரேல் அரசுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ஈரான் மீண்டும் அணுஆயுதம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது” என்று குற்றம் சாட்டினார்.
இருப்பினும், அணுஆயுதம் தயாரிக்கும் குற்றச்சாட்டைத் தொடர்ந்து மறுத்து வரும் ஈரான், தனது அணுசக்தித் திட்டங்கள் அனைத்தும் அமைதிப் பயன்பாட்டுக்கானவை மட்டுமே என்று வலியுறுத்தி வருகிறது.
லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்புக்கும் எச்சரிக்கை விடுத்துள்ள காட்ஸ், ஈரானுடன் சேர்ந்து இஸ்ரேல் மீது மீண்டும் தாக்குதல் நடத்த முயன்றால் ஹிஸ்புல்லா கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், காசா, லெபனான் மற்றும் சிரியாவில் உள்ள பாதுகாப்புப் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் படைகள் திரும்பப் பெறப்படாது என்றும் அவர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
இஸ்ரேலில் கடந்த அக்டோபர் 27 பொதுத்தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் கூட்டணி பெரும்பான்மையை இழந்ததைத் தொடர்ந்து, புதிய ஆட்சி அமைக்க எதிர்க்கட்சித் தலைவர் காடி அய்சன்கோட்டுக்கு அதிபர் அழைப்பு விடுத்துள்ளார். இந்த சூழலில், நெதன்யாகு தனது சுய அரசியல் தேவைகளுக்காக ராணுவத்தைப் போரில் ஈடுபடுத்தக் கூடாது என அய்சன்கோட் எச்சரித்துள்ளார்.
போலந்து நாட்டில் பயங்கர
துப்பாக்கிச் சூடு: 5 பேர் உயிரிழப்பு
வார்சா, நவ. 9- போலந்து நாட்டின் கிராகோவ் நகர மய்ய சதுக்கத்தில் 7.11.2026 அன்று அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்தனர்; 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிராகோவ் நகரின் முக்கியச் சதுக்கப் பகுதிக்கு அதிவேகமாக வந்த வாகனம் ஒன்றில் இருந்து, அங்கிருந்த பொதுமக்கள் மீது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தத் தொடங்கினார். ஸ்லாவ்கோவ்ஸ்கா வீதி அருகே பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
தகவலறிந்து உடனடியாக நிகழ்வு இடத்திற்கு விரைந்த போலந்து காவல்துறையினர், துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் மீது பதில் தாக்குதல் நடத்தி அவரை வீழ்த்தினர். இதில் காயமடைந்த குற்றவாளி காவல்துறையின் பலத்த பாதுகாப்புடன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
இத்தாக்குதல் குறித்துப் போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது, உள்துறை அமைச்சகத்திடமிருந்து அவ்வப்போது நிலவரங் களைக் கேட்டுப் பெற்று வருவதாகவும், இந்தத் தாக்குதலின் பின்னணி மற்றும் காரணங்கள் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்தார். நகரில் அவசர நிலைக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு தீவிரத் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
போலந்துக்கான அமெரிக்கத் தூதர் எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்துப் பதிவிட்டுள்ளதாவது: “வரலாற்றுப் சிறப்புமிக்க கிராகோவ் நகர மய்யத்தில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் நடத்தப்பட்டுள்ள இந்த கொலை வெறித் தாக்குதல் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் துயரமான வேளையில் போலந்து நாட்டு மக்களுக்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
