புதுடில்லி, நவ. 9- இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 20,000-க்கு மேல் கிடைத்த நன்கொடைகள், கடந்த 2025-2026 நிதியாண்டில் 75 சதவீதம் வரை சரிந்து ரூ. 130.69 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த பத்தாண்டுகளில் காங்கிரஸ் கட்சி எதிர்கொண்டுள்ள மிகக் கடுமையான நிதிச் சரிவு இதுவாகும் எனத் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் பிடிஅய் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய மக்களவைத் தேர்தல் நடைபெற்ற 2024-2025 நிதியாண்டில், காங்கிரஸ் கட்சி ரூ. 20,000-க்கும் அதிகமான நன்கொடைகள் மூலம் ரூ. 517.39 கோடியைப் பெற்றிருந்தது. அதற்கு முந்தைய ஆண்டான 2023-2024இல் இந்தத் தொகை ரூ. 281.48 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள 2025-2026 நிதியாண்டின் அறிக்கையின்படி, இந்தத் தொகை பெருமளவு சரிந்து ரூ. 130.69 கோடியாகக் குறைந்துள்ளது. கடந்த 2020-2021-க்குப் பிந்தைய காலகட்டத்தில் இதுவே மிகக் குறைந்த அளவிலான நிதியாகும்.
கடந்த 12 நிதியாண்டுகளின் தரவுகளை ஒப்பிடுகையில், இதற்கு முன்பு 2015-2016 நிதியாண்டில் இதேபோன்று சுமார் 86 சதவீதம் வரை கடுமையான சரிவு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் கட்சியின் இந்த நிதிச் சரிவுக்கு ‘புரூடன்ட் எலக்டோரல் டிரஸ்ட்’ (Prudent Electoral Trust) வழங்கும் நன்கொடையில் ஏற்பட்டுள்ள மாபெரும் குறைப்பே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.
கடந்த 2024-2025 நிதியாண்டில் இந்த அறக்கட்டளை காங்கிரஸ் கட்சிக்கு ரூ. 216.34 கோடியை நன்கொடையாக வழங்கியிருந்தது. ஆனால், 2025-2026 நிதியாண்டில் இது வெறும் ரூ. 25 கோடியாக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இது சுமார் 88 சதவீதச் சரிவாகும்.
இதைத் தவிர, ஸ்டார் சிமெண்ட் நிறுவனம் ரூ. 5 கோடியும், சஜ்ஜன் பஜன்கா ரூ. 4 கோடியும், பிரேம் குமார் பஜன்கா ரூ. 2 கோடியும் மற்ற முக்கிய நன்கொடையாளர்களாக நிதியுதவி அளித்துள்ளனர். கடந்த 12 நிதியாண்டுகளாகவே ஒவ்வொரு ஆண்டும் காங்கிரஸ் கட்சியை விட பாரதிய ஜனதா கட்சிக்குத்தான் (BJP) அதிகளவு நிதி கிடைத்து வந்துள்ளது. உதாரணமாக, 2024-2025 நிதியாண்டில் பாஜக ரூ.20,000-க்கும் அதிகமான நன்கொடைகள் மூலம் மட்டும் மொத்தம் ரூ. 6,074.02 கோடியைப் பெற்றுள்ளது. இது அதே காலகட்டத்தில் காங்கிரஸ் பெற்ற நிதியை விட சுமார் 12 மடங்கு அதிகமாகும்.
இருப்பினும், 2025-2026 நிதியாண்டிற்கான பாஜகவின் நன்கொடை அறிக்கையைத் தேர்தல் ஆணையம் இன்னும் பொதுவெளியில் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டு வாரியான புள்ளிவிவரங்களை மட்டும் பார்க்கும்போது இந்தச் சரிவு பெரியதாகத் தெரிந்தாலும், காங்கிரஸ் கட்சி கடந்த 2020-2021இல் ரூ. 74.52 கோடியும், 2021-2022இல் ரூ. 95.46 கோடியும், 2022-2023இல் ரூ. 79.92 கோடியும் மட்டுமே நன்கொடையாகப் பெற்றிருந்ததுடன் ஒப்பிடும்போது, தற்போதைய தொகை முந்தைய சில ஆண்டுகளின் சராசரியை விட அதிகமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.
கொடுப்பது போல் கொடுத்துப் பிடுங்கும் மகாராட்டிரா அரசு
வறட்சி நிவாரண நிதியை திருப்பிக் கொடுங்கள்!
விவசாயிகளை மிரட்டிய அமைச்சர்
மும்பை, நவ. 9- மகாராட்டிராவில் பொருளாதார ரீதியாக வசதியான விவசாயிகள், அரசு வழங்கிய 5 ஆயிரம் ரூபாய் வறட்சி நிவாரணத் தொகையை, தேவைப்படும் ஏனைய நபர்களுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் தாமாக முன்வந்து திரும்ப அளிக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கிரீஷ் மஹாஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மகாராட்டிராவில் முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தீபாவளியை முன்னிட்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தகுதியுள்ள விவசாயிகளுக்கு, தலா 5 ஆயிரம் ரூபாய் முன்பண நிவாரணத்தை மாநில அரசு அண்மையில் அறிவித்தது.
இதனைத் தொடர்ந்து, கடந்த 5ஆம் தேதி நிலவரப்படி 87 லட்சத்திற்கும் அதிகமான விவசாயி களுக்கு 4,372 கோடி ரூபாய்க்கும் மேல் மாநில அரசு வழங்கியுள்ளது. இந்நிலையில், ஜல்கான் மாவட்டத்தின் ஜம்னேர் பகுதியில் அமைச்சர் கிரீஷ் மஹாஜன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
“எங்கள் பகுதியைச் சேர்ந்த சில விவசாயிகள், அரசு வழங்கிய நிவாரணத் தொகை தங்களுக்குத் தேவையில்லை எனக்கூறி அதனைத் திரும்ப வழங்க முன்வந்தனர். தாங்கள் பொருளாதார ரீதியாக வசதியாகவும், வருமானத்திற்கு வேறு வழிகளைக் கொண்டிருப்பதாகவும் கூறி, அந்த நிவாரணத் தொகையைத் திரும்ப அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், மற்ற பகுதிகளிலும் பொருளாதார ரீதியாக வசதியான விவசாயிகள், தங்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆயிரம் ரூபாயை, கடுமையான சிரமங்களை எதிர்கொள்ளும் ஏழை விவசாயிகளுக்கு உதவும் வகையில் முதலமைச்சரின் நிவாரண நிதிக்குத் தாமாக முன்வந்து அளிக்க வேண்டும்,” என்று அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டார்.
